
தமிழில் நாம் செய்யக் கூடிய தவறுகளில் ஒன்று 'ஒரு', 'ஓர்' எங்கு பயன்படுத்துவது என்பதுதான்.
உயிர் எழுத்துகளில் வார்த்தைகள் தொடங்கும்போது கண்டிப்பாக 'ஓர் ' வரும்.
அ முதல் ஔ வரையிலான ஏதாவது ஓர் எழுத்தில் சொற்கள் தொடங்கும்போது இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
'ஓர் ஆடு மேய்ந்து கொண்டிருந்தது' என்ற சொற்றொடரில் 'ஆடு' என்ற பெயர்ச் சொல்லில் 'ஆ' உயிரெழுத்தில் தொடங்குகிறது அல்லவா! அப்படி வரும்போது 'ஒரு ஆடு' என்று எழுதக் கூடாது. 'ஓர் 'தான் வர வேண்டும்.
இப்படியே, ஓர் அணில், ஓர் இலை, ஓர் ஈ, ஓர் ஊர், ஓர் எறும்பு, ஓர் ஓணான், ஓர் ஔடதம் (மருந்து) என்று உயிர் எழுத்துக்கு முன்பாக 'ஓர்' வரவேண்டும்.
உயிர் மெய் எழுத்துகளுக்கு முன்பாக 'ஓர்' பயன்படுத்தக் கூடாது. 'ஒரு வெள்ளாடு' என்பது சரி. 'ஓர் வெள்ளாடு' என்று எழுதுவது தவறு. 'ஓர் நரி' என்பதும் தவறு. ஒரு நரி என்றுதான் எழுத வேண்டும்.
சுருக்கமாக அ முதல் ஔ வரையிலான உயிர் எழுத்துகளில் வார்த்தைகள் தொடங்கினால் கண்ணை மூடிக்கொண்டு 'ஓர் ' போடலாம். மற்ற எழுத்துகளில் தொடங்கும் போது 'ஒரு' தான் போட வேண்டும்.

