sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

ஓங்கிரும் பெண்ணை

/

ஓங்கிரும் பெண்ணை

ஓங்கிரும் பெண்ணை

ஓங்கிரும் பெண்ணை


PUBLISHED ON : ஜன 02, 2017

Google News

PUBLISHED ON : ஜன 02, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனைமரத்துக்கு 'பெண்ணை' என்று பெயர். ஏடகம், கரும்புறம், தாலம், தாளி, தாழ், தாலம், புல், புற்பதி, புற்றாளி, போந்து, போந்தை ஆகிய பெயர்களும் பனைக்கு உண்டு. பனையின் ஓலை, இதழ், கூந்தல், தோடு, மடல், மாழை என்று அழைக்கப்படுகிறது.

பனை புல் இனத்தைச் சேர்ந்தது. இதனாலேயே 'புற்பதி, புற்றாளி' என்னும் பெயர்களைப் பெற்றது.

சேர அரசர்களின் சின்னம், பனை (போந்தை). ஆண் பனையின் பூக்களால் செய்த மாலையைச் சேரர்கள் அணிந்தனர்.

'போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்'என்பது கபிலர் பாடல்.

பனையின் பெரிய அடிப்பக்கத்தே காந்தள் மலர் பூத்திருக்கும் என்கிறார்.

'ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்

ஆதி யருமன் மூதூ ரன்ன'

என்கிறது, குறுந்தொகை. உயர்ந்த கரிய பெண்ணை மரத்தின் நுங்கை பெறுவதற்கு இடமாகிய, ஆதி அருமனுக்குரிய ஊர் என்பது இதன் பொருள்.

'மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்

துணையொன்று பிரியினுந் துஞ்சா காணென'

என்பது அகநானூற்று பாடல் வரிகள். (வீட்டருகே பனைமரத்தில் வசிக்கும் அன்றில் பறவை, தன் துணையைப் பிரிந்து வாழாது).

இப்படி சங்க இலக்கியங்களில், பனை மரம் குறித்த பாடல்கள் ஏராளமாக உள்ளன.

'உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே'

என்று கூறும் நீதி வெண்பா, 'நீர் பாய்ச்சாமலே பலன் தரும் பனையைப் போல், மேன் மக்கள் யாதொரு உதவியையும் பெறாமலேயே, உதவி செய்வர் என்று குறிப்பிடுகிறது.

மனிதர்களில் ஆண், பெண் வேறுபாடு இருப்பது போல், பனையிலும் ஆண், பெண் வேறுபாடு உண்டு.

ஆண் பனை, பூம்பனை, காயாப்பனை, அலகுப் பனை, கதிர்ப்பனை, ஏற்றை என அழைக்கப்படுகிறது.

பனை, மாந்தோப்புகளின் ஓரங்களில் வளர்க்கப்பட்டதை,

'இன மாவின், இணர்ப் பெண்ணை'

(பட்டினப்பாலை) என்று குறிப்பிடுகிறது.

கோள் பெண்ணை, இணர்ப் பெண்ணை, குலைப் பெண்ணை, தாறிடு பெண்ணை என்று பனங்குலைகள் அழைக்கப்பட்டன. கோள், இணர், படு, தாறு எல்லாமே குலைதான்.

எத்தனையோ நன்மைகளை வாரி வழங்கும் பனை மரம், ஒருவர் தங்குவதற்கும் நிழல்தராது என்பதும் உண்மையே.

'தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற வோங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க் கிருக்க நிழலாகாதே' (நறுந்தொகை).

சுவை பொருந்திய, பெரிய பனங்கனியிலுள்ள விதையானது முளைத்து வானமளவு வளர்ந்தாலும், ஒருவரேனும் தங்கியிருக்க நிழலைத் தராது. அதுபோல் உதவும் மனப்பான்மையற்றவர்களின் கையில் செல்வம் இருந்தாலும் உதவ மாட்டார்கள்.

பனை மரத்தை மையமாகக் கொண்டு, மனித குணங்கள், இயல்புகள் வரையறை செய்யப்பட்டன.

பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு உதவுகின்றன. பனை ஓலைகள் கூரை வேய்வதற்கும், மரங்கள் சூளைக்கும், வீட்டின் தூண்களாகவும் பயன்படுகின்றன. பழங்காலத்தில் ஓலைச்சுவடிகள், பனை ஓலையில்தான் எழுதப்பட்டன. அதனால் இதை தமிழ் வளர்த்த மரம் என்றும் அழைக்கலாம். பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு, கிழங்கு, பதநீர், வெல்லம் யாவும் சுவை மிக்கவையே.

பனைமரத்தின் மட்டைகள், அடுப்பெரிக்க பயன்பட்டன. ஓலையில் சிறுவர்கள் காற்றாடி செய்து விளையாடினர். பனை விசிறிகள் இயற்கைக் காற்றை வாரி வழங்குகின்றன. கூடைகள், பாய்கள், விளையாட்டுப் பொருட்கள், பனை ஓலையால் செய்யப்படுகின்றன.

பனை மரத்தின் எந்தப் பகுதியும், வீணாவதில்லை. அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன்படக்கூடியவை. தமிழ் நாட்டின் மாநில மரம் பனை.

ஆங்கில பெயர் பால்மிரா (Palmyra Palm) பாஃம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

தாவரவியல் பெயர் பொராசுஸ் (borassus).

பனை, ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. சுமார் 30 அடி உயரம் வரை வளரக் கூடியது. வறண்ட நிலங்களில் வளரக் கூடியது.

பனங்காட்டூர், பனையூர் என, பனைமரத்தை நினைவுபடுத்தும் வகையில், ஊர்களுக்கு பெயரும் உண்டு.

பனைமரப் பழமொழிகள்

* பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

* பனை மரத்துக்குக் கீழே நின்று பால் குடித்தது போல்

* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

* பட்டணத்து நரியை பனங்காட்டு நரி ஏய்த்துவிடும்

* பனை மட்டையில் மழை பெய்ததுபோல.






      Dinamalar
      Follow us