கார் என்றால் என்ன நினைவுக்கு வருகிறது? சாலையில் செல்லும் மகிழுந்துகள் (Car) நினைவுக்கு வரும். இது வண்டியைக் குறிக்கும் அந்தக் கார் இல்லை. தமிழில் கார் என்ற சொல் மிகவும் அழகானது.
கார்மேகம், கார்முகில், காரிருள், கார்குழல் என்று சொல்கிறோம். இதில் வரும் கார் என்பது, மகிழுந்தை குறிப்பவை அல்ல. கருமை நிறத்தைக் குறிப்பது. கருமை + மேகம்தான் கார்மேகம். பண்புத்தொகைப் புணர்ச்சியில் கருமை, கார் என்று ஆகிவிடும். மழைபெய்வதற்கு முன்னுள்ள மேகம் கறுத்துத் திரண்டு இருப்பதால், அது கார்மேகம். கார்முகில். கரிய நிறத்தவன் என்பதால், கண்ணனுக்கு, கார்வண்ணன் என்று பெயர்.
தமிழர்கள் ஓராண்டை ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரித்திருக்கிறார்கள். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன அவை. பெரும்பொழுது என்றால், பருவம் என்று பொருள். இதில் கார் என்பது, ஆவணி புரட்டாசி ஆகிய மாதங்களைக் குறிக்கும். மழைபொழிவதற்கான காலம். மழைக் காலம்தான் கார்காலம்.
உடல் தோல்நோய்களில், வெண்மைபடுவது, கறுப்பது என்று இரு வகைகள் உள்ளன. இவற்றில் உடல் தோல் கறுக்கும் நோயைக் கார் என்பர்.
வெள்ளாட்டுக்கும், கருங்குரங்குக்கும் கார் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது தற்போது வழக்கில் இல்லை. எலியின் முடியும் கார்தான். இதுவும் தற்போது வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. பசுமை, அழகு என்ற பொருள்களிலும், கார் என்னும் சொல் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒருவருக்குத் தோன்றும் அறிவு மயக்கம் கார் எனப்படும். அப்பொருளில் திருக்குறள் ஒன்றும் வருகிறது.
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல். என்பது அக்குறள்.
- மகுடேசுவரன்

