தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஓர் உலகம்; விதவிதமான காடுகள்

ஓர் உலகம்; விதவிதமான காடுகள்

ஓர் உலகம்; விதவிதமான காடுகள்


PUBLISHED ON : செப் 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு, காடுகள்தான். இக்காடுகளே, மனிதர்களும் பிற நில உயிரினங்களும் வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை, ஒளிச்சேர்க்கை மூலம் வெளியிடுகிறது. நாம் வெளியிடும் கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொள்வதும் இவைதான்.

நம் பூமிப்பரப்பில் ஏறத்தாழ 3 ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = ஒரு லட்சம் கோடி) மரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. காடுகள் அனைத்து வகையான காலநிலைகளிலும், சூழல்களிலும் இருக்கின்றன. அவை இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றின் தன்மைகள் மாறுபடுகின்றன.

பூமத்திய ரேகையில் இருந்து அமைந்துள்ள தூரத்தைப் பொறுத்தும், பருவநிலையின் அடிப்படையிலும் காடுகள் மூன்று வகைப்படும். அவை:

1. வெப்பமண்டலக் காடுகள் (Tropical forests)

2. மிதவெப்பநிலைக் காடுகள் (Temperate forests)

3. போரியல் அல்லது தைகா காடுகள் (Boreal or Taiga forests)

இவற்றுள் சில உபவகைகளும் உள்ளன.

வெப்பமண்டலக் காடுகள்

தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பூமத்திய ரேகையைச் சுற்றி வெப்பமண்டல மழைக்காடுகள் வளர்கின்றன. உலகிலேயே அதிகமான உயிரிகளைக் கொண்டுள்ள காடுகள் இவைதான். உலகிலுள்ள உயிரினங்களில் ஏறத்தாழ பாதிக்கும் மேல் இக்காடுகளில் காணப்படுகின்றன.

இக்காடுகளில், ஆண்டுக்குச் சராசரியாக 200 செ.மீ. மழை பொழிகிறது. அகன்ற இலைகள் கொண்ட மரங்கள், பாசிகள், ஃபெர்ன்கள், பல வகையான பூச்செடிகள் என, அனைத்தும் மழைக்காடுகளில் செழித்து வளர்கின்றன. உயரமான மரங்களிலுள்ள இலைகள் அடர்த்தியானவை. எனவே, குறைவான சூரிய ஒளியே நிலத்தில் விழும். இங்கு, குரங்குகள், பாம்புகள், தவளைகள், பல்லிகள் மற்றும் பல பாலூட்டி உயிரினங்கள் வாழ்கின்றன.

இந்த வகைக் காடுகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

* வெப்பமண்டல மழைக்காடுகள் (Tropical Moist Forests)

எப்போதுமே மழைப்பொழிவு இருக்கும். வறட்சிக்காலமே இங்கு ஏற்படாது அமேசான் காடுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.

* வெப்பமண்டல வறண்ட காடுகள் (Tropical Dry Forests)

அவ்வப்போது இங்கு மழை இல்லாமல், வறண்டு காணப்படும்.

இதனால் மரங்களில் இலைகள் உதிர்வதையும் காணலாம்

மிதவெப்பநிலைக் காடுகள்

மிதவெப்பநிலைக் காடுகள் வட அமெரிக்கா, வடகிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் காணப்படுகின்றன. இவ்வகைக் காடுகளில், குளிர்காலம் உட்பட நான்கு வகைப் பருவநிலைகளும் ஏற்படுகின்றன.

இலையுதிர் மரங்கள், இக்காடுகளில் மிக அதிகமாக இருக்கின்றன. ஓக், மேப்பிள், எல்ம், பிர்ச், வில்லோ மற்றும் ஹிக்கரி மரங்கள் இங்குள்ள பொதுவான மரங்களாகும்.

காட்டில் வாழும் பொதுவான விலங்குகளாக அணில், முயல், பல வகைப் பறவைகள், மான், ஓநாய், நரி மற்றும் கரடி ஆகியவற்றைச் சொல்லலாம். அவை பருவநிலைகளுக்குத் தக்கவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன.

மிதவெப்பநிலைக் காடுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்

* மிதவெப்ப ஊசியிலைக் காடுகள் (Temperate Needleleaf forests)

இக்காடுகள் பெரும்பாலும் வடக்கு அரைக்கோளத்தில் மேல் அட்சரேகை பகுதிகளிலும், சில மிதவெப்பநிலை கொண்ட உயரமான பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இக்காடுகளில் பெரும்பாலும் இருப்பவை ஊசியிலை மரங்கள்

* மிதவெப்ப அகலிலை மற்றும் கலப்பிலைக் காடுகள் (Temperate Broadleaf and Mixed Forests)

அமெரிக்காவின் கலப்பு இலையுதிர் காடுகள், சீனா மற்றும் ஜப்பானில் உள்ள காடுகள், ஜப்பான், சிலி மற்றும் டாஸ்மேனியாவில் காணப்படும் பசுமையான மழைக்காடுகள், ஆஸ்திரேலியா, மத்திய சிலி மற்றும் கலிஃபோர்னியாவில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.

போரியல் காடுகள்

சப் ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் காடுகள், தைகா காடுகள் ஆகும். அதாவது, சைபீரியா, ஸ்காண்டினேவியா, அலாஸ்கா மற்றும் கனடா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. இங்குள்ள மரங்கள் ஊசியிலை மரங்கள் மற்றும் பசுமை மாறா மரங்களாகும்.

இங்கு குறைவான காலம் மிதமான கோடைக்காலமும், அநேகமாக குளிர்காலமும் நிலவும். பைன், ஃபிர் போன்ற குளிரைத் தாங்கக்கூடிய ஊசி இலைகளைக் கொண்ட பசுமையான மரங்கள் இங்கு வளர்கின்றன.

அடர்த்தியான தோலைக் கொண்ட கரடி, ஓநாய், வௌவால்கள் மற்றும் சிறிய பறவைகளும் பாலூட்டிகளும் இங்கு வாழும் விலங்குகள் ஆகும்.

மழைக்காட்டின் படிநிலைகள்

எமர்ஜென்ட்: கானோபியைவிட உயரமாக மரங்கள் வளரும். இந்த மரம் 14 மாடிக் கட்டடத்தைவிட உயரமானது.

கானோபி: மரத்தின் உச்சிப்பகுதி. நிலத்திலிருந்து 100 அடி வரை உயரத்தில் இருக்கும். பறவைகள், குரங்குகள், தவளைகள் ஆகியவை இதில் தங்கும்.

மரக் கீழ்தட்டுச் செடிகொடிகள்: இது கானோபி மற்றும் எமர்ஜென்டுக்கு கீழே வளரக்கூடிய படிநிலை. மரங்கள் 15 அடி உயர அளவில் இருக்கும். காட்டுப் பூனைகள், வெளவால், ஆந்தை, பாம்பு, பல்லி தங்கும்.

கானகத்தின் தரைத்தளம்: அடிப்பாகம். இலைகள், சேறு, பூஞ்சைகள் ஆகியவை இருக்கும்.

- ஆசிஃபா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us