தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வனவளம் காப்போம்; உயிரினங்களைப் பேணுவோம்!

வனவளம் காப்போம்; உயிரினங்களைப் பேணுவோம்!

வனவளம் காப்போம்; உயிரினங்களைப் பேணுவோம்!


PUBLISHED ON : செப் 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமேசான் காடுகளில் பற்றியெறியும் அதிபயங்கரத் தீ, இன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல தலைவர்களும் அமைப்புகளும் அச்சமும் கவலையும் தெரிவித்து வருகின்றனர். உண்மையில், அமேசானில் என்ன நடக்கிறது? எப்படி இதைப் புரிந்துகொள்ள வேண்டும்?

எங்கே இருக்கிறது?

தென் அமெரிக்காவில் உள்ளது. இங்கே உள்ள காட்டுக்கு, மழைக்காடுகள் என்று பெயர்.

எவ்வளவு பெரியது?

70 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்டது. அதில், 55 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் மழைக்காடுகள்.

9 நாடுகளை உள்ளடக்கியது. பிரேசில் நாட்டில் 60 சதவீதமும், பெரு நாட்டில் 13 சதவீதமும், கொலம்பியாவில் 10 சதவீதமும் அமேசான் மழைக்காடுகள் விரிந்துள்ளன. மிச்சமுள்ள பகுதிகள், வெனிசுலா, ஈக்வடார், பொலிவியா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளில் உள்ளன.

இந்தியாவைப் போல் இரண்டு மடங்கு பெரியது அமேசான் மழைக்காடுகள்.

ஏன் அமேசானில் காட்டுத் தீ?

ஒவ்வோராண்டும், ஜூலை முதல் அக்டோபர் வரை, அமேசானில் காட்டுத் தீ பற்றிக்கொள்ளும். இம்முறை இந்தத் தீ மிக அதிகமாக இருக்கிறது. ஆகஸ்ட் 23 நிலவரப்படி, அமேசான் மழைக்காட்டில், 29,194 இடங்களில் தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது. ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள், 80,000 இடங்களில் தீ மளமளவென பற்றிக்கொண்டது. இந்த எண்ணிக்கை, 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 77 சதவீதம் அதிகம்.

காட்டுத் தீ எப்படி ஏற்பட்டது?

2019இல் பிரேசில் நாட்டில், ஜெய்ர் போல்சனாரோ என்பவர் அதிபராக பதிவியேற்றார். அவர், அந்த நாட்டின் பொருளாதார வளத்தை உயர்த்துவேன் என்று உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்தார். நாட்டின் வளத்தைப் பெருக்க, காட்டுப் பகுதிகளை திருத்தி அமைத்து, விவசாய நிலங்களாக மாற்றுவதற்கு போல்சனாரோ முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

இதனால் உற்சாகம் அடைந்த விவசாயிகள், அந்த நாட்டின் மழைக்காடுகள் வழியே செல்லும் பி.ஆர்.-163 என்ற நெடுஞ்சாலையை ஒட்டி, 'நெருப்பு நாள்' (Fire Day) கொண்டாடியதாக, பிரேசில் நாட்டு இதழான 'பிரேசில் டி பாக்டோ' தெரிவிக்கிறது. மேலும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க, விவசாயிகள் மழைக்காடுகளுக்கு நெருப்பு வைத்ததாக, இன்னொரு உள்ளூர் நாளிதழான, 'போல்ஹோ டொ புரோகிரெஸ்ஸோ' எழுதியுள்ளது.

கவனத்தைப் பெற்றது எப்படி?

பிரேசிலைச் சேர்ந்த விண்வெளி ஆய்வுக்கான தேசிய மையம் (National Institute for Space Research -- INPE), ஜூலையிலும் ஆகஸ்டிலும் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தகவல்களின் மூலம், இத்தகைய பயங்கரமான காட்டுத் தீ பரவியுள்ள விவரம் உலகத்தின் கவனத்துக்கு வந்தது. இதற்கு முன்பும் ஐ.என்.பி.இ. தகவல்களை வெளியிடும். ஆனால், அது அவ்வளவு கவனத்தைப் பெறாது.

இந்நிலையில், ஆகஸ்ட் 20, 2019 அன்று இன்னொரு விஷயம் நடைபெற்றது. பிரேசிலின் நகரங்களில் ஒன்றான சா பாலோவின் தலைமேல், மதியம் 2 மணி அளவில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது.

இந்த நகரம், அமேசான் மழைக்காடுகளில் இருந்து சுமார் 2,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புகைமூட்டம் அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தை நாசா வெளியிட, உலகம், அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள பயங்கரத் தீயின் வீரியத்தைப் புரிந்துகொண்டது.

எவ்வளவு வெப்பம்?

நாசாவின் செயற்கைக்கோள் மூலம் கிழக்கு பொலிவியா, வடக்கு பிரேசில் ஆகிய பகுதிகளில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அங்கே 104 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

நம்ம ஊரில், கத்திரி வெயிலில் நாம் அதிகபட்சமாக 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பத்தில் திண்டாடுகிறோம். 104 டிகிரி செல்ஷியஸ் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

என்னென்ன பாதிப்புகள்?

உலகின் பல முக்கியமான உயிரினங்களும் இயற்கை வளங்களும் அமேசான் மழைக்காட்டில்தான் வாழ்கின்றன. பல பழங்குடியின மக்களுக்கான தாயகமும் இதுதான். இதில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ உலகையே கலங்கச் செய்துள்ளது.

இந்த இதழ் முழுவதும், வனத்தில் வளங்கள் என்றால் என்ன? இதில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதையெல்லாம் அடுத்தடுத்த பக்கங்களில் படிக்கலாம். இந்தியாவில் காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உலகின் ஆரோக்கியத்துக்கும் வனவளத்துக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. அமேசான் காட்டுத் தீ, வனவளத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள் என்று நம்மை வற்புறுத்துகிறது. புரிந்துகொள்வோமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us