PUBLISHED ON : அக் 10, 2016

கல்லூரியில் இளங்கலை படிப்பு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் அன்று வெளியாகின. அந்த மாணவர் எதிர்பாராத விதமாக ஆங்கிலப் பாடத்தில் தோல்வி அடைகிறார்! இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர்தான் பின்னாளில் இந்திய ஆங்கில இலக்கியத்தை உலக அளவில் பிரபலப்படுத்தினார். அவர் வேறு யாருமல்ல; புகழ் பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியர் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயண் என்கிற ஆர்.கே. நாராயண்.
சென்னை, புரசைவாக்கத்தில் பிறந்த நாராயணின் அப்பா வி.ஆர்.கிருஷ்ணசாமி பள்ளி ஆசிரியர். அவருக்கு அடிக்கடி வேலை காரணமாக ஊர் மாற வேண்டி இருந்ததால், நாராயண் அவரது பாட்டியோடு தங்கிப் படித்தார். பிறகு அவருடைய அப்பா வேலை பார்த்து வந்த மைசூர் பள்ளியில் சேர்ந்து படித்தார். மைசூர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று பட்டதாரி ஆசிரியர் ஆனார். அந்த வேலை சலித்துப்போகவே, பேனாவுடன் அமர்ந்தவரின் கற்பனையில் உருவானதுதான் 'மால்குடி டேஸ்' (Malgudi Days) சிறுகதைகளின் தொகுப்பு. இவருடைய 'மால்குடி டேஸ்' கதைகள் தொலைக்காட்சி தொடராகவும் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
இவரது படைப்புகள் எளிய நடையும் நகைச்சுவை உணர்வும் கொண்டவை. இவரது கதாபாத்திரங்கள் மால்குடி என்னும் கற்பனை ஊரைப் பின்னணியாகக் கொண்டது என்றாலும் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அவரின் முதல் கதை வேர்க்கடலை சாப்பிட பணம் இல்லாமல் அலையும் சிறுவனைப் பற்றியது. அந்தக் கதைக்கு அப்போது அவர் பெற்ற சன்மானம் 10 ரூபாய்.
வீணை வாசிப்பில் ஆர்வம் கொண்ட நாராயண், மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதியிருக்கிறார். அவரின் அமெரிக்க அனுபவங்களை 'My Dateless Diary' என்றும் நினைவலைகளை 'My Days' என்றும் பதிவு செய்துள்ளார்.
அரை நூற்றாண்டு கடந்து எழுத்தில் பயணம் செய்த நாராயண், நம்மைவிட்டு மறைந்தாலும் எழுத்துக்கள் மூலம் எப்போதும் நம்முடன் இருப்பார் என்பதுதான் உண்மை!
* இவருடைய இளைய சகோதரர் பிரபல கார்ட்டூனிஸ்ட். ஆர்.கே. லக்ஷ்மண்.
* கடைசியாக தன் பாட்டி தனது சிறுவயதில் சொன்ன கதைகளைத் தொகுத்து 'The Grandma tales' என்ற தொகுப்பை வெளியிட்டார்.
* இந்திய அரசு, மைசூர் - யஷ்வந்த்சூர் விரைவுத் தொடர்வண்டிக்கு 'மால்குடி எக்ஸ்பிரஸ்' என்று பெயரிட்டு, இவரைச் சிறப்பித்துள்ளது. இந்தியாவில் கற்பனை ஊரின் பெயர் கொண்ட ஒரே தொடர்வண்டி இது மட்டுமே!