PUBLISHED ON : அக் 01, 2018

மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தபோது, இந்தியர்களின் உரிமைக்காகப் போராடினார். ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து 22 கி.மீ. தொலைவில், 'டால்ஸ்டாய் பண்ணை'யை நிறுவினார் காந்தி. 1910 மே 20ஆம் தேதி இப்பண்ணையைத் தொடங்கினார். அப்போதைய கல்விமுறையில் காந்திக்கு நம்பிக்கையில்லை. வாழ்வியலோடு தொடர்புடைய கல்வியை அப்பகுதி சிறுவர்களுக்குக் கற்பிக்கும் பணியை டால்ஸ்டாய் பண்ணையில் மேற்கொண்டார்.
அப்பண்ணை தொடர்பாக, காந்தியின் சுயசரிதையான 'சத்திய சோதனை'யிலிருந்து ஒரு பகுதியின் சுருக்கம்...
'ஜாதி, மத, இன வேறுபாடு இல்லாமல், அவரவர் பணிகளை அவரவரே மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பண்ணையின் சிறப்பு. மேலும் பண்ணைக்கு, வெளியிலிருந்து உபாத்தியாயர்களை (ஆசிரியர்களை) இறக்குமதி செய்யவேண்டியது அவசியம் என்றும் நான் கருதவில்லை. அப்பொழுது நடைமுறையிலிருந்த கல்வி முறையிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அனுபவத்தினாலும், சோதனைகளினாலும், உண்மையானதொரு கல்வி முறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது.
சிறுவர்களில் ஒவ்வொருவருக்கும் பயனுள்ள ஏதாவது ஒரு கைத்தொழிலைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது என் நோக்கம். ஸ்ரீ கால்லென்பாக் செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக்கொண்டு வந்தார். இந்த வித்தையை நானும் கற்றுக்கொண்டு, அதைக் கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தேன். ஸ்ரீ கால்லென்பாக்குக்குத் தச்சுவேலையிலும் கொஞ்சம் அனுபவம் உண்டு. அத் தொழிலறிந்த மற்றொருவரும் பண்ணையில் இருந்தார். ஆகவே, தச்சுத் தொழில் கற்றுக்கொடுக்கவும் ஒரு சிறு வகுப்பு ஆரம்பித்தோம்.
சமையல் வேலையோ, அநேகமாக எல்லாச் சிறுவர்களுக்குமே தெரியும். தமிழும் உருதும் சொல்லிக் கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டேன். எனக்குத் தெரிந்த சொற்பமான தமிழ், என் கப்பல் பிரயாண காலத்திலும், சிறையிலும் கற்றுக் கொண்டதாகும். போப் எழுதிய சிறந்த தமிழ்ப் பாடப் புத்தகத்தைத் தவிர வேறொன்றையும் நான் படித்ததில்லை.
தமிழ்ச் சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். ஆகையால், அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துகள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு நான் தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது.
தமிழில் பேசுவதில் என்னை எப்பொழுதும் தாங்கள் தோற்கடித்துவிட முடியும் என்பதை என் மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் என்னைப் பார்க்க வந்தபோது, அம்மாணவர்கள் என் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர்.
நான் பொய்யனாக இருந்து கொண்டு, உண்மை பேசும்படி மாணவர்களுக்குப் போதிப்பது என்பது வீண் வேலை. தாம் கோழையாக இருக்கும் ஓர் உபாத்தியாயர், தம்மிடம் படிக்கும் மாணவர்களை வீரர்களாக்கிவிடவே முடியாது. புலனடக்கம் என்பதே தெரியாத ஓர் ஆசிரியர், புலனடக்கத்தை மாணவர்களுக்குப் போதித்து விடவும் முடியாது. ஆகையால், என்னுடன் இருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் நானே எப்பொழுதும் உதாரண பாடமாக இருக்கவேண்டும் என்பதைக் கண்டேன். இவ்விதம் அவர்கள் என் உபாத்தியாயர்களாயினர். அவர்களுக்காகவேனும் நான் நல்லவனாக இருந்து நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோது, எனக்கு நானே அதிகமாக விதித்துக் கொண்ட கட்டுத்திட்டங்களும் புலனடக்கங்களும், பெரும்பாலும் என் பாதுகாப்பிலிருந்த குழந்தைகளுக்காகவே என்றும் சொல்லலாம்.
காந்தியை வரைந்த ஓவியர்
மகாத்மா காந்தி மீது எல்லோரையும் போல், ஓவியர்களுக்கும் தனி பிரேமை உண்டு. அவரை விதம் விதமாக வரைந்து தங்கள் எண்ணங்களுக்கு உருவம் கொடுத்துள்ளார்கள். அதில் முக்கியமானவர் பெலிக்ஸ் டொபோல்ஸ்கி (Feliks Topolski) என்ற போலந்து நாட்டு ஓவியர். இவர், மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் வெள்ளிவிழா கொண்டாட்டங்களை ஓவியங்களாகத் தீட்ட, இங்கிலாந்து வந்தவர். பின்னர், அந்நாடு காணும் போர்க்களங்களை ஓவியங்களாகத் தீட்டப் பணிக்கப்பட்டார்.
அப்படி இந்தியா வந்தவர், மகாத்மா மீது உள்ள அபிமானத்தால், அவரது பல்வேறு தருணங்களைத் தமது சொந்தப் பாணியில் கோட்டோவியங்களாக வரைந்துள்ளார். மேலட்டையில் உள்ளது அவர் வரைந்த ஓவியங்களுள் ஒன்று; அதில் மகாத்மா காந்தியே கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார்.
