PUBLISHED ON : அக் 01, 2018

இந்தியாவில், கல்வி என்பது என்னவென்றே தெரியாத, பள்ளிக்கூடத்தையே பார்த்திராத, கணிசமான மக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்குப் பிரதிபலன் பாராமல் அறிவுபுகட்டும் ஆசான்தான் ஆதித்யா குமார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஆதித்யாவின் சைக்கிள் சக்கரங்கள், ஏழைகளின் திசையை நோக்கியே நகர்கின்றன. 23 ஆண்டுகள் இடையறாத பணியால் பெரும் மாற்றங்களை நிகழ்த்தி வருபவர்.
ஆதித்யா குமார் கூறியதிலிருந்து...
“ஃபரூகாபாத் மாவட்டம், சலீம்பூரில் பிறந்து வளர்ந்தேன். ஏழைத் தொழிலாளியின் மகனாக, ஏராளமான கஷ்டநஷ்டங்களை அனுபவித்தேன். எனது பதின் பருவத்தில் (டீன் ஏஜ்), பள்ளி செல்ல, வேண்டும் என்றேன்; அதெல்லாம் சரிப்படாது, எனக்கு உதவியாக என் வேலையைச் செய்' என்று அப்பா கூறிவிட்டார். இதனால், கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன்.
'லக்னோவில், தெருவில் வசித்த நான், எதிர்பாராதவிதமாக ஒரு பேராசிரியரைச் சந்தித்தேன். என் ஆர்வத்தை அறிந்த அவர், நான் கல்வி கற்க உதவினார். கான்பூரில் பி.எஸ்சி. படிப்பை முடித்ததும், வீட்டுக்குச் செல்லாமல், சாலையோரத்துக்குச் சென்று தங்கிவிட்டேன்.
கல்விதான், ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். நான் கற்பதற்கு எப்படி உதவி கிடைத்ததோ, அதைப்போலவே, இயலாதவர்களுக்கு நானும் உதவுவது என்று முடிவு செய்தேன். ஏழைக் குழந்தைகளுக்கு எழுத்தறிவு கற்பிப்பதை லட்சியமாகக் கொண்டேன்” என்கிறார் ஆதித்யா குமார்.
இவர், 1995லிருந்து தனது சைக்கிளில் கரும்பலகை, சாக்பீஸ், புத்தகங்களை எடுத்துக்கொண்டு நாடு முழுவதும் சுற்றி வருகிறார். இதுவரை 2 லட்சம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளார். கணிதத்துக்கும், ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் அளித்து பாடங்களை நடத்தி வருகிறார் ஆதித்யா.
வெட்டவெளியிலேயே எந்த முன்தயாரிப்பும் இல்லாமல், ஒரு மரத்தின் கீழ் சிறுவர்களை ஒன்றுதிரட்டி பாடங்களை எடுக்கிறார். தினமும் 200 மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அங்கேயே தங்கி, சிறுவர்கள் அடிப்படைக் கல்வியை கற்றுக்கொள்ளும் வரை பணி செய்கிறார்.
பின்னர், தனது வகுப்பறை சாமான்களைக் கட்டிக்கொண்டு, வேறு ஒரு பகுதியை நோக்கிச் சென்று விடுகிறார். அவருக்கு ஓய்வென்பதும் இல்லை; முகவரியும் கிடையாது.
'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அவரை கௌரவிக்க விரும்பியபோது, அவரது நண்பரின் முகவரிக்குத்தான், சாதனைச் சான்றிதழை அனுப்பி வைத்தது. எதையும் தன்னிடம் வைத்துக்கொள்ளாதவருக்கு, இந்த உலகமே சொந்தம்தானே!
