தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/என் கிளியைக் கவனித்துக் கொள்ளுங்கள்!

என் கிளியைக் கவனித்துக் கொள்ளுங்கள்!

என் கிளியைக் கவனித்துக் கொள்ளுங்கள்!


PUBLISHED ON : அக் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிதாக ஓர் ஊருக்குச் சென்று திரும்புகிறீர்கள்; அந்த ஊரைப் பற்றி இன்னொரு நண்பருக்கு விளக்குகிறீர்கள். அப்போது, உங்களுடைய விவரிப்பில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்?

சாலைகள், கட்டடங்கள், பூங்காக்கள், கடைகள், உணவு, மொழி... இப்படிச் சில விஷயங்களைச் சொல்லித்தான் நாம் ஊர்களை, நாடுகளை விவரிக்கிறோம். ஏனெனில், அங்கு சென்றதும் சட்டென்று நம் கண்களில் தெரிபவை இந்த அம்சங்கள்தான்.

ஆனால், பழந்தமிழ்ப் பாடல்களில் வரும் ஊர் விவரிப்புகள் வேறுவிதமாக இருக்கும். அங்கு பறவைகள், மிருகங்கள், வயல்கள், அவற்றில் விளையும் பயிர்கள், மலர்கள், மீன்கள், சோலைகள், நதிகள் போன்றவற்றை அதிகம் காணலாம். இவற்றை வாசிக்கும்போது, அன்றைய தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததை அறியலாம்.

பறவைகள் என்றால், வெறுமனே பெயரைச் சொல்வதோடு புலவர்கள் நிறுத்துவதில்லை. அவற்றின் அலகுகள், இறக்கைகள், கால்கள், அவை எழுப்பும் ஒலி, அவற்றின் வாழ்க்கைமுறை என, அனைத்தையும் நுணுக்கமாக வர்ணிக்கிறார்கள். அவர்கள் எந்த அளவுக்கு இயற்கையைக் கூர்ந்து கவனித்துள்ளார்கள் என்பது வியப்புக்குரியது!

எடுத்துக்காட்டாக, குறுந்தொகையில் அன்றில், அன்னம், கிளி, குயில், குருகு, கொக்கு, புறா, மயில் உள்ளிட்ட பறவைகள் இடம்பெறுகின்றன. நற்றிணையில் மின்மினிப்பூச்சியைக் காண்கிறோம். ஏராளமான பழந்தமிழ்ப் பாடல்களில் வண்டுகளைக் காணலாம்.

இந்தப் பறவைகள் சோலைகள், வயல்களில் சுற்றிவருவதும் உண்டு, வீடுகளில் செல்லப்பறவைகளாக வளர்க்கப்படுவதும் உண்டு. குறிப்பாக, பெண்கள் பறவைகளை விரும்பி வளர்த்தார்கள், அவற்றை மிகவும் நேசித்தார்கள்.

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. ராமனும் லட்சுமணனும் சீதையும் பதினான்காண்டுகள் வனத்துக்குச் செல்கிறார்கள். அவர்களோடு வரும் சுமந்திரன் நாடு திரும்புகிறார். அப்போது சீதை அவரிடம் சொல்வது:

'யானுடைப்

பொன் நிறப் பூவையும்

கிளியும் போற்றுக என்று

உன்னும் என் தங்கையர்க்(கு)

உணர்த்துவாய்.'

அயோத்தியில் சீதை பொன்னிறமான நாகணவாய்ப்புள் (பூவை) ஒன்றையும், கிளியொன்றையும் விருப்பத்துடன் வளர்த்து வந்தார். இப்போது அவர் வனத்துக்கு வந்துவிட்டதால், அந்தப் பறவைகளை யார் கவனித்துக்கொள்வார்கள் என்று அவருக்குக் கவலை. 'என் தங்கையரிடம் அந்தப் பறவைகளைக் கவனித்துக்கொள்ளச் சொல்லுங்கள்' என்கிறார் அக்கறையுடன்.

யோசித்துப்பாருங்கள், சீதையின் கணவர் ராமருக்கு அரச பதவி கிடைக்கவில்லை, அவர்கள் பல ஆண்டுகள் வனத்தில் வாழவேண்டிய சூழ்நிலை. இத்தனைக்கும் நடுவில் அவர் தன்னுடைய செல்லப்பறவைகளை எண்ணிக் கவலைப்படுகிறார் என்றால், அவற்றின் மீது அவர் எப்படிப்பட்ட அன்பைச் செலுத்தியிருக்க வேண்டும்!

பறவைகளோ விலங்குகளோ செடி, கொடிகளோ, எல்லா உயிர்களையும் நேசிப்பதுதான் அன்பின் உயர்ந்த நிலை. என்றென்றும் பின்பற்றக்கூடிய சிறந்த வாழ்க்கை நெறி இது!

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us