PUBLISHED ON : ஜூன் 20, 2016

சர்வதேச யோகா தினம் ஜூன் 21
“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். வயசானதால ஓய்வு எடுக்கப் போய்ட்டாராம். அதனால, ஆட்சிப் பொறுப்பை ஏற்க இன்னொரு ராஜா வந்தாராம்”. இதே கதைதான் நம் உடலுக்கும்! நாம் குழந்தையாக இருக்கும்போது வேலை செய்த சுரப்பிகள் 10 வயதிற்குள் தம் வேலையை முடித்துக்கொள்கின்றன. அதன் பிறகு, மற்ற சுரப்பிகளை வேலை செய்யத் தூண்ட வருகிற ராஜாதான் பிட்யூட்டரி. சுரப்பிகளின் ராஜா இதுதான்! இது ஹார்மோன் வளர்ச்சி, தைராய்டு போன்ற ஹார்மோன்களைச் சுரக்கிறது. அப்போது நம் உடல் சந்திக்கும் அதிக வளர்ச்சியைக் கட்டுக்குள் வைக்கவேண்டும்.
முன்பெல்லாம் சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடுவார்கள்; நீச்சல் அடிப்பார்கள்; குதிப்பார்கள்... கொஞ்ச நேரம்கூட சும்மா இருக்கமாட்டார்கள். அதனால், அவர்களின் ஹார்மோன் வளர்ச்சி கட்டுக்குள் இருந்தது. நவீன காலத்தில் சிறுவர்களாக இருக்கும் நமக்கு வீடு விட்டால் பள்ளி; பள்ளி விட்டால் வீடு. இப்படி நான்கு சுவர்களுக்குள் மொபைலில் கேம் விளையாடி நேரம் கடத்துகிறோம். அதனால்தான் வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியைச் சந்திக்கிறோம். சரியான வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க நமக்கு யோகா அவசியம்.
இனிமேல், ஹோம் வொர்க் எழுதினால் கை வலிக்காது. தொடர்ச்சியாகப் படித்தால் கண்களும் வலிக்காது. கை விரல்களைச் சுழற்றுதல், கண்களைக் கீழ் மேல், இடது வலது என சுழற்றும் பயிற்சிகள் மூலம் தீர்வு பெறலாம். நாம் நம் வயதுக்கு ஏற்ற ஆசனங்களைச் செய்தால் சரியான பலன்களைப் பெறலாம்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய யோகாவை, ஆகா... ஓகோ... என்று உலக நாடுகள் கொண்டாடுகின்றன.
யோகம் என்ற சமஸ்கிருதச் சொல்லிற்கு 'அலையும் மனதை நேர்வழிப்படுத்தும் செயல்' என்று பொருள். ஆசனம் என்றால் 'இருக்கை' என்பது பொருள்.
சில வருடங்களுக்கு முன்னால் பள்ளிக்கூடங்களில் கொடுக்கப்பட்ட தண்டனை இன்று 'சூப்பர் பிரைன் யோகாசனம்' என்று உலக அளவில் பிரபலமாகி இருக்கிறது. அதுதான் 'தோப்புக்கரணம்!'
ஆசனங்களை முறையாகச் செய்தால் பலன்கள் கிடைக்கும். தவறாகச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வீடியோ பார்த்தோ, புத்தகம் படித்தோ நாமாகப் பயிற்சி மேற்கொள்வதை விட, தகுந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொள்வது நல்லது.
உடலை வருத்திச் செய்கிற உடற்பயிற்சி அல்ல இது. பெரும்பாலும் உடற்பயிற்சிக் கூடம் செல்கிறவர்கள் உடலை வலிமை ஆக்குகிறார்கள். இதனால், உடல் அளவில்தான் மாற்றங்கள் நடைபெறுமே தவிர மனதளவில் மாற்றம் இருக்காது. அதனால்தான், எல்லாப் பயிற்சிகளையும்விட யோகா முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த அவசர யுகத்தில் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசவே நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும், சிறிது நேரத்தை யோகாசனம் செய்ய ஒதுக்குவோம்.
ஆசனம் செய்யத் தேவையான சூழல்
* அதிகாலை நேரம் ஏற்றது.
* நல்ல காற்றோட்டமான தூய்மையான இடம் வேண்டும்.
* இறுக்கம் இல்லாத ஆடைகள் அணியவேண்டும்.
* வெறும் வயிற்றில் செய்யவேண்டும்.
பலன்கள்:
* மனதை ஒருமுகப்படுத்தும்.
* உடல் உறுப்புகளைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
* சுவாசம் ஒழுங்காக இருக்கும்.
* கோபம், எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
* உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு உதவும்.
* புத்துணர்ச்சி கிடைக்கும்.
* ரத்த ஓட்டம் சீராகும்.
* ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்னைகள் குணமடையும்.
யோகாசனங்கள்:
* நின்ற நிலை: தாடாசனம், வீர பத்ராசனம், விருட்சாசனம், திரிகோணாசனா
* தலைகீழ் நிலை: சர்வாங்காசனம், சக்ராசனம், சிரசாசனம்
* உட்கார்ந்த நிலை: அர்த்த மச்சேந்திராசனம், வஜ்ராசனம், மார்ஜரியாசனம், கோமுகாசனம்
* குப்புறப்படுத்த நிலை: புஜங்காசனம், தனுராசனம்
* மல்லாந்த நிலை: பவன் முக்தாசனம், உத்திதபாதாசனம், கந்தராசனம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால் 'சர்வதேச யோகா தினம்' (International Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியது.
டெல்லியில் 2015ல் சர்வதேச யோகா தினம் அன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 35,985 பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதில், 84 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று இருந்தார்கள். இதை, கின்னஸ் அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
முனைவர். சமீம் நிஷா, Msc.Mphil.Phd (Yoga)
யோகா மிஷன், நுங்கம்பாக்கம்.
