PUBLISHED ON : ஏப் 30, 2018

இந்தோனேசியக் குரங்கு ஒன்று எடுத்த செல்ஃபீ, யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு, உலக அளவில் பிரபலமான ஒன்று. அமெரிக்க புகைப்படக் கலைஞர் டேவிட் ஸ்லாட்டர், 2011ஆம் ஆண்டு இந்தோனேசிய காட்டுப்பகுதிக்குச் சென்றார். அங்கு, குரங்குகளைப் புகைப்படம் எடுத்தார்.
வித்தியாசமான முயற்சியாக, குரங்குகளிடம் கேமராவைக் கொடுத்து, அதையும் புகைப்படங்களாகப் பதிவு செய்தார். அப்போது, நரூட்டோ என்ற மக்காக்யூ வகைக் குரங்கு, கேமரா பட்டன்களை கைதவறி அமுக்கியது. இதனால், குரங்கின் கையில் இருந்த கேமராவிலும், நிறைய புகைப்படங்கள் பதிவாகின. கூடுதலாக, குரங்குகள், தம்மைத் தாமே போட்டோ எடுத்துக்கொண்ட செல்ஃபீ புகைப்படங்களும் கிடைத்தன. இவை உலகப்புகழ்பெற்றன.
எனினும், குரங்குகள் எடுத்த புகைப்படங்களுக்கு, டேவிட் ஸ்லாட்டர் எப்படி உரிமை கோர முடியும் என்று சிலர் கேள்வி எழுப்பினர். வனப்பகுதிக்குள் சென்று, குரங்குகள் கையில் கேமராவைக் கொடுத்தது தன்னுடைய முயற்சியே அன்றி வேறில்லை என்று ஸ்லாட்டர் வாதிட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, மனிதர்கள்தான் காப்புரிமை கோர முடியுமே தவிர, குரங்குகள் எல்லாம் காப்புரிமை கோர முடியாது என்று, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து, விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' மேல்முறையீடு செய்தது. அங்கு பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
'குரங்கு சார்பாக பீட்டா வழக்குப் போட்டுள்ளது. ஆனால், அந்த குரங்குக்கு தாங்கள் எந்த வகையில் சொந்தம் என்பதை பீட்டா நிரூபிக்கத் தவறிவிட்டது. மேலும், காப்புரிமை விதிகளின்படி, குரங்கெல்லாம் காப்புரிமை கோர முடியாது' என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மனிதர்களின் உரிமையை நிலைநாட்டும் இந்தத் தீர்ப்பால், புகைப்பட ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.