
பதிநான்காம் நூற்றாண்டில் இருந்தே, உடையார் பரம்பரையினர் இன்றைய மைசூர் அரண்மனை பகுதியில்தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், அது அவ்வளவு பெரிய அரண்மனை அல்ல. பெரும்பகுதி மரத்தாலான அதன் பெயர், 'சௌந்தர்ய விலாஸ்'.
1793ல் திப்பு சுல்தான், அந்த மாளிகை வளாகத்தில் கோவில்கள் தவிர, மற்ற எல்லா கட்டடங்களையும் இடித்துவிட்டு, புதிய மாளிகைகளை எழுப்பும் பணிகளை ஆரம்பித்தார். இடிக்கப்பட்ட கட்டடங்களில், 'சௌந்தர்ய விலாஸும்' ஒன்று. ஆனால், புதிய கட்டடங்கள் எழவில்லை. அதற்குள் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், உடையார்கள் கையில் மீண்டும் அதிகாரம் திரும்பியது. 'அம்பா விலாஸ்' என்ற பெயரில், புதிய மாளிகையை உருவாக்கினர். அங்கு நடந்த விபத்தால், அனைவரும் மற்றொரு அரச மாளிகையான ஜெகன்மோகன் அரண்மனைக்கு குடிபெயர்ந்தனர். பழைய அரண்மனையை மீட்டெடுக்க விரும்பிய உடையார்கள், பிரிட்டிஷாரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய அனுமதியோடு, ஹென்றி இர்வின் தலைமையில் புதிய கட்டடம் வடிவமைக்கப்பட்டு, நிர்மாணிக்கப்பட்டது.
விபத்துகளால் பாதிக்காத வகையில் கட்டப்பட்ட இக்கட்டடத்தில், வலிமையான இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பிய கட்டடக் கலை நுணுக்கங்கள் பயன்படுத்தப்பட்டன. 'அம்பா விலாஸி'ன் வெளிப்பக்கத்தைச் சுற்றி, மூன்றடுக்கு கோபுரங்கள்; குவிமாடங்கள் (dome- - டூம்) மட்டும் பிங்க் கிரானைட்டால் ஆனது. இதன் மத்தியில், 145 அடி உயரத்தில் ஐந்தடுக்கு கோபுரம் ஒன்று இருக்கிறது. அதன் உச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடம் உள்ளது. அலங்கார வளைவுகள் நிறைந்த மாபெரும் தர்பார், யானைகள் சுற்றி வருவதற்கான மிகப்பெரிய வாசல்கள், பழங்காலச் சிலைகள் நிரம்பிய தனிமாடம் (Pavilion - பெவிலியன்), விதவிதமான வண்ணத் தூண்கள் அமைந்த அறைகள் என, மாளிகை பலரையும் பிரமிக்க வைக்கும். மேலும், அரச ஓவியர் ரவிவர்மா பிரத்யேகமாக வரைந்து கொடுத்த ஓவியங்களும் அரண்மனையை அலங்கரிக்கின்றன. அரண்மனையைச் சுற்றி, நீண்ட அழகிய தோட்டம் உள்ளது.
இந்தியாவில் தாஜ்மஹாலை அடுத்து, மைசூர் அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகள்தான் அதிகம். ஓராண்டுக்கு சுமார் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வரும் மைசூர் அரண்மனையின் மிகவும் ஈர்ப்பு மிகுந்த பகுதி 'அம்பா விலாஸ்'.

