sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பாலுவின் டீ திட்டம்!

/

பாலுவின் டீ திட்டம்!

பாலுவின் டீ திட்டம்!

பாலுவின் டீ திட்டம்!


PUBLISHED ON : ஜன 09, 2017

Google News

PUBLISHED ON : ஜன 09, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமயத்துல பாலு முகத்தை ரொம்ப தீவிரமா வெச்சுகிட்டு ஏதோ முகலாயப் படைகளை வீழ்த்தப் போற மராத்தி தளபதி மாதிரி ஒரு பெரிய திட்டத்தை சொல்லுவான்.

“மாலு, எதிர்காலத்துல நாம நினைக்கற நல்ல விஷயத்தையெல்லாம் செய்யணும்னா, டாக்டர் ஆகக் கூடாது. எஞ்சினீயர் ஆகக் கூடாது. ஐ.ஏ.எஸ். ஆகக் கூடாது. அரசியல் அதிகாரத்தைத்தான் நாம் கைப்பற்றணும். அதுக்கு என்ன வழின்னு இப்பவே தெரிஞ்சுடுச்சு” என்றான் பாலு.

“என்ன பாலு, சினிமால நடிக்கப் போறியா? தமிழ்நாட்டுல சினிமாவுலருந்து அஞ்சு முதலமைச்சர்கள் வந்திருக்காங்கன்னு யாராவது உன்கிட்ட சொல்லிட்டாங்களா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் ஞாநி மாமா.

“இல்லை மாமா. இப்ப முதலமைச்சர், பிரதமர் ரெண்டு பதவிக்கும் வந்திருக்கறவங்க முதல்ல என்ன செஞ்சாங்களோ அதை செய்யப் போறேன். டீ விக்கப் போறேன். பெரியவனானதும் ஒரு பெரிய டீக்கடை செயின் நடத்தப் போறேன்.” என்றான் பாலு. நானும் வாலுவும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

எங்கள் சிரிப்பு அடங்கியதும் மாமா சொன்னார்: “டீக்கடை வெக்கறது ஒரு நல்ல ஐடியாதான். நிறைய சாதாரண மக்கள்தான் டீ குடிக்க வராங்க. அவங்களோட பேசிப் பேசி அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாம். அவங்களுக்கு நிஜமான தேவை என்னன்னு புரிஞ்சுக்கலாம்.”

“முதல்ல நீ டீ போடக் கத்துக்க பாலு. உனக்கு வெந்நீர் காய்ச்சக் கூடத் தெரியாது.” என்றேன். “டீ போடக் கத்துக்க ஏதாவது டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் இருக்கா மாமா” என்றான் பாலு சீரியசாக.

“நீ ஒட்டுமொத்தமா வகைவகையான சமையல், பரிமாறும் முறை, ஓட்டல் நிர்வாகம் எல்லாம் கத்துக்கணும்னா, தனியே கேட்டரிங் கோர்ஸ் படிக்கலாம். அதுக்கு அரசாங்கமே கல்லூரி நடத்துது. டீ மட்டும் போடக் கத்துக்க, ஒரு டீக்கடையில வேலைக்கு சேர்ந்து முதல்ல சப்ளையர் வேலை பார்க்கணும்.” என்றார் மாமா.

“அதைவிட நல்ல வழி இருக்கு மாமா. பாலு தினமும் அவங்க வீட்டு கிச்சனுக்குப் போய் அவன் அம்மா கிட்ட எல்லாத்தையும் கத்துக்கலாம். கத்துகிட்டு சர்ப்ரைசா டீ போட்டு ஒரு நாள் அம்மாவுக்கே கொடுத்தா, அவங்க சந்தோஷமா அதுதான் உலகத்துலயே சிறந்த டீன்னு ஒரு கதையே எழுதுவாங்க.” என்றேன்.

“டீ போடக் கத்துக்கறதுக்கு முன்னால், டீயோட வரலாறைத் தெரிஞ்சுக்கணும். வரலாறு முக்கியம் அமைச்சர் மாலு” என்றான் பாலு. மாமாவும் வாலுவும் டீ வந்த கதையை சொன்னாங்க.

அது நிஜமாவே கதை தான். ஏன்னா எப்ப நடந்துதுன்னு யாருக்கும் தெரியாது. எந்த ஆதாரமும் இல்லை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால ஒரு பௌத்த துறவி எட்டு ஆண்டுகள் தூங்காம தவம் இருந்தாராம். தூக்கம் வர்ற மாதிரி இருக்கறப்பல்லாம் பக்கத்துல இருக்கற ஒரு செடி இலையப் பறிச்சு மென்னுகிட்டிருப்பாராம். அதுதான் தேயிலை. இந்த துறவி சீனாவில இருந்தார்னு ஒரு கதை. இந்தியால இருந்தார்னு இன்னொரு கதை. ஆடு மேய்க்கறவங்க தூங்காம இருக்கறதுக்கு பறிச்சு சாப்பிடற இலை என்னன்னு அவங்ககிட்ட கேட்டுத்தான் இதை துறவி கண்டுபிடிச்சார்ன்னு ஒரு கதை.

“மூலிகை இலையைப் பறிச்சு கசக்கி, கொதிக்க வெச்சு கஷாயம் போடற வழக்கம் ரொம்பப் பழங்காலத்துலருந்தே இருக்கு. தேயிலையும் ஒரு மூலிகைதான். அதுக்கு (camellia sinensis) கமேலியா சினென்சிஸ்ன்னு தாவரவியல் பெயர். கமேல் தாவரவியல் அறிஞர் ஒருத்தரோட பெயர். சினென்சிஸ்னா, சீனாவிலிருந்து வந்ததுன்னு லத்தீன் மொழியில அர்த்தம்.” என்றார் மாமா.

“அப்ப எப்ப இருந்து இப்ப நாம குடிக்கற டீ இருக்கு?” என்றான் பாலு.

“1839 ஜனவரி 10லருந்து பிரிட்டன்ல இருக்குன்னு ரிகார்ட் இருக்கு. அப்ப மூணு கப்பல் நிறைய இந்தியாலருந்து தேயிலை அங்கே போய் சேர்ந்திருக்கு. ஆக, இருநூறு முன்னூறு ஆண்டுகளா நாம இப்ப குடிக்கற டீ உலகத்துல இருக்கு. நாம் பெருமைப்பட இன்னொரு விஷயம் இருக்கு. உல்கத்துலயே இந்தியாதான் அதிகமா தேயிலை உற்பத்தி செய்யுது. சீனாவை தாண்டிட்டோம். ஏற்றுமதி செய்யறது வெறும் 30 சதவிகிதம்தான். மீதி 70ம் நாமே குடிக்கறோம்.” என்றார் மாமா. “எப்பிடி டீ இவ்வளவு பாப்புலராச்சு?” என்றான் பாலு.“ காபியை விட டீ போடறது சுலபம். டீத்தூளை வெந்நீர்ல கொதிக்கவெச்சு வடிகட்டினா போதும். கொஞ்சம் பால், கொஞ்சம் சர்க்கரை. அது இல்லாமகூட குடிக்கலாம். ஆனா காபிக்கு ஃபில்டர் பண்ணி டிகாக்ஷன் தயாரிச்சாதான் நல்லா இருக்கும்.”

“சரி. பாலு. இவ்வளவு தியரி போதும். பிராக்டிகலுக்கு வா. எப்ப டீ போடக் கத்துக்கப் போறே? நாம சந்திக்கும்போதெல்லாம் இனிமே நீ போடற டீதான்னு சொல்ற மாதிரி இருக்கணும்” என்றேன்.

“டீ எப்ப வேணாலும் போடலாம். இப்ப பொங்கல் வருது. பொங்கல் பண்ணக் கத்துக்க பாலு” என்றது வாலு. “அய்யோ, அதெல்லாம் ரொம்ப டஃப்.” என்றான் பாலு. “இல்லை பாலு. பொங்கலும் டீ மாதிரி சிம்பிள்தான். சரிபாதி அரிசியையும் பாசிப்பருப்பையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவெச்சா போதும். தேவையான அளவு உப்பு. அப்புறம் முந்திரிப்பருப்பு, இஞ்சி, மஞ்சள் தூள், கொத்தமல்லி எல்லாத்தையும் எண்ணெய்ல தாளிச்சு, அத்தோட கலந்து கிளறணும். பொங்கல் தயார்.” என்றார் மாமா.

“சர்க்கரைப் பொங்கலுக்கு?” என்றான் பாலு. “இது கூடவே வெல்லத்தை கொதிக்கவெச்சு கலந்தா இனிப்புப் பொங்கல்.”

“இந்த ஆண்டு இனிப்புப் பொங்கல் செய்ய வேண்டாம். வறட்சியினால, எவ்வளவு விவசாயிங்க தற்கொலை செஞ்சுகிட்டாங்க. கஷ்டமா இருக்கு. உப்புப் பொங்கல் மட்டும் செய்வோம். அதையும் முடிஞ்சவரைக்கும் இல்லாதவங்களுக்கு கொடுப்போம்.” என்றேன். திறந்த வெளியில், கோவிலில் பொங்கலிடுவதே, எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடத்தான் என்று எனக்குப் படுகிறது.

“டீ, பொங்கலைவிட ஈசியான ஒரு ரெசிப்பி சொல்லட்டுமா?” என்றது வாலு. என்ன என்றேன்.

“உப்புமா” என்றது வாலு. “வேண்டாமே” என்றான் பாலு.

வாலுபீடியா 1: வட கிழக்கு மாநிலங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், இந்திய நேரம் (Indian standard time) பின்பற்றப்படுவதில்லை. சூரியன் முன்னதாக அங்கே உதிப்பதால், இந்திய நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகக் கணக்கிடுகிறார்கள்.

வாலுபீடியா 2: மலேயாவில், ஜாவா டீ என்று சொல்லப்படும் மீசாய் குச்சின் டீ உள்ளது. மீசாய் என்றால் மீசை. குச்சின் என்றால் பூனை. தமிழகத்தில் பூனைமீசை என்று சொல்லப்படும் ஒரு செடியின் இலையிலிருந்து தயாராகும் இந்த மூலிகை டீ, நீரிழிவு நோய், சிறுநீரக நோய்களை குணப்படுத்துவதாக சித்த மருத்துவம் கருதுகிறது.






      Dinamalar
      Follow us