PUBLISHED ON : ஆக 12, 2024
தமிழில் ஆரம்ப கால உரைநடை நூல்கள் வித்தியாசமான நடையில் அமைந்திருந்தன. தமிழ்ச் சொற்களும் வடமொழிச் சொற்களும் வேறுபாடின்றி கலந்த ஒரு நடை. இதற்கு 'மணிப்ரவாளம்' என்று பெயர்.
இந்தச் செய்தியின் தலைப்பைப் பாருங்கள். 'பயப்படாதீர்கள்' என்று ஒரு சொல். முதல் வரியில் 'வித்தியாசமான' என்று ஒரு சொல். இவை இரண்டும் வடமொழியில் இருந்து வந்தவை. இப்படிக் கலந்து எழுதுவதை மணிப்ரவாளம் என்றனர்.
பாரதியார் எழுதி 'சந்திரத் தீவு' என்ற சிறுகதையில், பெண்களுக்காக வாதிடுகிறார். அதிலிருந்து ஒரு பத்தியைப் பாருங்கள்.
'மனிதன் நாகரிக ஜந்துவாதலால் (..............) மற்றைய ஜந்துக்களைப்போல் அத்தாழ்வு நிலையைப் புறக்கணித்து விடாமல், அதைச் சாசுவதமாக்கி (...............), சாஸ்த்ரம் (...........) ஏற்படுத்தி வைத்திருக்கிறான். மனித ஜாதியில் (.........) ஆணுக்குப் பெண் அடிமைப் பட்டிருப்பதுபோல் இதர ஜந்துக்களுக்குள்ளே கிடையாது. மனிதரிலே கொடுமை அதிகம். இதற்கெல்லாம் ஆதி (.............) காரணம் ஒன்றே. பலங்குறைந்த உயிரை பலம் மிகுந்த உயிர் துன்பப்படுத்தலாம் என்று விதி சகல பிராணிகளின் (..............) இடையேயும் காணப்படுகிறது. மனிதர்கள் அதை எல்லை இல்லாமல் செய்கிறார்கள்'.
இந்தப் பத்தியில் உங்களுக்குப் பொருள் புரியாத சொற்கள் பல உள்ளன. அவற்றிற்கு என்ன பொருள் என்று யூகியுங்கள். அப்போதும் புரியவில்லையா?
'விடைகள்' பகுதியைப் பார்த்துவிடுங்கள்.
விடைகள்:
1. ஜந்து - விலங்கு
2. சாசுவதமாக்கி - நிலையானதாக்கி
3. சாஸ்த்ரம் - நெறிமுறை
4. மனித ஜாதியில் - மனித இனத்தில்
5. ஆதி - முதல்
6. சகல பிராணிகள் - அனைத்து உயிர்கள்