PUBLISHED ON : ஆக 12, 2024
கி.பி. 1296-இல் இருந்து, கி.பி.1316 வரை டில்லியை ஆட்சி செய்த ஒரு கில்ஜி மன்னனின் தளபதி மாலிக்காபூர். அந்த நேரத்தில் மதுரையில் மன்னராக இருந்தவர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1268 - 1311).
இவரின் மகன்கள் சடையவர்மன் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன். இருவரும் தந்தையுடன் இணைந்து ஆட்சியில் இருந்தனர். மாற்றாந்தாய் மகன்கள். இருவரில் சுந்தரபாண்டியன் மூத்த மகன். வீரபாண்டியன் இளையவன் என்றாலும் வீரமிக்கவன் என்பதால், ஆட்சிப் பொறுப்பை அவருக்கு வழங்கினார் குலசேகர பாண்டியன்.
பதவிப் போரில் தந்தையைக் கொன்றுவிட்டு, டில்லியில் உள்ள கில்ஜியின் உதவியை நாடினார் சுந்தர பாண்டியன். கில்ஜி மாலிக்காபூர் தலைமையில் படையை அனுப்பினார். அந்தப் படை கி.பி.1311இல் (26.3.1311) கர்நாடகம் வழியாகத் தமிழகத்திற்கு (மாபார்) வந்தது. நீர் வசதி இருப்பதால் காவிரி ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்தது.
பின்னர் மாலிக்காபூர் படை பிர்துல் (Birdhul), காந்துர் (Kandur), ஜால்கோட்டா (Jalkota), பிரம்மஸ்புரி (Brahmastpuri), காம் (Kham), மதுரை (Madura) ஆகிய நகரங்களைத் தாக்கியது. இதில் குறிப்பிடப்படும் தமிழக நகரங்களை அடையாளப்படுத்துவதில் ஆய்வாளர்களிடையே குழப்பம் உள்ளது.
ஆனால் மாலிக்காபூரின் படையெடுப்பால் ஸ்ரீரங்கம், திருச்சி (கண்ணனூர்), சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம், ஆயிரத்தளி (நந்திபுரம்), மதுரை ஆகிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாய் குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய 'நந்திபுரம்' நூலும், குடந்தை சேதுராமன் எழுதிய 'பாண்டியர் வரலாறு' நூலும் கூறுகின்றன.
காந்தூருக்கு அருகில் உள்ள பிரம்மஸ்புரியில் லிங்க மகாதேவர் சிலையும், தேவநாராயணன் சிலையும் பீடத்தில் இருந்து உருட்டித் தள்ளப்பட்டன. அங்கிருந்த பொன்னாலான விக்ரகங்கள், 250 யானைகள் கைப்பற்றப்பட்டன.
கோயிலின் கூரை தங்க, சிவப்புக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தக் கோயில் செல்வங்கள் அபகரிக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் கோயில்கள் சூறையாடப்பட்டன. மதுரை கோயில் தீக்கறையாக்கப்பட்டது என இந்த நூல்கள் தெரிவிக்கின்றன.
மாலிக்காபூர் படை 10.4.1311 முதல் 24.4.1311 வரை மதுரையில் தங்கி இருந்தது. வீர பாண்டியனும், சுந்தர பாண்டியனும் நாட்டை விட்டு அகன்றனர். மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கம், கங்கைகொண்ட சோழபுரம், சிதம்பரம் போன்ற ஊர்களில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களுடன் மாலிக்காபூர் படை 30.10.1311இல் டில்லியை அடைந்தது.
மாலிக்காபூரின் படையெடுப்பின் போது, கில்ஜியின் அவையில் இருந்த அமீர் குஸ்ரு (Amirkushru), உடன் பயணம் செய்தார்.
நேரில் பார்த்த விவரங்களை அவர் எழுதி வைத்துள்ளார். இதை 'லண்டன் ராயல் ஏசியாடிக் சொசைட்டி' பாதுகாத்து வைத்திருந்தது. பின்னர் இது ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
இதை எலியட், டௌசன் (Elliot, Dowson) இருவரும் 'தி ஹிஸ்ட்ரி ஆஃப் இண்டியா' (History of India as told by its own historians - the muhammadan period Vol - 3) என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அவிரியூர் கிராமத்தில் கிடைத்த வீரக்கல்வெட்டு ஒன்றும் மாலிக்காபூர் படையெடுப்பை உறுதி செய்கிறது. அந்தப் போரில் உயிரிழந்த வீரனின் மனைவி உடன்கட்டை ஏறினாள் என்பதையும் தெரிவிக்கிறது. 'ஸ்ரீ வீரபாண்டிய தேவருக்கு யாண்டு 14வது துலுக்கர் பூசலில் பட்டார் அடா தெல்லார் ராகுத்தர் இவருடைய தேவியார் மல்லண தேவியார் இ ஊரிலே தீப்பாய்ந்தாள்'.
திருத்துறைப் பூண்டி கல்வெட்டு ஒன்று, 'இராஜராஜன் சுந்தர பாண்டிய தேவர் துருக்கருடன் வந்த நாளிலே ஒக்கூருடையாரும் இவனுடைய தம்பிமாரும் அனைவரும் அடியாரும் செத்தும் கெட்டும் போய் அலைந்து...' என்று கூறுகிறது. இதிலிருந்து தமிழகம் இந்தப் படையெடுப்பால் சீர்குலைந்தது என்பதை அறிய முடிகிறது.
மாலிக்காபூர் செல்லும் போது 612 யானைகள், 20,000 ஆயிரம் குதிரைகள், 96 ஆயிரம் மணங்கு பொன், மாணிக்க, நவரத்தனங்கள் அடங்கிய பெட்டிகளைக் கொண்டு சென்றதாக எலியட், டௌசன் எழுதிய நூல் தெரிவிக்கிறது.
உங்களுக்கான கேள்வி இந்த மாலிக்காபூர் (Malik - Naib - Kafur) யாருடையபடைத் தளபதி?
விடைகள்: அலாவுதீன் கில்ஜி