PUBLISHED ON : டிச 23, 2024

பெயர்ச்சொல் செய்கின்ற செயல்தான் வினைச்சொல் ஆகிறது. மழை என்கின்ற பெயர்ச்சொல்தான், பெய்கிறது என்ற வினைச்சொல்லுக்கு உரிமையாகிறது.
வினைச்சொல் என்று ஒன்று இருக்குமானால், அவ்வினையை, ஒரு பெயர்ச்சொல்லால் செய்ய முடியும். பெய்கிற வினையைச் செய்வது மழை.
ஒரு பெயர்ச்சொல்லுக்கே உரிய வினை உண்டு. அவ்வாறே ஒரு பெயர்ச்சொல்லுக்குப் பொருந்தாத வினையும் உண்டு. தீ சுடுகிறது என்று சொல்லலாம். பனி சுடுகிறது என்று சொல்ல இயலாது. சுடும் வினையைப் பனியால் செய்ய இயலாது.
இந்தப் புதிரில் ஒரு பெயர்ச்சொல்லால் செய்யத் தகுந்த வினையும், செய்ய இயலாத வினையும் சேர்த்துத் தரப்பட்டிருக்கிறது. அவற்றுக்கு எதிரே அதனைக் குறிக்கும் பெயர்ச்சொல், வரிசை மாறி அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்விரண்டையும் பொருத்தவேண்டும்.
அ). நடக்க முடியும், நீந்த முடியாது - நத்தை
ஆ). கொத்த முடியும், கேட்க முடியாது - மயில்
இ). கக்க முடியும், கழிக்க முடியாது - முயல்
ஈ). நகர முடியும், பார்க்க முடியாது - குதிரை
உ). நிற்க முடியும், படுக்க முடியாது - வாடாமல்லி
ஊ). ஆட முடியும், பாட முடியாது - வௌவால்
எ). மலர முடியும், வாட முடியாது - பாம்பு
ஏ). தோண்ட முடியும், தொங்க முடியாது - ஒட்டகம்
--மகுடேசுவரன்
விடைகள்: அ. ஒட்டகம், ஆ. பாம்பு, இ. வௌவால், ஈ நத்தை, உ. குதிரை, ஊ. மயில், எ. வாடாமல்லி, ஏ. முயல்.