PUBLISHED ON : ஜன 08, 2018
வோம்பட்
ஆங்கிலப் பெயர்: 'ஹேரி நோஸ்டு வோம்பட்' (Hairy Nosed Wombat)
உயிரியல் பெயர்: 'லாசியோரினஸ் கிரெஃபிட்டி' (Lasiorhinus Krefftii)
குடும்பம்: 'வோம்பட்டிடே' (Vombatidae)
நீளம்: 102 செ.மீ.
வால் நீளம்: 6 செ.மீ.
உயரம்: 40 செ.மீ.
எடை: 30 கிலோ
ஆயுட்காலம்: 15 ஆண்டுகள்
உலகில் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் உயிரினம் 'வோம்பட்'. பெரிய எலி போன்ற தோற்றத்தில் இருக்கும். பாலூட்டி உயிரினமான இது, காங்காருவைப் போலவே வயிற்றில் பை போன்ற பகுதி உடையது. சமவெளிப் பகுதிகளிலும், புற்கள் நிறைந்த பகுதிகளிலும் வாழும். புல், பூண்டு, பட்டை, வேர் போன்றவற்றை மட்டுமே உண்ணும் தாவர உண்ணி. பகல் பொழுதில் வளைக்குள்ளேயே இருந்துவிட்டு, இரவு நேரங்களில் உணவு தேடும். குறைந்த அளவு தண்ணீர் குடிக்கும்.
தரையில் பெரிய பள்ளம் தோண்டி வளை அமைத்து அதில் பதுங்கி வசிக்கும். மிக வேகமாக பள்ளம் தோண்டும் திறன் உடையவை. வளைக்குள் செல்ல பல வழிகளை உருவாக்கிக் கொள்ளும். பருத்த உடலும் மிகச் சோம்பலான நடையும் உடையது என்றாலும், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் ஓடும். அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள மழைக்காலங்களில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. ஒரு தடவைக்கு ஒரு குட்டி மட்டுமே ஈனும். பிறந்த குட்டிகள் வளரும் வரை, தனது வயிற்றுப் பகுதியில் உள்ள பையில் வைத்து ஒன்பது மாதங்கள் வரை பராமரிக்கும்.
மென்மையான ரோமத்திற்காக இவை வேட்டையாடப்படுகின்றன. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால், இது அழிந்துவரும் நிலையில் உள்ள உயிரினமாக சிவப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ப.கோபாலகிருஷ்ணன்
