PUBLISHED ON : ஜன 08, 2018
பிரண்டை
ஆங்கிலப் பெயர்கள்: 'வெல்டு கிரேப்' (Veld Grape), 'டெவில்'ஸ் பேக்போன் (Devil's Backbone), 'அடமன்ட் கிரீப்பர்' (Adamant Creeper)
தாவரவியல் பெயர்: 'சிஸ்ஸஸ் குவாட்ராங்குலாரிஸ்' (Cissus Quadrangularis)
வேறுபெயர்கள்: பெரண்டை, வச்சிரவல்லி (தமிழ்), ஹட்ஜோட் (இந்தி), நல்லேறு (தெலுங்கு), மோகாரோலி (கன்னடம்), சங்கலம் பரந்தா (மலையாளம்)
வகைகள்: முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, மூங்கில் பிரண்டை அல்லது கோப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, தீப்பிரண்டை
தோட்டங்கள், புதர்ப் பகுதிகளில் சாட்டை போல நீண்டு வளர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் பிரண்டையை நாம் பார்த்திருப்போம். வெப்ப மண்டலப்பகுதிகளில் வளரும் இந்தக் கொடி வகைத் தாவரம், 'விட்டாசியே' (Vitaceae) தாவரக்குடும்பத்தைச் சேர்ந்தது. மருத்துவ குணங்கள் நிறைந்தது. சதைப்பற்றான நாற்கோண வடிவத் தண்டுகளை உடையது. மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் பற்றிப் படர்ந்து வளரும்.
முக்கோண வடிவில் சிறிய இலைகளும், சிவப்பு, கருப்பு நிற உருண்டையான சதைக் கனிகளும் காணப்படும். பூக்கள் வெள்ளை நிறம். ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என இதில் இரு வகை உண்டு. இரண்டின் கணுக்களும் அளவுகளில் வித்தியாசமாக இருக்கும். தண்டுப் பகுதியை பதியனிட்டு இதை இனப்பெருக்கம் செய்யலாம்.
லேசான காரத்தன்மை உடைய பிரண்டை எலும்புகளைப் பலப்படுத்தவும், வாயுப் பிடிப்பை நீக்கவும், ரத்த மூலத்திற்கான மருந்தாகவும் பயன்படுகிறது. எளிதில் ஜீரணிக்கக்கூடிய, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் நிறைந்தது. சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுகிறது. பிரண்டை தோல் பகுதியைச் சீவியெடுத்து பருப்புடன் சேர்த்து துவையல் செய்து உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. உடல் நலத்துக்குப் பயனளிக்கும் பிரண்டைச் செடியை வீடுகளிலும் தொட்டிகளில் வளர்க்கலாம்.
-- கி.சாந்தா
