தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : ஜன 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

1 கடல்வாழ் உயிரினங்களால் ஏரி, குளங்களில் ஏன் வாழ முடிவதில்லை?

வே. பசுபதி, 7ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, குருவாயல், திருவள்ளூர்.


சேற்றுத் தாவி, மடவை போன்ற உவர்ப்பு (Euryhaline) வகை நீர்வாழ் உயிரிகளால் உப்பு நிறைந்த கடலிலும், உப்பே இல்லாத நன்னீரிலும் வாழ முடியும். தங்க மீன்கள் நன்னீரில் மட்டுமே வாழும்; ஆனால், சூரை மீன்களால் கடல் நீரில் மட்டுமே வாழ முடியும்.

ஓர் உயிரினம் எவ்வளவு உப்பைத் தாங்கும் ஆற்றல் படைத்து இருக்கிறதோ அதற்கு ஏற்ப உப்புள்ள அல்லது உப்பே இல்லாத நீரில் வாழும். சில நன்னீரில் வாழும் உயிரிகள் 0.05% அளவுக்கு நீரில் உப்பு இருந்தால்கூட மடிந்துவிடும். கடல் நீரில் வாழும் மீன்களால்கூட கூடுதல் உப்பு கொண்ட கடல் நீரில் வாழ முடியாது.

2 பருவ நிலை மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது? அதனால் என்ன பயன்?

பி.மீனாட்சி, 3ஆம் வகுப்பு, ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி, புவனகிரி, கடலூர்.


குளிர் காலத்தில் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்குகிறோம். அதன் காரணமாக நமக்கு இதமான வெப்பம் கிடைக்கிறது. அதே சமயம் மேலும் மேலும் கம்பளியைப் போர்த்திக்கொண்டால், உள்ளே சூடு உயர்ந்து வியர்க்கும் அல்லவா? அதுபோலவே, குறைவான அளவு கார்பன் டை ஆக்ஸைடு நமது வளிமண்டலத்தில் இருக்கும்போது, சூரிய ஒளியை உறிஞ்சி இதமான சூட்டை பூமியில் ஏற்படுத்துகிறது. இதனை 'பசுமை இல்ல விளைவு' என்பார்கள். இதன் காரணமாகவே, பூமி வெறும் ஐஸ் கட்டியாக மட்டும் இல்லாமல், கடல், நதிகள், ஏரிகள் என பல்வேறு நீர் நிலைகளாகவும் இருக்கின்றன.

தொழில் வளர்ச்சி, போக்குவரத்து, புகை போன்ற பல்வேறு காரணங்களால், கடந்த சில நூறு ஆண்டுகளாக கூடுதல் கார்பன் டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் சேர்வதால், வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடின் செறிவு கூடிக்கொண்டே இருக்கிறது; இதனால், பூமியின் சராசரி வெப்பம் சுமார் 0.9 டிகிரி உயர்ந்துவிட்டது என, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கூடுதல் வளிமண்டல கார்பன் காரணமாக ஏற்படுவது புவி வெப்பமடைதல்.

புவியின் சராசரி வெப்பம் உயர்ந்தால், காலநிலை மாற்றம் ஏற்படும். எடுத்துக்காட்டாக, கடல் நீரின் வெப்பம் உயர்ந்து அதன் மீது ஏற்படும் சூறாவளியின் ஆற்றல் பெருகும். ராட்சச சூறாவளிகள் உருவாகும். இதுவரை குளிர்ப் பகுதியாக இருந்த பகுதிகளில் வெப்பம் கூடும்போது, வேறு விளைவுகள் ஏற்படும். எடுத்துக்காட்டாக, கொசு அதிகம் பரவி அதனால் ஏற்படும் நோய்கள் பெருகும்.

வளிமண்டலத்தில், பசுமை இல்ல விளைவை ஏற்படுத்தும் அளவுக்கு, கார்பன் டை ஆக்ஸைடு இருந்தால் போதும்; அளவு கூடிக்கொண்டே இருந்தால்தான் தீமை.

3 தங்கம், இரும்பு போன்ற உலோகங்களை உருக்கும்போது பல வண்ணங்களில் ஒளிர்வது ஏன்?

வி.பியூலாகேத்தரின், 9ஆம் வகுப்பு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் வித்யா மந்திர், கோவை.


எந்த ஒரு தனிமத்தையும் குறிப்பிட்ட அளவுக்குமேல் கூடுதலாக வெப்பப்படுத்தினால் அவை ஒளிரும். இரும்பு போன்ற திடப்பொருளைச் சூடுபடுத்தும்போது, அதிலுள்ள அணுக்களின் அதிர்வு கூடும். அதாவது அணுக்களின் இயக்க ஆற்றல் கூடும். இவ்வாறு இயக்க ஆற்றல் கூடும்போது, அந்த ஆற்றலின் ஒரு பகுதியை, அணுவின் கருவைச் சுற்றிவரும் எலக்ட்ரான்கள் உள்வாங்கிக் கொண்டு, அதன் இயல்பு சுற்றுப்பாதை நிலையைவிட உயர்ந்த நிலைக்குச் செல்லும். இவ்வாறு, தனது இயல்பு நிலையிலிருந்து உயர்ந்து மேலே உள்ள நிலைக்குச் செல்வதை, 'எலக்ட்ரான் கிளர்நிலை'க்குச் சென்றுள்ளது என்பார்கள். கிளர் நிலையிலேயே எலக்ட்ரான் இருக்க முடியாது. கிளர் நிலையிலிருந்து தளர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பும். அவ்வாறு திரும்பும்போது, மேல் கிளர் நிலைக்கும், இயல்பான கீழ் கிளர் நிலைக்கும் இடையே உள்ள ஆற்றல் ஒளித்துகளாக உமிழப்படும்.

தீபாவளி போன்ற பண்டிகைகளில் வெடிக்கப்படும் வெடிகள், குறிப்பாக கம்பி மத்தாப்பு போன்றவை, இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் ஒளி தருகின்றன. அவற்றில் சிறுசிறு துகள்களாக மக்னீசியம், அலுமினியம் போன்ற உலோகங்கள் இருக்கும். மத்தாப்பை எரிக்கும்போது, இந்த உலோகத்தினுள் எலக்ட்ரான்கள் கிளர்ந்து, பின்னர் தளர்ந்து ஒளியை உமிழும். உயர் ஆற்றலை உறிஞ்சும் உலோகம் குறைவான அலைநீளம் கொண்ட நீலம் போன்ற ஒளியை உமிழும். குறைவான ஆற்றலை உறிஞ்சும்போது, அந்தத் தனிமம் சிவப்பு போன்ற அதிக அலைநீளம் கொண்ட ஒளியை உமிழும். இப்படித்தான் பல்வேறு தனிமங்களைச் சேர்த்துக்கூட்டி பல்வேறு வண்ணங்களை மத்தாப்பில் வெளிவரச் செய்கின்றனர்.

4 கார்மேகத்தைக் கண்டதும், மயில் தோகை விரித்து ஆடுவது ஏன்?

ஆ.மகாலட்சுமி, 5ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.


மேகத்தைக் கண்டதும் மயில் ஆடுவதில்லை. மாறாக, பெண் மயில்களைக் கவர்வதற்காகவே ஆண் மயில் தோகை விரித்து ஆடுகிறது. தோகையில் உள்ள கண்கள் போன்ற அழகிய வடிவமைப்பு, இறகுகளின் படபடக்கும் ஓசை இவற்றைப் பொறுத்து, பெண் மயில்கள் ஈர்க்கப்பட்டு இனப்பெருக்கத்துக்குச் சம்மதிக்கின்றன. இது மழைக்காலத்தில்தான் நடைபெறும். எனவே, அந்தச் சமயத்தில் பல தடவை ஆண் மயில் தொகை விரித்து ஆடும். சில சமயம் பெண் மயில்கள் அருகே இல்லாதபோதும் சோம்பல் முறிப்பதற்காக தோகையை விரிப்பதுண்டு. ஆகவே, மயிலின் இனப்பெருக்க காலமும், மழைக்காலமும் ஒன்றாக வருவதால், மேகத்தைக் கண்டு மயில் ஆடுகிறது என நாம் கூறத் தொடங்கிவிட்டோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us