தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/போக்குவரத்துப் பிரச்னைக்கு புதுமையான தீர்வு!

போக்குவரத்துப் பிரச்னைக்கு புதுமையான தீர்வு!

போக்குவரத்துப் பிரச்னைக்கு புதுமையான தீர்வு!


PUBLISHED ON : ஜூலை 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்க, பல நாடுகளிலும் ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், இந்தியாவில் குண்டும்குழியுமான சாலைகள், ஒழுங்கற்ற வாகனப் போக்குவரத்து, போதிய உட்கட்டமைப்பு வசதியில்லாதது என்று பல தடைகள் உள்ளன. இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத கார் தொழில்நுட்பத்துக்கு நெருக்கமாக, அதேசமயம் இந்திய சாலைக்கும் சாத்தியமாகும் 'டைனமூவ்' (Dynamove) என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில், சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் மூவர் வெற்றி கண்டுள்ளனர்.

ஃபிளிப்கார்ட் நிறுவனம், பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வுகாணும் போட்டியை நடத்தியது. அப்போட்டிக்காக, ரோஹன் ராவோ, அபிஜித் குப்தா மற்றும் ரஜத் ராவோ ஆகிய மூவரும் உருவாக்கியதுதான் இந்தத் திட்டம்.

'இந்தியாவில், இரண்டரைக் கோடி கார்கள் உள்ளன. ஆண்டுக்கு புதிதாக 25 லட்சம் கார்கள் சாலைக்கு வருகின்றன. இதனால் ஏற்படும் நெரிசல் மற்றும் போக்குவரத்துப் பிரச்னைகளுக்குத் தொழில்நுட்ப ரீதியில் தீர்வு தருவதுதான் 'டைனமூவ்' திட்டம். இரண்டு கேமராக்கள், டிஸ்ப்ளே மற்றும் சென்சார்கள் இக்கருவியில் உள்ளன. ஒரு கேமரா, ஓட்டுநரின் நடவடிக்கையைக் கண்காணிக்கும். அவர் கண்சிமிட்டலைக் கணக்கிடுவதன் மூலம், தூக்கத்துடன் வண்டி ஓட்டுகிறாரா எனக் கண்காணிக்கும்.

இன்னொரு கேமரா, சாலையில் செல்லும் வாகனங்களைக் கவனிக்கும். மோதுவதற்கான வாய்ப்பிருந்தால், தர்க்க நெறிமுறை (அல்காரிதம்) தொழில்நுட்பம் அதை முன்கூட்டியே கணித்துச் சொல்லும். அதேபோல, சாலைக் குறியீடுகள், பாதை விலகினால் எச்சரிப்பது போன்றவற்றைச் செய்யும். ஜி.பி.எஸ். மூலம் மற்ற வாகனங்களோடு தொடர்பு கொண்டு, நெரிசல் ஏற்படாமல் சுமுகமாக வாகனத்தை இயக்குவதற்கு ஓட்டுநருக்கு வழிகாட்டல்களை வழங்கும்.' என்கிறார் ரோஹன்.

'டைனமூவ்' தொழில்நுட்பம், ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பம் அல்ல; ஆனால், சாலையைக் கண்காணித்து, சரியான தகவல்களை வாகன ஓட்டிக்குச் சொல்லும். அதேபோல், கார் திருட்டைத் தடுப்பது, பராமரிப்பு வழிகாட்டல்கள் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

'சாலைக் குழிகள் எங்கிருக்கின்றன, எவ்வளவு பெரியது என்பது போன்ற தகவல்களைக் கேமரா மற்றும் சென்சார்கள் மூலம் திரட்டி, பிற வாகன ஓட்டிகளை எச்சரிக்க முடியும். அதோடு, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்வதற்கு ஏற்றவகையில், வாகனங்கள் மற்றும் சிக்னல்களை ஒழுங்குபடுத்த முடியும். தற்போது போக்குவரத்துப் போலீசார்தான் அந்த வேலைகளைச் செய்கின்றனர். போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில், திரையில் தெரியும் சி.சி.டி.வி. காட்சிகளை, ஏராளமான காவலர்கள் கண்காணித்து வழிகாட்டல்களை வழங்குகின்றனர். இதுபோன்றவற்றை தர்க்க நெறிமுறை மூலம், தானியங்கியாக மாற்றலாம்' என்கிறார் அபிஜித்.

'எங்கள், தொழில்நுட்பத்துக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் நல்ல அங்கீகாரம் கிடைத்து வருகிறது. எங்கள் குழுவை விரிவுபடுத்தியுள்ளோம். குழுவில் உள்ளவர்கள் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், செயலாக்க ஆய்வு, தர்க்க நெறிமுறை, ஹார்டுவேர் கட்டமைப்பு போன்றவற்றில் திறன்மிக்கவர்கள். எனவே, உயரிய தொழில்நுட்பத்துடன் மலிவு விலையில் கருவியைத் தயாரிக்க முடியும் என நம்புகிறோம். இக்கருவி அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்' என நம்பிக்கை தெரிவித்தார் அஜித்.

மின் பொறியியல் துறையின் பேராசிரியரும், இந்திய அரசின் 5-ஜி திட்டத்தின் பொறுப்பாளருமான இராதாகிருஷ்ணன் இக்குழுவுக்கு வழிகாட்டி வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us