PUBLISHED ON : ஜூலை 23, 2018

மதுரையைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார் என்பவரின் மகள் காவ்யா, விமானம் இயக்குவதற்கான உரிமம் பெற்று அசத்தியுள்ளார். 'நடுத்தரக் குடும்பத்தில் பிறந்துவிட்டு, விமானி ஆக வேண்டும் என்று ஏன் வீண் கனவு காண்கிறாய்?' என்று ஏளனம் பேசியவர்கள், இன்று காவ்யாவை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். களங்கத்துப்பட்டியைச் சேர்ந்த 22வயதான காவ்யா, தன் கனவை நனவாக்கியுள்ளார்.
அவரிடம் பேசியதிலிருந்து...
விமானியாகி வானில் பறக்க வேண்டும் என்பது எனது குழந்தைப்பருவ ஆசை. எனது தோழிகளிடமும் விமானியாகப் போகிறேன் என்றுதான் கூறிவந்தேன். அவர்களும் என்னை பைலட் என்று தான் அழைப்பர். பிளஸ் 2 முடித்த பின்னர், விமானப் பயிற்சியில் சேர வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். அதைத் தகுதிக்கு மீறிய ஆசை என்று கூறி, பலரும் தடுத்தனர். விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர, 25 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள்.
எனினும் எனது விருப்பத்துக்காக, என் தந்தை முயற்சி செய்து, 6 லட்சம் ரூபாயைத் திரட்டிக்கொடுத்தார். 2013ஆம் ஆண்டு ஆகஸ்டில், பெங்களூரு அருகில் உள்ள விமானப் பயிற்சிக் கல்லூரியில், விமானம் இயக்குவதற்கான பயிற்சியை ஆரம்பித்தேன். வானில் பறக்க, ஒரு மணிநேரப் பயிற்சிக்கு 10 ஆயிரம் ரூபாய். என்னிடம் இருந்த பணத்தை வைத்து, 45 மணி நேரமே பயிற்சியை மேற்கொள்ள முடிந்தது. 2015ஆம் ஆண்டு பொருளாதாரச் சூழலால், பயிற்சி தடைப்பட்டது.
பின்னர், அரசு உதவித்திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் உதவித்தொகை கிடைத்தது. இதன் மூலம் 200 மணி நேரம் விமானப் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. ஜூனியர் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து, என் மற்ற செலவுகளை ஈடுகட்டினேன். விமானி ஆகவேண்டும் என்ற என்னுடைய லட்சியம், கனவு தற்போது நிஜமாகியுள்ளது. சாதனை படைப்பதற்கு பலரும் வழிகாட்டல் இன்றித் தவிக்கின்றனர். தேடலும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும். பயணிகள் விமானத்தை இயக்குவதைவிட, பயிற்சியாளராக வேண்டும் என்பதே என் விருப்பம்.
தீர்க்கமாகப் பேசுகிறார் காவ்யா.
