PUBLISHED ON : ஜூலை 31, 2017

ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமாகக் கருதப்படுவது, ரஷ்யாவிலுள்ள மெளன்ட் எல்பர்ஸ் (Mount Elbrus) ஆகும். தெலங்கானாவைச் சேர்ந்த, பூர்ணா மலாவத் மற்றும் ஸ்ரீவித்யா ஆகிய இரு பெண்கள், இந்த மலையில் ஏறிச் சாதனை படைத்துள்ளனர். பூர்ணா தொட்டிருக்கும் மூன்றாவது சிகரம் இது. ஏற்கனவே, எவரெஸ்ட், கிளிமாஞ்சரோ ஆகிய சிகரங்களைத் தொட்டு சாதனை புரிந்தவர் இவர். எவரெஸ்டை எட்டும்போது, பூர்ணாவின் வயது 13 மட்டுமே. இருவரும், பழங்குடியின மாணவர்களுக்காக தெலங்கானா சமூக நலத்துறையால் நடத்தப்படும் உண்டுஉறைவிடப் பள்ளியில் தங்கிப் பயிலும் மாணவிகள். இதில், பூர்ணாவின் கதை இந்தியில் சினிமாவாகவும் வந்துள்ளது.
இப்போது, பனிமூடிய மலையாக அமைதியாக உறைந்து, 18 ஆயிரத்து 506 அடி உயரத்தில் நின்றிருக்கும் எல்பர்ஸ் மலை, உண்மையில் ஓர் எரிமலை. ஆனால், அது வெடித்து எப்படியும் 2000 ஆண்டுகளாவது ஆகியிருக்கும் என்கிறார்கள். மீண்டும் எப்போது வெடிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத மலை இது. எப்போது வேண்டுமானாலும் வெடித்து, தீப்பிழம்பைக் கக்கலாம் அல்லது இப்போதிருக்கும்படியே அமைதியாகவும் இன்னும் பல ஆண்டுகள் இருக்கலாம். இம்மலையில் ஏறுவதற்காக, பூர்ணா, ஸ்ரீவித்யா ஆகிய இவ்விரு பெண்கள் உள்ளிட்ட குழு ஒன்று, ஜூலை 21 அன்று ரஷ்யாவுக்கு விமானம் மூலம் பறந்து சென்றது. 24ம் தேதி மலையில் ஏறத் தொடங்கினர். 27ம் தேதியே சிகரத்தைத் தொட்டுவிட்டனர்.
சிகரத்தின் உச்சியில் நமது தேசியக்கொடியைப் பிடித்தபடி மலையேற்ற வீரர்கள் நிற்கும் படத்தை மகிழ்ச்சியாக இக்குழுவின் பயிற்சியாளர் பிரவீன்குமார் முகநூலில் பகிர்ந்துள்ளார்.