PUBLISHED ON : மே 15, 2017
இரக்க குணம், கருணை, மனிதாபிமானம், இவற்றை இளம் வயதிலேயே பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும். யாரையும் கேலி கிண்டல் செய்யாமலும், புறக்கணிக்காமலும் நடந்துகொள்ள வேண்டும். இளையவர் மட்டுமின்றி சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய பழக்கம் இது. நீங்கள் அனுதாபம் அதிகம் கொண்டவரா என்பதை ஒரு எளிய கேள்வி, பதில் வாயிலாகத் தெரிந்துகொள்வோம்.
* ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை டிக் செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்).
* உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன.
* மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம்.
* அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.
1) நீங்கள் தான் வகுப்பு லீடர். சில கேள்விகளை கரும்பலகையில் எழுதிவிட்டு, உங்களை எல்லாம் அதற்கு பதில் எழுதச் சொல்லிவிட்டு, சிறிதுநேரம் வெளியே சென்றிருக்கிறார் ஆசிரியர். ஒரு மாணவர் அப்போது தூங்கிக் கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்?
அ) அவனை எழுப்பி கேள்விகளுக்குப் பதில் எழுதச் சொல்வேன்.
ஆ) அவனைத் தொடர்ந்து தூங்கவிட்டு ஆசிரியர் வந்ததும் காட்டிக் கொடுப்பேன்.
இ) தூங்கட்டும் பாவம் அவனுக்கு வீட்டில் என்ன பிரச்னையோ!
2) நேற்று தனக்கு நேர்ந்த ஒரு நிகழ்வை மிகவும் நீளமாக விவரிக்கிறான் ஒரு நண்பன். உங்களுக்கு போரடிக்கிறது. என்ன செய்வீர்கள்?
அ) அவன் லேசாக இடைவெளி விடும்போது பேச்சை மாற்றுவேன்.
ஆ) “சுருக்கமாகச் சொல்'' என்று பளிச்சென்று கூறிவிடுவேன்.
இ) கவனமாகக் கேட்பதுபோல நடித்துத் தொலைப்பேன்.
3) பள்ளி ஆண்டு விழாவுக்காக, சக மாணவர்களோடு சேர்ந்து ஒரு குழு பாடலுக்கு ஒத்திகை பார்க்கிறீர்கள். ஒரு மாணவனின் குரல் மட்டும் அடிக்கடி சேராமல் ஸ்ருதி விலகி ஒலிக்கிறது. என்ன செய்வீர்கள்?
அ) அதை வெளிப்படுத்தினால், சக மாணவரின் மனம் புண்படும். எனவே கண்டு கொள்ளாமல் இருந்து விடுவேன்.
ஆ) தனிமையில் சக மாணவரிடம் எடுத்துச் சொல்லி, குறைபாட்டைச் சரி செய்து கொள்ளச் சொல்வேன்.
இ) அந்த மாணவரை குழுப் பாடலிலிருந்து விலகிவிடச் சொல்வேன்.
4) காலையில் அப்பாவோ, அம்மாவோ அலுவலகத்துக்குக் கிளம்பும்போதுதான், அவரிடம் நீங்கள் கேட்டுப் பெற வேண்டிய ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. என்ன செய்வீர்கள்?
அ) மிகுந்த தயக்கத்துடன் அதைக் கேட்பேன்.
ஆ) அந்த நேரத்தில் அதையெல்லாம் கேட்டால் பெற்றோருக்கு எவ்வளவு டென்ஷன்! மெளனமாக இருந்து விடுவேன்.
இ) இதையெல்லாம் பார்க்க முடியுமா? உரிமையாக நான் கேட்க வேண்டியதை உடனடியாகக் கேட்பேன்.
5) கோடை விடுமுறையில் பெற்றோருடன் ஓரிடத்திற்கு சுற்றுலா சென்று வருகிறீர்கள். வந்தவுடன் “எப்படி இருந்தது சுற்றுலா?'' என்று நண்பர்கள் கேட்கிறார்கள். அப்போது பக்கத்திலேயே உங்கள் பெற்றோரும் இருக்கிறார்கள். அந்தச் சுற்றுலா உங்கள் எதிர்பார்ப்புக்குத் தகுந்த மாதிரியோ, சுவையானதாகவோ இல்லை. உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
அ) பெற்றோர் மனம் புண்படக் கூடாது. எனவே 'சுற்றுலா மிக நன்றாக இருந்தது' என்பேன்.
ஆ) ''நான் எதிர்பார்த்த மாதிரியே இல்லை. ஏமாற்றம்தான்'' என்று மனதில் பட்டதை மறைக்காமல் கூறிவிடுவேன்.
இ) “பரவாயில்லை. ஆனால், அடுத்த தடவை இன்னும் சிறப்பான சுற்றுலாவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்'' என்று கூறுவேன்.
6) ஐஸ்க்ரீம் கடையில் ஓர் ஐஸ்க்ரீமை வாங்குகிறீர்கள். மீதமிருக்கும் காசில் மாலையில் இன்னொரு ஐஸ்க்ரீம் சாப்பிடத் திட்டமிடுகிறீர்கள். அப்போது ஏழைச் சிறுவன் ஒருவன், நீங்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை ஏக்கத்துடன் பார்க்கிறான். என்ன செய்வீர்கள்?
அ) வருத்தமாகவும் குற்ற உணர்ச்சியோடும் வேறுபக்கமாகத் திரும்பிக் கொண்டு அந்த ஐஸ்க்ரீமைச் சாப்பிடுவேன்.
ஆ) அதெல்லாம் என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது.
இ) அந்தச் சிறுவனுக்கும் ஓர் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பேன்.
விடைகள்
அ ஆ இ
1) 4 0 8
2) 4 0 8
3) 8 4 0
4) 4 8 0
5) 8 0 4
6) 4 0 8
* உங்கள் மதிப்பெண் 40லிருந்து 48 வரை என்றால், பிறருக்காக மிகவும் உருகுகிறீர்கள். இது சில சமயம் தேவையில்லாத விளைவுகளை உண்டாக்கக்கூடும். உங்கள் உணர்வுகளையும் மதிக்கத்தான் வேண்டுமென்று எதிராளிக்கு எடுத்துக் கூறுங்கள்.
* உங்கள் மதிப்பெண் 20லிருந்து 39 வரை என்றால், எதிராளியைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் சில சமயங்களிலும், சுயநலம் சில சமயங்களிலும் மாறி மாறி உங்களை ஆட்டிப் படைக்கிறது. உங்கள் தரப்பில் நியாயம் உள்ளதா என்பதை சரிபார்த்து, அதற்கு தகுந்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் மதிப்பெண் 20க்கும் குறைவு என்றால். நெருங்கிய நண்பர் என்று உங்களுக்கு யாராவது உண்டா? சந்தேகம்தான். எல்லாவற்றிலும் தன்னல உணர்ச்சி மிகுந்திருந்தால், உங்களுக்கு ஒரு நெருக்கடி நேரத்தில் கைகொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். வெளிப்படையாக இருப்பது நல்லதாக இருக்கலாம். ஆனால், அதை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதும் மிகமிக முக்கியம்.
- ஆருத்ரன்
