தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : மே 15, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்

மத்திய அரசு விஞ்ஞானி


ஒரு நாட்டின் கடல் எல்லை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது. மீனவர்கள் அந்த எல்லையை எவ்வாறு அறிந்துகொள்கிறார்கள்?

வி.சந்தனகோபாலன், மதுரை.


1982ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea - -UNCLOS) எனும் சர்வதேச உடன்படிக்கைதான் கடல் எல்லையை நிர்ணயம் செய்கிறது.

கடற்கரையிலிருந்து, கடலிறக்கப் புள்ளியிலிருந்து சரியாக 22.2 கி.மீ. தொலைவு வரை, கடலில் உள்ள பகுதிகள் அந்த நாட்டின் பகுதி என இந்த உடன்படிக்கை கூறுகிறது.

எங்காவது இரண்டு நாடுகளின் கடல் எல்லைகள் 22.2 கி.மீ.க்கும் குறைவாக உள்ள நிலையில் பிரச்னைகள் எழும். நவீன காலத்தில் ஜி.பி.எஸ். போன்ற கருவிகள் பயன் தந்தாலும், கடலில் செல்லும் மீனவர்கள், எவ்வளவு நேரம் எந்தத் திசையில் பயணம் செய்தோம் என்பதை வைத்து அனுபவத்தின் மூலம், நாம் நமது கடல் எல்லைக்குள்தான் இருக்கிறோம் என அறிந்துகொள்கிறார்கள்.

விண்வெளியில் வீரர்கள் என்ன உணவு உண்பார்கள்? அப்படி உண்டால் பாதிப்புகள் என்ன?

மோ.முகிலன் ஜெப்ரிராஜ், 7ம் வகுப்பு, மகாத்மா மாண்டிசோரி பள்ளி, மதுரை
.

மிர் (Mir) விண்வெளி நிலையம், ஸ்கைலாப் (Skylab) போன்ற ஆதிகால விண்வெளி நிலையங்களில் ரெஃப்ரிஜிரேட்டர் வைத்து இயக்க முடிந்தது. நீர் அகற்றப்பட்டு உலர்த்தப்பட்ட காய்கனிகள், இறைச்சி முதலியவற்றை எடுத்துச்சென்று அவர்களால் உண்ண முடிந்தது.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) ரஷ்ய வீரர்கள் 300க்கும் அதிகமான உணவு வகைகளை உட்கொள்கின்றனர். அங்கே தங்கும் விண்வெளி வீரர்கள் காய்கனிகள், அரிசி, பிட்சா, நூடுல்ஸ் போன்ற உணவை உண்கின்றனர். 1961ல் வோஸ்டாக் I விண்கலத்தில் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற யூரி காகரின் வேகவைத்து அரைத்த 160 கிராம் இறைச்சியை, டூத்பேஸ்ட் போன்ற குப்பியில் அடைத்து எடுத்துச் சென்றார்.

இதில் இருக்கும் சிக்கல், ஏதாவது உணவுத் துணுக்குகள் வெளியேறினால், மைக்ரோ கிராவிட்டி காரணமாக விண்வெளிக்கூடம் முழுவதும் பரவி நாற்றத்தை ஏற்படுத்தும். மின்னணுக் கருவிகள் பழுதாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே, எல்லாவித உணவுகளையும் விண்வெளியில் பயன்படுத்துவது இல்லை. நீர் குறைவாகத் தேவைப்படும் உணவுகள், பல நாட்கள் கெடாமல் இருக்கும் உணவுகளே விண்வெளியில் அனுமதிக்கப்படுகின்றன.

இந்திய ஆய்வு நிறுவனம் ஒன்று, எதிர்காலத்தில் விண்வெளி செல்லும் இந்தியர்களுக்கு, தகுந்த விண்வெளி உணவைத் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது என்பது சுவையான செய்தி.

மாங்கொட்டைக்குள் இருக்கும் வண்டு எப்படி சுவாசித்து உயிர் வாழ்கிறது?

ரா.ரமணன், 6ம் வகுப்பு, சேரன் குளோபல் மெட்ரிக் பள்ளி, சேடபட்டி, திண்டுக்கல்
.

மாம்பழமும் ஓர் உயிர்ப்பொருளே! எனவே அதற்குள்ளும் ஆக்சிஜன் இருக்கும். வண்டுகள் தமது தோல் வழி சுவாசிப்பவை; எனவே அவை மாம்பழத்தின் உள்ளே இருக்கும் ஆக்சிஜனைக்கூட உறிஞ்சி எடுத்து உயிர் வாழும்.

மாமரத்தில் மட்டுமே வாழக்கூடிய ஒருவகை வண்டு மாங்காயில் துளையிட்டு உட்செல்லும். காயின் நடுவே உள்ள கொட்டை அருகே சென்று 12 முதல் 46 முட்டைகளை இட்டு வெளியேறும். மாங்காயில் ஊறும் ஒருவகை திரவம் அந்த ஓட்டையை மூடிவிடும். உள்ளே முட்டை பொரிந்து ஒருசில முட்டைப்புழுக்கள் வெளிப்படும். அவை மாங்காயின் சூல்வித்தகம், வித்திலை முதலியவற்றை உண்டு வளரும். சுமார் ஏழு நாட்கள் வளர்ந்த பின்னர் மறுபடி உள்ளே இருந்து துளையிட்டு வெளியே வண்டாக வெளிப்படும். வெளியேறும் வண்டு மாமரத்தின் மரப்பட்டையில் சென்று வாழும். இத்தகைய வண்டுகள் மாமரத்தைத் தவிர வேறு மரங்களை அண்டாது.

வியர்வையில் இருந்து வரும் துர்நாற்றம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படுகிறதே, எதனால்?

ம.ராகுல், 5ம் வகுப்பு, சாய்ராம் மெட்ரிக் பள்ளி, மதுரை.


எந்தெந்த வகை பாக்டீரியா உங்கள் தோல் சருமத்தின் மீது வாழ்கிறதோ, அதைப் பொறுத்தே உங்களது வியர்வை நாற்றம் அமையும். நமது உடலில் உள்ள செல்களைவிட நூறு மடங்கு அதிக நுண்ணுயிரிகள் நமது சருமத்திலும், உடலுக்குள்ளும் வாழ்கின்றன என, நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது. உங்கள் வாழ்வுமுறை, சிறுவயதிலிருந்து நீங்கள் உண்ட உணவு, சூழல் எனப் பல காரணங்களால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 'நுண்ணுயிர்ப் பூங்கா' ஒன்று நமது உடலில் உள்ளது. கைரேகை போல ஒவ்வொருவரின் நுண்ணுயிர்ப் பூங்காவும் வேறுபட்டு தனிச் சிறப்புடன் உள்ளது. அது மட்டுமின்றி காலந்தோறும் மாறி வருகிறது எனவும் கருதப்படுகிறது.

எனினும், சில ஆய்வுகளில் சிலவகை உணவும் சிறப்பு நாற்றத்தை ஏற்படுத்துகிறது. சிறுநீர், மலம், ரத்தம் போல வியர்வையையும் சேகரித்து ஆராய்ந்து, நமது உடலில் ஏற்படும் சர்க்கரை நோய், கேன்சர் போன்ற வியாதிகளை அறிந்துகொள்ளலாம் என்ற கருத்தில், தற்காலத்தில் மெட்டபோலோமிக்ஸ் (Metabolomics) எனும் ஆய்வுத்துறை வளர்த்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us