PUBLISHED ON : ஏப் 11, 2016

பார்சல் செய்யும் காக்கி நிற சுருள் காகிதம் பார்த்திருப்போம். அட்டை மாதிரி சற்று தடிமனாக இருக்கும். நெளிநெளியாக இருப்பதனால், இதை சுலபமாகச் சுருட்ட முடியும். இதைக் கொண்டு விதவிதமான கலைநயம் மிக்க பொருட்களைச் செய்யலாம்.
கிளை மீது அமர்ந்திருக்கும் ஆந்தையாக இதை உருமாற்றப் போகிறோம்.
தேவையான பொருட்கள்: பார்சல் சுருள், அலுமினியச் சருகு (foil), பசை, மார்க்கர் பேனா, பச்சை நிற ஃபுளோரல் டேப் (Floral tape),
கத்தரிக்கோல்
1. 4 செ.மீ. அகலம், 5.5 செ.மீ. நீளத்தில் இரண்டு பட்டைகள் வெட்டிக்கொள்ளவும். இதழ் வடிவம் வருமாறு அவற்றை வெட்ட வேண்டும். இவை இறக்கைகளுக்கான பாகங்கள்.
2. நெடுக்கு வாக்கில் 2 செ.மீ. அகலம், 4 அடி நீளத்தில் ஒரு பட்டையை வெட்டிக்கொள்ளவும். சுருள் செய்து முனையை ஒட்டிவிடுங்கள். சுருளின் மையத்தில் அழுத்தி மேடு உருவாக்கவும். இது உடல் பகுதி.
3. 2 செ.மீ. அகலம், 2 அடி நீளத்தில் நெடுக்கு வாக்கில் 2 பட்டைகள் வெட்டிக்கொள்ளவும். 4 செ.மீ. நீளம் மிச்சம் விட்டு சுருள்கள் செய்துகொள்ள வேண்டும். நீட்டிக்கொண்டு இருக்கும் பகுதியில், கொம்பு வடிவம் வரும் வகையில் மடக்கி ஒட்ட வேண்டும். சுருளின் மத்தியில் உள்நோக்கி லேசான பள்ளம் வருமாறு அழுத்த வேண்டும். இவை தலைப் பகுதிக்கான பாகங்கள்.
4. உடல் பகுதியில், தலைக்கான பாகங்களையும், இறக்கைகளையும் பொருத்த வேண்டும்.
5. அலுமினியச் சருகில் கண்ணும் மூக்கும் வெட்டிக்கொள்ளவும். சிறிய சுருள்களின் மத்தியில் கண்களை ஒட்டி, இமைகளை வரைந்துவிடுங்கள். மூக்கையும் ஒட்டிவிடுங்கள்.
6. கிளை செய்வதற்கு 6 செ.மீ. அகலம், 25 செ.மீ. நீளத்தில் ஒரு பட்டையை, குறுக்காக வெட்டிக்கொள்ளவும். குழாய் மாதிரி சுருட்டிக் கொள்ளவும். அதைச் சுற்றி முக்கால் பகுதிவரை ஃப்ளோரல் டேப்பை ஒட்ட வேண்டும். டேப் ஒட்டாமல் மீதம் இருக்கும் முனையில் ஐந்தாறு பட்டைகளை வெட்டி, அவற்றையும் பச்சை டேப்பால் ஒட்டிவிடவும்.
அடுத்து கிளையின்மீது ஆந்தையை அமர வைத்து அழகு பார்க்க வேண்டியதுதான்.
