PUBLISHED ON : மார் 21, 2016

பிரிட்ஜ், பீரோக்களில் ஒட்டும் மாக்னட் பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். களிமண் பக்குவத்தில் ஏதாவது ஒரு களிம்பு கிடைத்தால், நாமே ஒரு மாக்னட் பொம்மை செய்து ஒட்டலாம். எம்சீல் (Mseal) என்று ஒரு களிம்பு இருக்கிறது. எவர்சில்வர்,பித்தளை பாத்திரங்களில் ஓட்டை ஏற்பட்டால் அடைக்கப் பயன்படும். களிமண் பதத்தில் இருக்கும். அதைப் பயன்படுத்தி ஒரு வண்டு செய்யப் போகிறோம்.
தேவையான பொருட்கள்: எம்சீல் (ஹார்ட்வேர் கடைகளில் கிடைக்கும்), 10 செ. மீ. நீளக் கம்பி (நெளித்து ஒடிக்கக் கூடியதாக இருக்கவேண்டும்), கத்தரிக்கோல், பட்டன் வடிவக் காந்தம் (கிராஃப்ட் கடைகளில் கிடைக்கிறது), அக்ரலிக் பெயின்ட் - கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், சிறிய வட்ட அச்சுகளை ஏற்படுத்தும் பொருள் ஏதாவது. பேனா கழுத்து, பேனா மூடி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
01. கம்பியை வளைத்து வண்டின் தலையில் இருக்கும் இரண்டு உணர்விகளை (ஆன்டெனாக்கள்)செய்துகொள்ள வேண்டும்.
02. எம்சீல் டப்பாவில் இரண்டு எம்சீல் கலவைகள் இருக்கும். இரண்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து,பெரிய உருண்டை ஒன்றும், சிறிய உருண்டை ஒன்றும் உருட்டிக்கொள்ளுங்கள்.
03. பெரிய உருண்டையில் வண்டின் உடல் பகுதியை செய்துகொள்ள வேண்டும். வண்டின் வயிற்றுப் பகுதியில் காந்தத்தைப் பொருத்த வேண்டும்.
04. சிறிய உருண்டையில் தலைப்பகுதியை செய்து, உடல் பகுதியில் ஒட்ட வேண்டும். ஆன்டெனாக்களை வண்டின் தலையில் செருக வேண்டும். எம்சீல் கலவை பத்து நிமிடங்கள் வரைதான் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். அதன்பிறகு கெட்டிப்பட ஆரம்பித்துவிடும். அதற்குள், ஆன்டெனாக்களை செருக வேண்டும்.
05. உடல் பகுதியில் கம்பியால் கீறி, நடுக்கோட்டை வரைய வேண்டும். பேனாவை அச்சாகப் பயன்படுத்தி, ஆங்காங்கே வட்ட வடிவங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு மணி நேரம் காய்ந்த பிறகு, வண்ணம் பூசுங்கள். அழகிய வண்டு தயார்.
