தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : பிப் 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மின்சார மோட்டாரின் திறனை ஏன் குதிரைத் திறன் (ஹார்ஸ் பவர் - Horse power) என்று சொல்லவேண்டும்? ஒரு குதிரைத் திறன் என்பது எவ்வளவு? அதற்கு ஏதேனும் அளவீடு இருக்கிறதா?

- ப்ரீத்தி சிவசெல்வி. கோயமுத்தூர்.


இந்தக் கேள்விக்கான பதிலில் கணக்கு, கதை எல்லாம் வருவதால் கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்.

முதலில் புழக்கத்தில் இருந்த, நியுகோமன் என்ஜினைவிட (Newcomen Engine) அதிகம் திறன் கொண்ட புதிய நீராவி என்ஜினை 1780-ளில் கண்டுபிடித்தார், 'ஜேம்ஸ் வாட்' (James Watt). தனது என்ஜின்களை விற்பனை செய்ய அவர் மேற்கொண்ட யுக்திதான் 'குதிரைச் சக்தி'. இதை குதிரைத் திறன் என்றும் சொல்கிறோம்.

நீர் இறைக்கும் இயந்திரம் முதல் பல்வேறு இயந்திரங்கள் குதிரைச் சக்தியால் அளவிடப்படுகிறது. அவர் கண்டுபிடித்த என்ஜின் இயங்க, ஏற்கெனவே இருந்த நீராவி என்ஜின்கள் பயன்படுத்திய எரிபொருளில் 25 சதவீதம் போதுமானதாக இருந்தது. எனவே, அவருடையது திறன் மிக்க என்ஜின் என்பது உறுதியானது. தனது என்ஜினின் திறன் (பவர் - Power) என்ன என்பதை என்ஜின் வாங்குபவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? இதுவே ஜேம்ஸ் வாட்டுக்கு இருந்த சவால்.

ஜேம்ஸ் வாட்டின் என்ஜினை வாங்கப் போகிறவர்கள் பெரும்பாலும் குதிரைகளையே பயன்படுத்தி வந்தார்கள். அதனால் அவர்களிடம், தனது என்ஜின் எத்தனை குதிரைகளின் வேலையைச் செய்யும் என ஜேம்ஸ் வாட் சொல்லவேண்டி வந்தது.

இதற்காக ஜேம்ஸ் வாட், அரவை மில்களில் குதிரைகள் செலுத்தும் சக்தி (பவர் - Power) எவ்வளவு என அளவிட முற்பட்டார். அரவை மில்களில் (Mill) செக்கை சுற்றவைக்கும் சுழல்தண்டு 12 அடி நீளம் கொண்டதாக இருந்தது. எனவே சுழல்தண்டை இழுத்துக் கொண்டே செக்கை சுற்றிவரும் குதிரை 12 அடி ஆரம் கொண்ட வட்டப் பாதையில் செல்வதைப் பார்த்தார்.

அதாவது ஒரு சுற்றில் வட்டத்தின் சுற்றளவின் அளவுக்கு, குதிரை அந்தச் செக்கை இழுத்துச் செல்கிறது. இது சுமார் 75 அடி (2 π × 12) நீளம். மேலும் குதிரை சராசரியாக ஒரு மணி நேரத்தில் 144 தடவை செக்கைச் சுற்றி வந்தது.

ஒவ்வொரு சுற்றிலும் குதிரை 81.6 கிலோ விசையைச் செலுத்துகிறது என மதிப்பிட்டார். அதாவது, 14968.5 கிலோ எடையுள்ள பொருளை ஒரு நிமிடத்தில் ஒரு அடி உயரத்துக்கு உயர்த்துவதே, 'ஒரு குதிரைத் திறன்'. இந்த அளவை ஜேம்ஸ் வாட் 1783ல் வகுத்தார். இப்போது 'குதிரைத் திறன்' எனும் 'அளவை' கைவிடப்பட்டு, ஆற்றலின் அளவு, ஜேம்ஸ் வாட் நினைவாகவே 'வாட்' (Watt) என்ற அளவையாக வரையறை செய்யப்பட்டுள்ளது. வேடிக்கைதானே! இயந்திர இயக்க அளவையில் ஒரு குதிரைத் திறன் 745.69987158227 (W) வாட் என்றும், மின் ஆற்றலில் ஒரு குதிரைத் திறன் 746 W என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

நிறையப் படிக்க வேண்டி இருக்கிறது. தூங்குவதால் நேரம் வீணாகிறது. தூங்காமலேயே இருந்துவிட்டால் என்ன ஆகும்?

- கிருஷ்ணவேணி, திண்டுக்கல்.


நாம் அனைவரும் நமது வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தூங்குகிறோம். 'தூக்கம் என்பது வீண்; பயனுள்ள செயல் எதையும் நாம் உறக்கத்தில் செய்வதில்லை' எனக் கருதுகிறோம். தூங்குபவர்கள் சோம்பேறி என்று சொல்வது, அறிவுரை கூறுவது எல்லாம் அதனால்தான்.

நாம் ஏன் உறங்குகிறோம் என்பது குறித்து முறையான ஆய்வுகளை சமீப காலம்வரை யாரும் மேற்கொள்ளவில்லை. எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம், 'உணவு இல்லாமல் கூட இருந்துவிடலாம்; தூக்கம் இல்லாமல் இருக்க முடியாது' என்பது விளங்கியது.

மனிதன் மட்டுமல்ல... எல்லா விலங்குகளும் உறங்குகின்றன. 'உறங்கவே உறங்காது' எனப் பலரும் நம்பியிருந்த டால்பின்கூட (Dolphin) ஒரு கண்ணை மூடியவாறு, மூளையின் ஒரு பாதி விழிப்புடனும், மற்ற பாதி உறக்க நிலையிலுமாக ஓய்வு எடுக்கிறதாம்.

ஆழ்ந்த உறக்கத்தில்தான் உடல் உறுப்புகளின் புதுப்பிப்புப் பணிகள் பெருமளவில் நடைபெறுகின்றன. உடலின், நோய் எதிர்ப்பு அமைப்பு தீவிரமாக இயங்கி, கிருமிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராடுவதும் உறங்கும் நேரத்தில்தான்.

விழிப்பு நிலையில் நிறைய காட்சிகளைக் காண்கிறோம். பல செய்திகளைக் கேட்கிறோம். அதாவது ஏகப்பட்ட செய்திகள் நமது மூளையில் தற்காலிக நினைவுகளாகப் பதிவாகின்றன. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து இருந்தால் மூளைக்குச் சுமை கூடிவிடும். வேண்டியது எது, வேண்டாதது எது எனப் பிரித்துப் பகுத்து, தேவையான நினைவுகளை மட்டும் நீண்ட கால ஞாபகமாகப் பதிய வேண்டும். ஆழ்ந்த உறக்க நிலையில்தான் மூளை, இது மாதிரியான ஒழுங்கமைப்பு வேலைகளைச் செய்துகொள்கிறது. மூளை செல்களின் இடையே ஏற்படும் பிணைப்புகளில் முக்கியமானவை உறுதிப்படுத்தப்படுவதும் மற்ற பிணைப்புகள் மங்கி மறைவதும் தூக்க நிலையில்தான்.

போதிய உறக்கம் இல்லாத நிலையில் கற்றல் திறன் மங்குகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, போதுமான நேரம் அவசியம் தூங்குங்கள். புத்துணர்ச்சியுடன் புத்தகங்களைப் படியுங்கள்.

நாம் படிப்பது மூளையில் எப்படிப் பதிகிறது?

- V.பூபேஷ் ரெத்தினம், தர்மராஜபுரம், பரமக்குடி


நாம் படிப்பது, பார்க்கிற முகம், பொருள்கள், இருப்பிடம் என எல்லாம் மூளையில் உள்ள நரம்பு செல்களான நியூரான்களின் (Neurons) இணைப்புதான்.

மூளை, நரம்பு மண்டலம் ஆகிய பகுதியில் சிறப்பு வகை செல்களான நியூரான்கள் உள்ளன. பல்புக்கு (Bulb) மின்சாரம் ஏந்திச் செல்லும் வயர் (Wire) போன்று இது செயல் புரிகிறது. ஒரு நியூரானில் இருந்து அடுத்த நியூரானுக்கு குறிப்பை எடுத்துச் செல்ல 'அக்ஸான்' (Axon) எனும் நரம்பிழை வால் இருக்கிறது.

இது தவிர, ஒரு நியூரானிலிருந்து அடுத்த நியூரானுக்கு தகவல் கடத்தும் 'டெண்ட்ரைட்ஸ்' (Dendrites) எனப்படும் நுண் இழைகள் சிலந்தியின் கால்களைப் போல எல்லா திசைகளிலும் விரிந்து இருக்கும். ஒரு நியூரானின் நூற்றுக்கணக்கான 'டெண்ட்ரைட்ஸ்', அடுத்து உள்ள நியூரானின்களின் அக்ஸான்களோடு பிணைந்து மூளை செல்கள் எல்லாம் ஒரு வலைப் பின்னல் போல இருக்கும்.

ஒரு நியூரானின் 'டெண்ட்ரைட்ஸ்' அடுத்த நியூரானின் 'அக்ஸான்' உடன் நேரடியாக எப்போதும் பிணைந்து இருக்காது. 'டெண்ட்ரைட்ஸ்', 'அக்ஸான்' இடையே 'சைனாப்ஸ்' (Synapse) எனும் சிறு இடைவெளி இருக்கும். நினைவு என்பது பல லட்சம் நியூரான்கள் தங்களது 'சைனாப்ஸ்' தொடர்பை ஏற்படுத்தி வலைப்பின்னல் ஆக்குவதுதான்.

மனித மூளையில் சுமார் ஆயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வேறு 10,000 நியூரான்கள் உடன் தொடர்பு ஏற்படுத்தி தனித் தனி வலைகளை ஏற்படுத்த வல்லவை. இவ்வாறு நூறு ட்ரில்லியன் (Trillion) இணைப்புகளை மனித மூளையில் ஏற்படுத்த முடியும். மூளையில் பதிகிற விஷயங்களுக்கு வருவோம்.

நீண்ட கால நினைவு என்பது மிக உறுதியாக ஏற்படும் வலைப் பின்னல் பிணைப்பு. 'ஷார்ட் டைம் மெமரி' (Short Time Memory) என்பது தளர்வாக ஏற்படும் பிணைப்பு. சில விஷயங்கள் நினைவில் பதிந்திருக்கும். அந்த நினைவுகள் அகன்றதும் வேறு நினைவுகளைப் பதிவு செய்ய இடம் கிடைக்கும்.

கந்தல் ஆகிவிட்ட சேலை, நூல் நூலாகப் பிரிவது போல, வயது கூடும்போதும், மூளைத் தளர்வு ஏற்படும்போதும் இந்தப் பிணைப்புகள் தளர்ந்து பிரிந்துவிடுகின்றன. அப்போதுதான் நினைவு தப்புகிறது. மறதி வியாதி ஏற்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us