PUBLISHED ON : பிப் 01, 2016

நமக்குத் தெரியாத எதையும் கூகுளில் தேடிப் பார்த்து உடனே அறிந்து கொள்கிறோம். கூகுள் நிறுவனம் கூகுள் வரைபடம் (Google Maps), கூகுள் பூமி (Earth) போன்ற துணை சேவைகளையும் அளித்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
கூகுள் வரைபட சேவையைப் பயன்படுத்தி பூமியைப் பறவைப் பார்வையாக (பேர்ட்ஸ் ஐ வியூ - Bird's eye View) பார்க்கலாம். இருப்பிடங்களைத் தெரிந்து கொள்ளலாம். பார்த்தபடியே உலகில் பல பகுதிகளில் உலா வரவும் செய்யலாம். கூகுள் ஸ்ட்ரீட் வியூ (Google Street View) அதற்கு வழி செய்கிறது. தற்போதுள்ள எல்லா ஸ்மார்ட் போன்களிலும் இந்த வசதி இருக்கிறது.
இந்த ஸ்ட்ரீட் வியூ, கூகுள் வரைபட சேவையில் தரப்படுகிறது. இதில் குறிப்பிடப்படும் இடங்களை 360 டிகிரி காட்சிகளாகக் காண முடியும் என்பதுதான் இந்தச் சேவையின் சிறப்பு.
சுற்றுப்புறக் காட்சிகள் முழுவதைம் படம் பிடிக்கும் திறன் கொண்ட விசேஷ காமிராவைக் கொண்டு வீதிகளைச் சுற்றிவந்து கிளிக் செய்த காட்சிகளை ஒன்றாக்கி 360 டிகிரி காட்சிகளை உருவாக்குகின்றனர். இதனால், அந்த இடங்களை நேரில் பார்ப்பது போலவே உணரலாம்.
உலகின் முக்கிய நகரங்களை இப்படி கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் பார்க்கலாம். நகரங்கள் மட்டும் அல்ல, எவரெஸ்ட் மலைச் சிகரம், துருவப் பிரதேசத்து பனிக் கரடிகள், அமேசான் காடுகளில் உலவும் விலங்குகளையும் பார்க்கலாம். கடலுக்கு அடியிலான காட்சிகள் கூட இதில் இடம்பெற்றுள்ளன.
இப்போது கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் பெரு நாட்டில் உள்ள புகழ் பெற்ற மச்சுபிச்சு மலைச்சிகரமும் இடம்பெற்றுள்ளது. வீட்டை விட்டு வெளியே போகாமலேயே பெரு நாட்டு மச்சுபிச்சு மலைப்பகுதியின் சிறப்பு அம்சங்களைத் தெரிந்து கொள்ளலாம். குச்சி வெச்சு மலையேறிக் கஷ்டப்படாமல் இருந்த இடத்திலிருந்து மச்சுபிச்சு மலையில் உலவி அதன் அழகைக் கண்டு ரசிக்க வேண்டுமா?
இங்கே கிளிக் செய்க... https://www.google.com/maps/about/behind-the-scenes/streetview/treks/
