
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி
அனைத்து உலக நாடுகளும் அனுப்பும் செயற்கைக் கோள்கள் விண்வெளியில் உள்ளன. விண்வெளியில் இடம் இல்லை எனில் செயல்படாத செயற்கைக் கோள்களை அங்கிருந்து வெளியேற்ற முடியுமா?
பிரியதர்ஷினி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ராகல்பாவி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
இதுவரை விண்வெளியில் செயற்கைக் கோள்கள் நிறுத்த இடம் இல்லை என்ற நிலை ஏற்படவில்லை. அப்படி ஏற்படுமா என்பதும் சந்தேகமே. இரண்டு முக்கிய வகை செயற்கைக் கோள்கள் உள்ளன. ஒன்று, சரியாக 35,786 கி.மீ. உயரத்தில் பூமியைச் சுற்றிவரும் புவிநிலைச் சுற்றுப்பாதை (Geo-Stationary) செயற்கைக் கோள்கள். இவை ஒரு சுற்று சுற்ற 24 மணிநேரம் ஆகும். இந்தப் பாதையில், சரியாக நிலநடுக்கோட்டுக்கு மேலே, சுமார் இரண்டாயிரம் செயற்கைக் கோள்களை நிறுத்த முடியும். தற்போது சுமார் 220 செயற்கைக் கோள்கள்தான் அங்கே உள்ளன. புவிநிலைச் சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்களை நிறுத்த, ஐ.நா.வின் சர்வதேசத் தொலைத்தொடர்பு சங்கத்திடம் (International Telecommunication Union) ஒப்புதல் பெறவேண்டும்.
இரண்டாவது வகை செயற்கைக் கோள்கள் பூமியிலிருந்து சுமார் 200 முதல் 1200 கி.மீ. உயரத்தில் பூமியைச் சுற்றிவரும். இவற்றில் பெரும் பிரச்னை ஏதுமில்லை. இருப்பினும் ஏதாவது சிக்கல் எழலாம் என விஞ்ஞானிகள் அறிந்துதான் 'ஐக்கிய நாடுகளின் விண்வெளிக்கு ஏவப்படும் பொருள்களின் பதிவு அமைப்பு' (United Nations Register of Objects Launched into Outer Space) என்ற அமைப்பை 1962 ல் உருவாக்கி உலக நாடுகள் தாமே முன்வந்து தெரிவிக்கும் தகவல்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
ஒலிபெருக்கியில் (Mike) பேசும்போது அவ்வப்போது 'கிரீச்' என்கிற வித்தியாசமான சத்தம் வருவது எதனால்?
ஆர்.சஜீவ் கிருஷ்ணா, 9ஆம் வகுப்பு, மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளி, மதுரை.
ஒலிபெருக்கியில் அப்படி சத்தம் வருவது ஒலிப்பின்னூட்டி (Acoustic Feedback) எனும் விளைவால்தான். எடுத்துக்காட்டாக, மைக் முன்பு பேசிய பேச்சு மறுபடியும் அதே சத்த அளவில் மைக் மீது மறுபடி விழும்படியாக ஸ்பீக்கர் நிலை இருந்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள். மைக் வழியாகச் செல்லும் சத்தம் ஒலி பெருக்கப்பட்டு ஸ்பீக்கர் வழி மறுபடி வெளிப்பட்டு மைக் வழி செல்லும். இவ்வாறு மறுபடி மறுபடி பின்னூட்டம் இடும்போது ஏற்படும் இந்த பின்னூட்டத்தின் அலைவு 'கிரீச்' என்ற சத்தமாக, ஒலி அலைகளாக வெளிப்படுகிறது.
உங்களிடம் ஸ்பீக்கர் மைக் உள்ள கணினி இருந்தால் ஒரு சோதனையில் இதை நீங்கள் செய்து பார்க்கலாம். உங்கள் மைக் மற்றும் ஸ்பீக்கர் அளவைக் கூட்டி வைக்கவும். பின்னர் மைக்கை ஸ்பீக்கர் அருகே பிடிக்கவும். மைக் முன்பு ஏதாவது சத்தம் ஒரே ஒருமுறை மட்டும் செய்யவும். ஒலி மைக், ஸ்பீக்கர், மைக், ஸ்பீக்கர் என மாறிமாறி அலைந்து 'கிரீச்' என ஒலி ஏற்படுத்துவதைக் கேட்கலாம்.
ஒரு எலக்ட்ரிக் சர்க்யூட் முழுமை அடைய பேஸ் (Phase) மற்றும் நியூட்ரல் (Neutral) தேவைப்படுகிறது. நியூட்ரல் வழியாக மின்சாரம் முழுமை அடைகிறது. அப்படி இருக்கும்போது நியூட்ரலைத் தொட்டால் நமக்கு ஷாக் (Shock) அடிப்பது இல்லையே, ஏன்?
கதிரவன், கடலூர்.
மின்துடிப்பு எலக்ட்ரிக் சர்க்யூட்டில் பேஸ் வழியாகச் சென்று மின் சாதனத்தை அடைந்து, பின்னர் நியூட்ரல் வழியாகச் சென்று பூமியை அடைந்து சுற்று முழுமை அடைவதைத்தான் மின்சாரம் பாய்கிறது என்கிறோம். இங்கே பேஸ் மற்றும் நியூட்ரல்களுக்கு இடையே உள்ள மின்னழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க, மின்னாற்றலும் அதிகரிக்கும்.
மின்சாரம் பாயும் பேஸ் வயரை (Phase Wire) தொடும்போது நமது உடல் வழியாக மின்சாரம் பாய்ந்து பூமியை அடைந்து எர்த் (Earth) ஆகிறது. அதாவது நமது உடல் நியூட்ரல் வயர் போலச் செயல்படுகிறது. அப்போது நமக்கு ஷாக் அடிக்கும்.
இந்தியாவில் பொதுவாக பேஸ் மின்கம்பியின் மின்னழுத்தம் சுமார் 240 வோல்ட்ஸ் (Volts). அதே சமயம் நியூட்ரல் மின்கம்பியின் மின்னழுத்தம் பொதுவாக பூஜ்யம் என்றுதான் வைத்து இருப்பார்கள். எனவே, பூஜ்யம் அளவு மட்டுமே மின்னழுத்தம் உடைய நியூட்ரல் மின்கம்பி வழியாக மின்சாரம் நம் உடலில் பாயாது.
ஏழு தலைமுறையோடு ஒரு குடும்பம் முடிந்துவிடும் என்கிறார்கள். அதன் பிறகு அந்தத் தலைமுறை வாரிசுகள் என்ன ஆவார்கள்?
டி.சூர்யா, 12ஆம் வகுப்பு, சசுரி வித்யா பவன், திருப்பூர்.
ஏழு நிறம், ஏழு கடல் என்பது போல ஏழு தலைமுறை என்பது பேச்சு வழக்கு மட்டுமே. ஆயினும் வியப்பாக, இதுவரை ஒரே சமயத்தில் அதிக பட்சம் ஏழு தலைமுறையை சார்ந்தவர்கள் தாம் ஒருங்கே உயிருடன் இருந்துள்ளனர். சுமார் 109 வயதான அகஸ்டா பங்கே (Augusta Bunge), அவரது 89 வயது மகள், 70 வயது பேத்தி, 52 வயது கொள்ளுப் பேத்தி, 33 வயதான அவரது மகள், 15 வயதான அடுத்த வாரிசு, அவரது கைக்குழந்தை என 1989இல் ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஏழு தலைமுறை ஒரே சமயத்தில் இனம் காணப்பட்டனர்.
நமது செல்களில் மைட்டோகாண்ட்ரியா எனும் பகுதி இருக்கிறது. அதில் சிறு நுண் மரபணு (DNA) உள்ளது. செல்களின் கருவில் உள்ள மரபணுவில் சரிபாதி அம்மாவிடமிருந்து வருகிறது. மறுபாதி அப்பாவிடமிருந்து வருகிறது. ஆனால் மைட்டோகாண்ட்ரியா மரபணு, தாயிடம் இருந்து மட்டுமே வழிவழியாக வருகிறது. எனவே, எனக்குள் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா மரபணு என் தாயுடையது மட்டுமே. அதுபோல எனது தாயின் மைட்டோகாண்ட்ரியா எனது தாய்வழிப் பாட்டியிடமிருந்து வருகிறது. இவ்வாறு தாய் வழியில்தான் அறிவியல் பூர்வமாக வம்ச ஆய்வு மேற்கொள்ள முடியும்.