PUBLISHED ON : ஜூன் 20, 2016

ஃபெவிகால் (Fevicol) பட்டால் இரும்பு ஒரே நாளில் துருப்பிடிப்பது ஏன்?
ப.ஜெயக்குமார், 7ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, மாடாம்பூண்டி.
ஃபெவிகால் போன்ற செயற்கை பசைகள், பாலிவினைல் அசிடேட் (Polyvinyl Acetate) போன்ற வேதிப் பொருட்களால் ஆனது. இவை ஓரளவு அமிலத்தன்மை கொண்டவை. காற்றில் உள்ள நீர்ப் பசையை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையும் கொண்டவை. எனவேதான், இவற்றைக் காற்றுப் புகாமல் வைக்க வேண்டும். அமிலமும் ஈரமும் சேர்ந்து இரும்பைத் துருப்பிடிக்க வைக்கும். இந்த வகைப் பசைகளை உலோகங்களில் பயன்படுத்தக்கூடாது.
இன்வெர்ட்டர் (Inverter) எப்படி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது?
கு. ஜெயரூபிகா, 7ஆம் வகுப்பு, பி.எஸ்.பி.பி. மில்லினியம் பள்ளி, கிருகம்பாக்கம், சென்னை.
இன்வெர்ட்டர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. அதில் உள்ள மின்கலனில் (Battery) மின்சாரத்தைச் சேமித்து வைத்துக்கொள்கிறது. மின்தடை ஏற்படும்போது சேமித்த மின்சாரத்தை வெளியே அனுப்பி விளக்கு, மின் விசிறி முதலிய மின் சாதனங்கள் இயங்கத் தேவையான மின்சாரத்தைத் தருகிறது. மின்கலனில் சேமித்த மின்சாரத்தையே இன்வெர்ட்டர் தருவதால்தான் நீண்ட நேரம் மின்தடையில் வேலை செய்யாது. மேலும் அவ்வப்போது மின்கலனை மாற்றவும் வேண்டும்.
பூமி 23 1/2 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது. அப்படி இல்லாமல் நேராகச் சுற்றினால் பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
வே.தினேஷ், 8ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, திருப்போரூர்.
பூமியின் சுற்றுப்பாதை நீள் வட்டம். எனவே ஒரு புள்ளியில் சூரியனுக்கு அருகேயும்; ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தொலைவிலும் இருக்கும். இதனால்தான் சுட்டெரிக்கும் கோடைக் காலமும் நடுங்க வைக்கும் குளிர் காலமும் ஏற்படுகிறது எனத் தவறாக நம்மில் பலர் கருதுகின்றனர். இது தவறான கருத்து. வட கோளத்தில் குளிர் காலமாகிய ஜனவரி மாதத்தில்தான் பூமி சூரியனுக்கு அருகே உள்ளது. பூமியின் அச்சு சாய்வாக உள்ளது. அதன் காரணமாக பூமியின் வட கோளத்தில் ஆறு மாத காலம் சூரிய ஒளி சாய்வாக விழுகிறது. அப்போது அங்கே குளிர் காலம். ஆறு மாதம் நேராக விழுகிறது. அது கோடை காலம். வடகோளத்தில் சாய்வாக சூரிய ஒளி விழும்போது தென் கோளத்தில் நேராக விழும்.
டார்ச் விளக்கை ஒரே உயரத்திலிருந்து நேராகவும் சாய்வாகவும் பிடித்து ஒளியை அடித்து சோதனை செய்து பார். நேராகப் பிடிக்கும்போது அந்த டார்ச் லைட் தரும் ஒளி முழுவதும் வட்ட வடிவில் படரும். சாய்வாகப் பிடிக்கும் போது முட்டை வடிவில் கூடுதல் பரப்பளவில் அதே ஒளி படரும். எனவே ஒவ்வொரு புள்ளியிலும் விழும் ஒளியின் அளவு குறையும். இவ்வாறுதான் ஒரு சமயத்தில் நேராகவும் ஒரு சமயத்தில் சாய்ந்தும் சூரிய ஒளி படருவதன் மூலம் பருவகால மாற்றம் ஏற்படுகிறது. பூமியின் அச்சு சாயாமல் நேராக இருந்தால் கோடை காலம், குளிர் காலம் என்றெல்லாம் பருவ மாறுதல்கள் ஏதும் இராது. எப்போதும் எல்லா இடத்திலும் ஒரே தட்பவெப்ப நிலை நிகழும்.
மெழுகுவர்த்தியைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் மேல்நோக்கியே எரிகிறதே, எப்படி?
M.திவ்யேஷ் மனோலால், 8ஆம் வகுப்பு, நோபல் மெட்ரிக், விருதுநகர்.
மெழுகுவர்த்தியின் தீப்பிழம்பு என்பது என்ன? வெப்பநிலையில் மெழுகு உருகி ஆவியாகி வெளிப்படுவதுதான்! அவ்வாறு ஆவியாக வெளிப்படும் வாயுவில் ஏற்படும் ஆச்சிஜன் ஏற்றம்தான் எரிதல் எனும் வேதிவினை. எனவே தீப்பிழம்பு என்பது வேதிவினை நடக்கும் ஆவியாகிய மெழுகுதான். வெப்பமுள்ள பொருள்களின் அடர்த்தி குறைவு. காற்றை விட அடர்த்தி குறைவான பொருள்கள் மேலே செல்லும். அவ்வாறுதான் தீப்பிழம்பு பூமியில் எப்போதும் மேல் நோக்கியே அமைகிறது.
விலங்குகள், மனிதர்கள் போல மரம், செடி, கொடி எல்லாம் உயிரினங்கள்தானே? அப்படி என்றால் அவற்றின் கழிவுகளை எவ்வாறு வெளியேற்றுகின்றன?
V.தேஜஸ்வி, 5ஆம் வகுப்பு, அத்யாபனா பள்ளி, மதுரை.
மனிதன், விலங்குகள் இடும் கழிவுகள் கண்களுக்குப் புலப்படும்படியும் அருவருப்பு ஊட்டும்படியும் உள்ளது. தாவரங்களும் கழிவுகளை வெளியிடுகின்றன. அந்தக் கழிவை நாம் பெரிதும் பயன்படுத்துகிறோம். தாவரத்தின் கழிவில் உள்ள முக்கியப் பொருள் ஆக்சிஜன். ஒளிச்சேர்க்கை வினையின்போது தமக்கு உணவு தயாரித்துக்கொள்ளும் தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடை உள்வாங்கி, கழிவுப் பொருளாக ஆக்சிஜனை வெளியிடுகின்றன. மேலும் தாவரம் தனது இலை, மரப்பட்டைகளில் கழிவினைத் தேக்கி வைத்துவிடுகிறது. அவ்வப்போது இலைகள், மரப்பட்டை உரிந்து உதிர்ந்து கழிவுகள் வெளியேறுகின்றன. மரம் மற்றும் தாவரங்களில் கசியும் பிசின், பிசுபிசுக்கும் பால், ரப்பர் முதலியவை அனைத்தும் தாவரங்களின் கழிவுதான்.
அதுமட்டுமல்ல தேயிலையின் சுவை, மணம் தரும் 'டானின்' (Tannin) எனும் வேதிப்பொருள் கூட அதன் கழிவுதான். அதேபோல எலுமிச்சை மரத்தின் கழிவுப் பொருள்தான் எலுமிச்சையின் நறுமணத்தை நமக்குத் தருகிறது. யூகலிப்டஸ் மரம் எனப்படும் தைல மர எண்ணெயை நாம் தலைவலிக்குத் தடவுகிறோம். அதுவும் அந்த மரத்தின் கழிவுப் பொருள்தான். காபியின் 'காப்பின்', புகையிலையின் 'நிக்கோட்டின்' எல்லாம் கழிவுப் பொருள்கள்தான். இவை நமக்குக் கழிவாகத் தெரிவதில்லை, அவ்வளவுதான்!
