PUBLISHED ON : ஜூன் 20, 2016

ம.பொ.சிவஞானம் பிறந்த தினம் ஜூன் 26
வறுமை காரணமாக மூன்றாம் வகுப்போடு பள்ளிக் கல்வியை நிறுத்தியவர். குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் புரிந்தவர். சிறு வயதிலேயே
அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். இப்படிப்பட்ட ஒருவரால் என்னவெல்லாம் சாதித்திருக்க முடியும்?! தெரிந்து கொள்வோம் வாருங்கள்! சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தவர் ம.பொ.சி. எனப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். வறுமை காரணமாக, தனது பள்ளிப் படிப்பை மூன்றாவதோடு நிறுத்திவிட்ட ம.பொ.சி. அச்சு கோர்க்கும் பணியில் சேர்ந்தார். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார். சைமன் கமிஷன் எதிர்ப்பு, சட்டத்தை மீறி ஊர்வலம், ஆங்கிலேய அரசை எதிர்த்து துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் என பல போராட்டங்களில் கலந்து கொண்டு 1928 முதல் 1947 வரை ஆறு முறை சிறைத் தண்டனை அனுபவித்தார். எழுநூறு நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்த ம.பொ.சி. தன் சிறைக் காலத்தில் சிலப்பதிகாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்.
'தமிழரசுக் கழகம்' என்ற கட்சியை 1946ல் நிறுவி அதன் தலைவராகச் செயல்பட்டார். மாநில சுயாட்சி என்னும் தத்துவத்தை முதன் முதலாகச் சிந்தித்து தமிழர்களுக்கு வழங்கிய தலைவர் ம.பொ.சி.தான். 1954-ல் சென்னை மாநகராட்சிக் கல்விக் குழுத்தலைவராக இருந்து 1954ல் சென்னை மாநகராட்சிக் கொடியில் தமிழ் மூவேந்தரின் சின்னங்களாகிய வில், புலி, மீன் போன்ற சின்னங்களைப் பொறித்திட, தீர்மானித்துப் பிறரையும் ஒப்புக்கொள்ள வைத்து வெற்றி பெற்றார். 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை மாற்றி 'தமிழ்நாடு' என்ற பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நேரத்தில் சென்னைதமிழகத் தலைநகராக ஆக்கப்பட வேண்டும் என்று போராடினார். திருப்பதியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டார். அதில் வெற்றி கிடைக்கவில்லை, ஆனால் அந்த எல்லைப் போராட்டத்தால் திருத்தணி ஆந்திரத்துக்கு போகாமல் தமிழகத்துக்குக் கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிகுளம் போன்ற தாலுகாக்கள் தமிழகத்துக்கு கிடைக்கவும் போராடினார். குமரியும், செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர்மேடு, தேவிகுளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.
பாரதியின் எழுத்துக்கள் மூலம் ம.பொ.சி. சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார். திருவள்ளுவர், பாரதியார், ராமலிங்க அடிகள் ஆகியோரைப் பற்றியும்,
சிலப்பதிகாரத்தைப் பற்றியும் பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் இவர் செங்கோல், தமிழன் குரல், தமிழர் முரசு போன்ற பத்திரிகைகளையும் நடத்தியுள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தலைப்புகளில் நூல்களை எழுதினார். அவை திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. ம.பொ.சி. எழுதிய 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. சிலப்பதிகாரத்தைப் பற்றிய இவரது மேடைப் பேச்சுகள் மிகப் பிரபலமானவை. சிலம்புச் செல்வர் என்ற பட்டம், பத்மஸ்ரீ விருது என பல பட்டங்களையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.
'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்ற வீர வரியைத் தாரக மந்திரமாகக் கொண்டு ஓயாது உழைத்த தலைவர் ம.பொ.சி.
