PUBLISHED ON : ஜூன் 20, 2016

மூளைக்கு வேலை தருகிற சவாலான விளையாட்டு 'க்யூப்' (Cube). ஒரே மாதிரியான வண்ணம் ஒரே பக்கத்தில் வருவது போல, சதுரங்களை இணைக்கிற விளையாட்டு.
'க்யூப்' விளையாட்டை உருவாக்கியவர் ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக்கலைப் பேராசிரியர் 'எர்னோ ரூபிக்' (Erno Rubik). இவர் புதுமையான ஒரு கன சதுரத்தை 1974ல் உருவாக்கினார். அதை எல்லாப் பக்கங்களிலும் திருப்ப முடியும். ஆனால், தனித்தனியாகப் பிரிக்க முடியாது. அதன் பக்கங்களில் வெவ்வேறு வண்ண ஸ்டிக்கர்களை ஒட்டி ஒரு விளையாட்டாக வடிவமைத்தார். இதுவே முதன்முதலில் உருவாக்கப்பட்ட 'க்யூப்'. தன் கண்டுபிடிப்புக்கு ரூபிக் வைத்த பெயர் 'மேஜிக் க்யூப்' (Magic Cube). ஜெர்மனி நாட்டின் 'நூரெம்பர்க்' (Nuremberg) நகரில் 1979-ல் நடைபெற்ற விளையாட்டுப் பொருள் கண்காட்சியில் இது இடம் பெற்றது.
பின்னர், 'ஐடியல் டாய் கார்ப்பரேஷன்' (Ideal Toy Corporation) என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனம், 1980-ல் 'ரூபிக்ஸ் க்யூப்' என்று பெயர் மாற்றியது.
உலகின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் இதில் விளையாடி இருக்கின்றனர்.
இந்த விளையாட்டு மிகப் பிரபலம் ஆனது. அதைத் தொடர்ந்து, ரூபிக்ஸ் க்யூப் மாதிரி வடிவமைக்கப்பட்ட கேக், சாக்லெட் வகைகள், எம்.பி3 ப்ளேயர்கள் (MP3 Players), கீ செயின், காபி கோப்பை, விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட க்யூப்ஸ் என, ஏகப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டன.
உலகின் மிகப் பெரிய 'ரூபிக்ஸ் க்யூப்' அமெரிக்காவின் 'டென்னெஸ்ஸீ' (Tennessee) மாகாணத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது 500 கிலோ எடையும் மூன்று மீட்டர் உயரமும் கொண்டது.
க்யூப் வண்ணங்களை வேகமாகச் சேர்க்கிற போட்டிகள் 2003ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன. ஒரு கையை மட்டும் உபயோகித்து வண்ணங்களை ஒன்று சேர்ப்பது, கால்களால் மட்டுமே வண்ணங்களை ஒன்று சேர்ப்பது என்று இப்போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்கின்றன.
ஜெர்மனியின் சிறந்த விளையாட்டுக்கான விருதை ரூபிக் க்யூப் 1980ல் பெற்றது.
நாற்பது ஆண்டுகளைத் தாண்டியும் வெற்றிநடை போடுகிறது ரூபிக் க்யூப் விளையாட்டு. மிக அதிகமாக விற்பனையாகும் விளையாட்டுப் பொருள் இது! உலகத்தில் இதுவரை விற்பனையான ரூபிக் கன சதுரத்தின் எண்ணிக்கை 35 கோடி!
