PUBLISHED ON : ஜூன் 20, 2016

குமிழி உறைத்தாள்கள் (பபுள் ராப் / Bubble Wrap) கையில் கிடைத்தால் உடைத்து விளையாடி இருக்கிறீர்களா? 'டப்' 'டப்' என்று அவற்றை நசுக்கி விளையாடுவதில் நமக்கு ஒரு ஜாலி... மகிழ்ச்சி... பொருட்களை பத்திரமாக சுற்றி அனுப்புவதற்காக குமிழி உறைத்தாள் பயன்படுகிறது. ஆனால் இவை பொருட்களை அனுப்புவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. நியூ ஜெர்சியைச் சேர்ந்த 'அல் ஃபீல்டிங்' (Al Fielding), 'மார்க் சாவன்ஸ்' (Marc Chavannes) என்ற இரு விஞ்ஞானிகள், 1957ல், சுவர்களில் ஒட்டி டிசைன் செய்யக்கூடிய வால்பேப்பராக முதன் முதலில் குமிழி உறைத்தாளை வடிவமைத்தனர். இரண்டு ப்ளாஸ்டிக் பேப்பரை ஒன்றின்மேல் ஒன்று ஒட்டி அதிலிருக்கும் சின்னச்சின்ன காற்றுப்பைகளை உருவாக்கிய அந்த வடிவமைப்பு பெரிதாக எடுபடவில்லை. கொஞ்சம் யோசித்த விஞ்ஞானிகள் இருவரும் வால்பேப்பரை பேக்கேஜ் செய்யப்பயன்படும் பேப்பராக மாற்றி வெற்றிபெற்றனர். பின்னர் 'சீல்டு ஏர் கார்ப்பரேஷன்' (Sealed Air Corporation) என்ற நிறுவனத்தைத் தொடங்கி 'பபுள் ராப்' என்ற பெயரை வர்த்தகக் குறியாகப் (Trade Mark) பதிவு செய்தனர். பிரபல ஐ.பி.எம். கணினி நிறுவனம் தன் முதல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை விற்கத் தொடங்கியபோது, அவற்றைப் பேக் செய்ய குமிழி உறைத்தாளை உபயோகித்தது. அதன் பிறகு பல நிறுவனங்கள் குமிழி உறைத்தாள்களை பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்த ஆரம்பித்தன. குமிழி உறைத்தாளையும் ஒரு விளையாட்டாக மாற்றியது நம் கண்டுபிடிப்பு!
