ஞாநி எழுதும் மாலுவின் டயரி (23) - அதிகாரம் என்றால் என்ன?
ஞாநி எழுதும் மாலுவின் டயரி (23) - அதிகாரம் என்றால் என்ன?
PUBLISHED ON : ஜூன் 20, 2016

“அதிகாரம்ன்னா என்னன்னு சொல்லு பார்ப்போம்” என்று கேட்டான் பாலு. “எந்த அதிகாரத்தைக் கேட்கறே? திருக்குறள்ல வர்ற 133 அதிகாரத்தையா?”
“அது, ஒரு புத்தகத்தைப் பகுதிகளா பிரிக்கறது. அதைக் கேக்கல. இந்த வாலு, நான் அது மேல எப்பவும் என் அதிகாரத்தைக் காட்டிகிட்டிருக்கேன்னு சொல்லுது. அந்த அதிகாரம்ன்னா என்ன?”
“யோசிக்கணும் பாலு” என்றேன். யோசித்தேன்.
சுற்றிப் பார்த்தால் எங்கேயும் எல்லாரிடமும் அதிகாரம் செயல்பட்டுக் கொண்டே இருப்பது தெரிந்தது. அம்மா என் மீது அதிகாரம் செலுத்துகிறார். அப்பா அம்மா மீது அதிகாரம் செலுத்துகிறார். பள்ளிக்கூடத்துக்குப் போனால், வகுப்பறையில் ஆசிரியருக்குப் பெரிய அதிகாரம் இருக்கிறது. அந்த ஆசிரியரோ பிரின்ஸிபாலின் அதிகாரத்துக்குப் பயப்படுகிறார். அப்பாவுடைய அலுவலகத்துக்குப் போயிருக்கிறேன். அங்கே இருப்பவர்களை எல்லாம் நினைத்துப் பார்த்தேன். எல்லாருக்கும் இன்னொருவர் மீது ஏதோ அதிகாரம் இருக்கிறது. அதே சமயம் ஒவ்வொருத்தரும் தனக்கு மேலே இன்னொரு அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள்.
ஆக, அதிகாரம் என்பது அடுக்கடுக்காக படிநிலையில் இருக்கிறது. உச்சத்தில் யார்? ஒற்றை ஆளாக யாரும் இல்லை. அதிகாரம் என்பது ஒருத்தர் இன்னொருத்தரைக் கட்டுப்படுத்த உதவும் சக்தி. ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? எல்லாரும் ஏதோ ஒரு ஒழுங்குக்குள் செயல்படாவிட்டால் எந்த வேலையும் நடக்காது. அந்த ஒழுங்குக்குள் எல்லாரையும் நடக்கவைக்க அதிகாரம் தேவைப்படுகிறது.
இதற்கு மேல் எனக்கு யோசிக்க முடியவில்லை. ஞாநி மாமா வந்ததும் அவரிடம் கேட்டேன். “அதிகாரம் இல்லாமல் எல்லாவற்றையும் ஒழுங்காக நடக்கவைக்க முடியாதா?”
மாமா கேட்டார், “முடியும். அதற்கு முன்னால் அதிகாரம் என்றால் என்ன என்று முடிவுக்கு வந்துவிட்டாயா?”
“ஒருத்தர் இன்னொருத்தரைக் கட்டுப்படுத்துவது. அவ்வளவுதான் எனக்குத் தோன்றுகிறது.”
“இல்லை” என்று சிரித்தார் மாமா. “ நபர்களை வைத்து அதிகாரத்தைப் புரிந்துகொள்ளாதே. பத்து பேர் ஒன்றாக ஒரு வேலையை செய்யவேண்டி இருக்கிறது என்றால், அதற்குச் சில பொதுவான விதிகளை நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம்.”
“கால்பந்து மாதிரியா?” என்றான் பாலு.
“அதேதான். ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வேலை இருக்கிறது. மிட் - ஃபீல்டர்ஸ், சென்டர் பேக், ஃபுல் பேக் என்று வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு வேலை. கோல் போடும் வேலை எப்போதும் ஃபார்வர்டுஸ் உடையது. அதனால் அவர்களுக்குத்தான் கால்பந்தில் அதிக அதிகாரம் என்று சொல்ல முடியுமா? அதை விட அதிக அதிகாரம் தடுக்கிற கோல் கீப்பர் உடையது என்று ஆகிவிடுமா? இல்லை. எல்லாரும் சில பொது விதிகளுக்காக அவரவர் வேலையைச் செய்கிறார்கள் என்று புரிந்துகொண்டால், அதிகாரம் என்பது ஒருத்தர் இன்னொருத்தரைக் கட்டுப்படுத்தும் கருவி அல்ல என்று புரிந்துவிடும்.எல்லாருமே பொதுவான விதிகளுக்குக் கட்டுப்பட்டு அவரவர் வேலையை செய்வதுதான்” என்றார் மாமா.
“ஹா... எனக்குப் புரிந்துவிட்டது. அதிகாரம் என்பது உண்மையில் பொறுப்பு. ரெஸ்பான்ஸிபிலிட்டி. இல்லையா?” என்றேன்.
“ரொம்ப ரொம்பச் சரி. அந்தப் பொறுப்பை மறந்துவிட்டு, எல்லாரும் எதற்காக ஒரு இடத்தில் ஒன்றாக வேலை செய்கிறோம் என்ற நோக்கத்தை மறந்துவிட்டு, இன்னொருத்தர் மீது தனக்கு இருக்கும் அதிகாரத்தை மட்டும் பயன்படுத்துபவர்களால்தான் பிரச்னை வருகிறது.”
“நிறைய பேர் அப்படித்தானே இருக்கிறார்கள்?”
“ஆமாம். அப்படிப்பட்டவர்களைத்தான் 'அற்ப அதிகாரக்காரர்கள்' என்று வகைப்படுத்துகிறார் அறிஞர் ஆஷ்ஃபோர்த்.”
“அவர்களை எப்படி அடையாளம் காண்பது ?”
“ரவையூண்டு அதிகாரம் இருந்தால் கூட இந்த நபர்கள் தங்கள் இஷ்டத்துக்கு முடிவெடுப்பார்கள். தன்னைப்பற்றி அளவுக்கு மீறிய கர்வத்தோடு இருப்பார்கள். தன்னிடம் வேலை செய்பவர்களை மதிக்காமல் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மட்டம் தட்டிப் பேசிக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களின் கருத்தையும் யோசனையையும் கேட்கமாட்டார்கள். இதே நபர்கள், இவர்களுக்கு மேலே இருப்பவர்களிடம் கை கட்டி வாய் பொத்தி அடிமை மாதிரி இருக்கத் தயங்கவே மாட்டார்கள் என்கிறார் ஆஷ்ஃபோர்த்”
அந்த மாதிரி நிறைய பேரைப் பத்தி அப்பா, வீட்டில் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்.
“அப்ப, அதிகாரத்துல இருக்கறவங்க எப்படி இருக்கணும்?” என்று மாமாவைக் கேட்டேன்.
“நம்ம எல்லாருமேதான் அதிகாரத்தோட இருக்கோம். வெவ்வேற இடத்துல வெவ்வேற அதிகாரம். அவ்வளவுதான். ஆனா அதுல எப்படி இருக்கணும்ங்கறதுதான் முக்கியம். ஒரு பொறுப்பை நிறைவேத்த எனக்கு இந்த அதிகாரம் கொடுத்திருக்கு. பொறுப்புதான் முக்கியம். எனக்குக் கீழே வேலை செய்யிறவங்கன்னு யாரும் இல்ல. எனக்கு மேலன்னும் யாரும் இல்ல. எல்லாரும் என் கூட வேலை செய்யறவங்கதான். ஒவ்வொரு பொறுப்பை நிறைவேத்தறதுக்காக வெவ்வேற அதிகாரத்துல இருக்காங்க. ஒரு நல்ல டீம் லீடர் தன் கூட வேலை செய்யறவங்க கூட அன்பாவும் மரியாதையாவும் இருப்பார். அவங்களுக்கு ஒரு பிரச்னைன்னா, அதை மேல் பொறுப்புல இருக்கறவங்க கிட்டச் சொல்லி எப்படித் தீர்க்கணும்னு முயற்சிப்பார்.மேல் பொறுப்புல இருக்கறவங்க டீம் கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கறாங்கங்கறதை டீமுக்குப் புரியவைப்பார். உண்மையில உலகத்துல அதிகாரிகளே இல்லை. அலுவலர்கள்தான் இருக்கோம். எல்லாருக்கும் செய்ய ஒவ்வொரு அலுவல் இருக்கு.”
“ஆனா மாமா, பிராக்டிகலா இந்த மாதிரி இல்லியே. அதிகாரத்தைப் பொறுப்புன்னு பார்க்கறவங்க கம்மிதானே.”
“ஆழமான விஷயத்தை விட்டுட்டு மேம்போக்கா அதிகாரத்தைப் பார்க்கறதால இப்ப கம்மிதான். ஒரு காலத்துல கார் டிரைவருக்குப் பக்கத்து சீட்டுல ஓனர் உட்கார்ந்து போனா மரியாதை இல்ல. ஓனர் பின் சீட்டுல உட்காரணும்னு நினைச்சாங்க. இப்ப டிரைவருக்குப் பக்கத்துல ஓனர் உக்காந்தாதான் மரியாதைன்னு நினைக்கறாங்க. ரெண்டுமே அசல் பிரச்னை இல்லை. கார்ல போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரணும். அதுக்கான பொறுப்பு கார் ஓடறப்ப டிரைவர் கிட்டதான் இருக்கு. இந்தப் பார்வை உங்க காலத்துல வந்துரும்னு நினைக்கறேன்.” என்றார் மாமா.
“திடீர்னு அதிகாரம் பத்தின ஆராய்ச்சிக்கு என்ன காரணம் ? கலிலியோவா? இந்த மாசம்தான் அவர் மேல கிறித்துவ திருச்சபை அதிகாரம் செலுத்தி அவர் கருத்தை வாபஸ் வாங்க வெச்ச நாள் வருது.”
“நான் அதெல்லாம் யோசிக்கல மாமா. பாலுதான் இதை ஆரம்பிச்சான். கலிலியோ, பூமி சூரியனை சுத்துதுன்னு சொன்னது தப்புன்னு அவரைத் தண்டிச்ச அதே திருச்சபை 377 வருஷம் கழிச்சு அதுக்காக மன்னிப்புக் கேட்டுச்சு இல்லையா?”
“அற்ப அதிகாரம் நீண்ட நாள் நீடிக்க முடியாதுங்கறதுக்கு அதுவே உதாரணம். அதுக்காக ஒவ்வொரு விஷயத்துக்கும் நாம 377 வருஷம் காத்திருக்கிற மாதிரி ஆகக் கூடாது. தப்புன்னு தெரிஞ்ச உடனே திருத்திக்கறவங்கதான் அதிகாரத்தைப் பொறுப்பா நினைக்கறவங்க. திருந்தமாட்டேன்னு பிடிவாதமா இருக்கறவங்க அற்ப அதிகாரக்காரங்க” என்றார் மாமா.
“அப்ப பாலு யார்?” என்று கேட்டது வாலு.
“அதை நீங்க மூணு பேரும் பேசி முடிவு பண்ணுங்க” என்று எஸ்கேப் ஆனார் மாமா.
வாலுபீடியா1: என் அதிகாரத்தைப் பயன்படுத்தி டயரிக்கு சம்பந்தமில்லாத டேட்டா தரப் போறேன். ஜூன் மாசத்துல நிறைய முதல் விஷயங்கள் நடந்துருக்கு. ஜூன்23, 1888ல அமெரிக்காவில முதல் முறையா ஒரு கறுப்பர் ஜனாதிபதி தேர்தலுக்கு நாமினேட் ஆனார். பிரடெரிக் டக்ளஸ். ஜூன் 27, 1967ல லண்டன்ல முதல் ஏ.டி.எம் மெஷின் திறந்தாங்க. ஜூன் 25, 1667ல முதல்முறையா ஒருத்தர் ரத்தத்தை இன்னொருத்தருக்குக் கொடுக்கலாம்னு பிரெஞ்ச் டாக்டர் ஜீன் டெனிஸ் செய்து காட்டினார். ஜூன் 24, 2004ல நியூயார்க்ல மரண தண்டனையை ஒழிச்சாங்க.
