PUBLISHED ON : டிச 05, 2016

கடலில் அலைகள் உருவாகக் காரணம் என்ன? பௌர்ணமி, அமாவாசை அன்று அலைகள் உயரமாக எழுவது ஏன்?
பி. சௌஜன்யா, 7ம் வகுப்பு, பாரதிய வித்யா பவன், கோவை
தரைப்பகுதியில் அடிக்கும் காற்றே, கடலில் அலைகளை ஏற்படுத்துகிறது. சாதாரணமாக உருவாகும் அலைகளுக்கும், பௌர்ணமி, அமாவாசை அன்று ஏற்படும் கடலேற்ற, கடலிறக்க நிகழ்வுகளுக்கும் வேறுபாடு உள்ளது. கடலேற்ற அலைகள் என்பவை, சூரியன், சந்திரனின் ஈர்ப்பு விசைகளால் கடல்மட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே! கடலேற்ற அலைகளுக்கு கீழே நீங்கள் 'டைவ்' அடித்துப் பார்த்தால், ஆழமாக செல்லச்செல்ல அதன் வேகம் குறைவதைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்குக் கீழே, தண்ணீரில் எந்தவித சலசலப்பும் இருக்காது. அமாவசை அன்று ஒரே திசையில் வானத்தில் கடலின்மேலே நிலைகொள்ளும் சூரியன், சந்திரனின் ஈர்ப்பு விசைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பிடித்து இழுக்கும்போது, கடல் உயரம் கூடும். சூரியனும், நிலவும் பக்கவாட்டில் உள்ளபோது, கடலின் மீது அவற்றின் தாக்கம் சற்றே குறையும். இதுவே கடலிறக்கம் எனப்படும்.
வாகனங்களில் பயணம் செய்யும்போது, ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து தூங்கினால், ஓட்டுநருக்கும் தூக்கம் வருமென்பது உண்மையா?
கு.தர்ஷினி, 5ம் வகுப்பு, இந்து ஆரம்பப் பள்ளி, பாப்பையநாயக்கன்பட்டி.
வேன், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது, 'ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து தூங்கினால், ஓட்டுநருக்கும் தூக்கம் வரும்' என்பது உண்மையே என, தூக்கம் குறித்த ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. தூக்கத்தின் போது நாம் விடும் மூச்சு சீராக இருப்பதால், நமது உடல் ஆடாமல் அசையாமல் இருக்கும். அது ஒரு தாலாட்டு போல, அருகில் இருக்கும் ஓட்டுனருக்கும் தூக்கத்தை வரவழைக்கும். ஓட்டுநரின் அருகில் பயணிகள் தூங்கும்போது ஏற்படும் சாலை விபத்துகள், தூங்காமல் வரும்போது ஏற்படும் விபத்துகளை விட அதிகம் என, அந்த ஆய்வு கூறுகிறது. உடன் பயணிக்கும் பயணி உற்சாகமாக வரும்போது, ஓட்டுனரும் விழிப்புடன் இருப்பார்தானே.
நட்சத்திரங்கள் கண் சிமிட்டுவதுபோல மின்னுவதற்கு காரணம் என்ன?
ராகவ், 11ம் வகுப்பு, ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
நெருப்பு புகையின் வழியாக மறு பக்கம் பார்த்தால், அந்தக் காட்சி அசைந்து சலனத்துடன் தோன்றும். அது ஏன் அவ்வாறு தென்படுகிறது என்றால், நெருப்புப் புகை உள்ள பகுதியில் காற்று அமளிதுமளியாக இருக்கும். அந்தப் பக்கத்திலிருந்து பிரதிபலிக்கும் ஒளிக்கதிர், அமளிதுமளியான நெருப்பு புகையின் ஊடே கடந்து செல்லும்போது, ஒளிக் கதிரின் பாதை அங்கும் இங்கும் அசையும். எனவே, நமது கண்களில் படும் ஒளிக்கதிர், அங்கிருந்து இங்கு வருவதுபோல தோன்றும்.
அதேபோல, வானத்தில் காற்று அடுக்குகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. காற்று மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும், விண்மீன் ஒளிக்கதிர் இந்த அசையும் காற்று மண்டலத்தில் புகுந்து வரும்போது, சற்றே அசைவதுபோல தென்படும். அதுதான் மின்னுவது போல காட்சி தந்து, நட்சத்திரங்கள் கண் சிமிட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
தண்ணீரை செயற்கையாகத் தயாரிக்க முடியுமா?
வி. சாந்தகோபாலன், மதுரை.
செயற்கையாகத் தண்ணீரை தயாரிக்க முடியும். ஆனால், செலவு கூடுதலாகும். தற்கால வேதியலின் தந்தை என்று போற்றப்படும் பிரெஞ்சு வேதியலாளர், ஆன்டோய்ன் லவாய்ஸியர் (Antoine Lavoisier) 1783ல் சிறுகுழாய் மூலம் ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டையும் சரியான விகிதத்தில் ஒரு குடுவையில் புகுத்தி எரித்துப் பார்த்தார். மெல்ல மெல்ல குடுவையில் நன்னீர் உருவானது. அதே போல நீரைப் பிரித்து, அதில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் மட்டுமே உள்ளது என்றும், நீர் என்பது மூலக்கூறு என்றும் நிறுவினார். எனவே நீரையும் செயற்கையாகத் தயாரிக்க முடியும். ஆனால், அதற்கு ஆகும் ஆற்றல் செலவு அதிகமாக இருக்கும்.
