
பூமியில் இருந்து மற்ற கோள்களை வெறும் கண்களால் ஏன் பார்க்க முடிவதில்லை?
செ.சத்யா ஸ்ரீ, 8ம் வகுப்பு, எஸ்.ஆர்.பி.அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவை.
பார்க்க முடியாதென்று யார் சொன்னது? வெறும் கண்களால் கோள்களைப் பார்க்க முடியும். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களை இரவு வானில் அவ்வப்போது பார்க்க முடியும். ஆனால், அவை வெறும் ஒளிப் புள்ளிகளாகவே தெரியும். அந்தப் புள்ளிகளை வைத்து, அது எந்தக் கோள் என்று கண்டுபிடிக்கவும், அவற்றின் தரைப்பரப்பில் உள்ளவற்றைக் காணவும், திறன்மிக்க தொலைநோக்கிகள் தேவை.
நமக்கு அருகே உள்ள காக்கையை எளிதாகப் பார்க்க முடிகிறது. ஆனால், வெகு தொலைவில் உள்ள ஆகாய விமானம் சிறியதாகத் தெரியும். அதுபோல, மிகத் தொலைவில் உள்ள கோள்கள் மிக மிகச் சிறியதாகவே கண்களுக்குப் புலப்படும். எனவே, யுரேனஸ், நெ-ஃப்டியூன் போன்ற கோள்களை, வெறும் கண்களால் எப்போதும் காண இயலாது.
24 மணி நேரம் காட்டும் கடிகாரத்தின் அமைப்பு எப்படி இருக்கும்?
மாணிக்கம், 7ம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.
சாதாரண கடிகாரம் போலவே, 24 மணிநேரம் காட்டும் கடிகாரமும் செயல்படும்! அந்த அமைப்பில், 6 இருக்கும் இடத்தில் 12ம், 12 இருக்கும் இடத்தில் 00 அல்லது 24ம் இருக்கும். சாதாரண 12 மணி நேர கடிகாரம் ஒரு நாளைக்கு (24 மணி நேரம்) 2 முறை சுற்றும். அதாவது, இரவு 12 முதல் மதியம் 12, பிறகு மதியம் 12 முதல் இரவு 12. ஆனால், 24 மணி நேர கடிகாரத்தில், மணி முள் ஒரு நாளைக்கு ஒருதடவைதான் சுற்றும். நிமிட மற்றும் விநாடி முள் வழக்கம்போல சுற்றிவரும். (மேலே உள்ள கடிகாரங்களின் படத்தைப் பார்க்கவும்)
ரோபோ இயங்க என்னென்ன பொருட்கள் தேவை? வீட்டிலேயே எளிமையான ரோபோ செய்ய ஏதாவது செய்முறை உள்ளதா?
வ. கைலாஷ் அரசு, 12ம் வகுப்பு, வள்ளியம்மாள் மேல்நிலைப் பள்ளி, உளுந்தூர்பேட்டை.
ரோபோ, ஒரு மின்னணுக் கருவி. எனவே, முக்கியமாக மின்னணு சாதனங்கள் இயங்க, ஐ.சி. சிப்கள் (Integrated circuit chips), நுண்செயலி (Microprocessor) முதலியன தேவை. முன்பெல்லாம் வீட்டிலேயே ரேடியோ பெட்டி செய்துகொள்ள வசதியாக, ரேடியோவின் மின்னணு பாகங்களின் அமைப்பு விற்பனையில் இருந்தது. அதுபோல இன்று, வீட்டிலேயே ரோபோ செய்ய, பல மின்னணு பாகங்களும் செயலிகளும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றை வாங்கி, முயற்சி செய்து பார்க்கலாம். மின்னணு சம்பந்தமான செய்முறை பயிற்சிகளில் முன்அனுபவமோ, பாட அறிவோ இருந்தால், ரோபோ செய்முறை இன்னும் எளிதாக இருக்கும்.
பால் பாயின்ட் பேனா மை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? அதற்கும் பேனா மைக்கும் என்ன வித்தியாசம்?
என். லேனா, 7ம் வகுப்பு, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, விழுப்புரம்.
புரோப்பிலீன் கிளைக்கோல், புரோப்பைல் ஆல்கஹால், டொலுவீன் போன்ற கரிமக் கரைப்பானில் சாயத்தைக் கரைத்து, பால் பாயின்ட் (Ball point) பேனா மை தயாரிக்கப்படுகிறது. பாலிமெட்ரிக் பிசின்கள் முதலியவற்றோடு நீரைக் கலந்து, அதில் பல்வேறு சாயங்களுடனும் பேனா மை தயாரிக்கப்படுகிறது.
பால் பாயின்ட் பேனாவின் எழுதுமுனையில் சுழலும் தன்மையுடைய பந்து போன்ற அமைப்பு இருக்கும். எழுதும்போது, இந்தப் பந்து உருளும். அவ்வாறு உருளும்போது, குழாயில் உள்ள மையை தன்மீது பூசிக்கொண்டு வெளிப்படும். பேப்பரில் இந்த மையைப் பதிவு செய்யும். பேனாவை அழுத்தி எழுதினால் மட்டுமே மை வெளிப்படும். பந்து உருண்டு மை வெளிப்பட வேண்டும் என்பதால், பால் பாயின்ட் பேனாவின் மை பாகுத்தன்மை உடைய எண்ணெய்ப் பசையுடன் தயாரிக்கப்படும்.
ஃபவுன்டன் பேனா தந்துகிக் கவர்ச்சி விசை எனும் இயற்பியல் விதியைக் கொண்டு செயல்படுகிறது. பேனாவின் 'நிப்' முனையில், சிறிய வெட்டுக் கோடு இருக்கும். இந்தக் கோடு தந்துகி போல செயல்பட்டு, மையைக் கவர்ந்து இழுக்கும். எளிதில் தந்துகி கவர்ச்சி விசையால் செயல்பட வேண்டும் என்பதற்காக, நீர்மைத் தன்மையுடன் பேனா மை தயாரிக்கப்படும்.

