PUBLISHED ON : மார் 27, 2017

நாம் செய்கிற எல்லா விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிடுதல் நல்லது. இதன் மூலம் விடுபடல் இல்லாமல், சரியாகச் செய்து முடிக்க முடியும். தேவையற்ற பதற்றங்களைத் தவிர்க்கலாம். செய்யும் செயல்களையும் முழுமையாகச் செய்யலாம். நீங்கள் சிறப்பாகத் திட்டமிட்டு உங்கள் பணிகளைச் செய்து முடிக்கிறீர்களா என்பதை ஒரு எளிய சோதனை மூலம் தெரிந்து கொள்வோம்.
* தலைப்பிலுள்ள கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள அடுத்து வரும் கேள்விகளைப் படியுங்கள்.
* ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன.
* உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை டிக் செய்யுங்கள்.
(கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்).
* உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கீழே உள்ளன.
* மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம்.
* அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.
1) பொதுவாக குறிப்பிட்ட நேரத்துக்குக் கிளம்ப வேண்டுமென்றால், அதை உங்களால் கடைப்பிடிக்க முடிகிறதா?
அ) நிச்சயமாக.
ஆ) தாமதமாகிறது. ஆனால், எப்படியோ அடித்துப் பிடித்து, போக வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் அடைந்து விடுவேன்.
இ) பல சமயங்களில் தாமதமாகக் கிளம்பி, தாமதமாகத்தான் போகிறேன்.
2) நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக் கொண்டு வாழ்த்துவீர்களா?
அ) ஆம். ஆனால் அவ்வப்போவது மறந்துபோவதும் தொடர்கிறது.
ஆ) யாராவது ஞாபகப்படுத்தினால் மட்டுமே வாழ்த்துக் கூறுவேன்.
இ) இந்த நாட்களையெல்லாம் முன்னதாகவே குறித்து வைத்துக் கொண்டு நிச்சயம் வாழ்த்துக் கூறுவேன்.
3) முக்கியத் தேர்வுகளுக்கு ஒரு வாரத்துக்கு முன் எப்படி உணர்வீர்கள்?
அ) அவ்வப்போது பாடங்களைப் படித்து விடுவதால் எந்த டென்ஷனும் இருக்காது.
ஆ) பய உணர்ச்சி மிக அதிகமாக இருக்கும். ஏனென்றால் படிக்க வேண்டியது நிறைய இருக்கும்.
இ) அச்சம் தோன்றும். படிப்பது தேர்வில் மறந்து விடாமல் இருக்க வேண்டுமே!
4) போட்ட திட்டங்களை மாற்றுகிறீர்கள் என்றால், அதற்குப் பெரும்பாலும் காரணம் எதுவாக இருக்கும்?
அ) திட்டமிட்ட நேரத்துக்குள் முடிக்காமல் போவது.
ஆ) பிறர் ஒத்துழைக்காதது
இ) புதிய திட்டம் பழையதைவிடச் சிறந்ததாக இருப்பது.
5) ஒரு வேலையைத் தொடங்கும்போது, அதற்குத் தேவைப்படும் எல்லாவற்றையும் முதலிலேயே தயார் செய்து விடுவீர்களா?
அ) நிச்சயமாக
ஆ) இல்லை. பின்னர் நினைவுக்கு வரும்போது, அவ்வப்போது சேகரித்துக் கொள்ளலாம்.
இ) பாதிக்குப் பாதி தயாராக இருக்கும்.
6) பெரியதொரு செயலில் ஈடுபடும்போது, அதில் வரக்கூடிய சிக்கல்கள் குறித்து முன்னதாகவே யோசிப்பீர்களா?
அ) யோசிப்பேன்.
ஆ) யோசிப்பதுடன் அதற்கான தீர்வுகள் குறித்தும் கண்டறிவேன்.
இ) மாட்டேன். அதெல்லாம் எதிர்மறை சிந்தனை
விடைகள்
அ ஆ இ
1) 8 4 0
2) 4 0 8
3) 8 0 4
4) 0 4 8
5) 8 0 4
6) 4 8 0
உங்கள் மொத்த மதிப்பெண் 35லிருந்து 48வரை என்றால், சிறப்பாகத் திட்டமிடுகிறீர்கள். இதன் காரணமாக, நீங்கள் மேற்கொள்ளும் பெரும்பாலான காரியங்கள் வெற்றிகரமாகவே முடியும்.
உங்கள் மொத்த மதிப்பெண் 20லிருந்து 34வரை என்றால், நன்கு திட்டமிட வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டாலும், நடைமுறைப்படுத்தும் போது, சறுக்கி விடுகிறீர்கள். கவனம் தேவை.
உங்கள் மொத்த மதிப்பெண் 20க்கும் குறைவு என்றால், அதிகமான அசட்டுத் துணிச்சல் கொண்டிருக்கிறீர்கள். பிரச்னை வரும்போது சமாளித்துக் கொள்ளலாம் என்று இருந்தால், இடறிவிழ வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.
- ஆருத்ரன்

