sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியைக் கேளுங்க!

/

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : ஏப் 03, 2017

Google News

PUBLISHED ON : ஏப் 03, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

சூரியனைப் பார்த்துவிட்டு நிழலான இடத்திற்குச் சென்றால், கண்கள் ஏன் இருட்டாகின்றன?

மு. புனிதா, 8ம் வகுப்பு, மதர் தெரசா மெட்ரிக் பள்ளி, சிவகங்கை.


ஒளி அதிகமான இடத்திலிருந்து நிழலான இடத்துக்குச் செல்லும்போது, விழித்துளை சுருங்கி இருப்பதால், போதுமான ஒளி கண்களைச் சென்று அடைவதில்லை. மேலும், மங்கிய ஒளியில் செயல்படும் உருளைவடிவ உணர்வி செயல்பட சிறிதுநேரம் ஆகும்.

பிரகாசமாக ஒளிரும் சூரியனின் ஒளியளவு மிகுதியாக இருப்பதால், நமது கண்களின் விழித்துளை சிறுத்துப் போகிறது. சிறிய துளை வழியாகச் செல்லும் ஒளி, பார்வை தர போதுமானதாக இருக்கிறது. அதிக ஒளியைத் தாங்கிச் செயல்படும் கூம்புவடிவ ஒளி உணர்வி மட்டுமே அதிக வெளிச்சத்தில் செயல்படுகிறது. விழித்திரையில் உள்ள மற்றொரு வகை உருளைவடிவ உணர்வி செயல்படுவது இல்லை. விழித்துளையும் உணர்வியும் சேர்ந்து சூரியனைப் பார்த்துவிட்டு நிழலான இடத்துக்குச் செல்லும்போதுதான், கண்கள் இருட்டாகின்றன.

சுழற்புயல் (Tornado) உருவாவதன் காரணம் என்ன?

பொன் கீர்த்தனா, 9ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், போலச்சேரி, சென்னை.


திரள் வடிவ மேகம் உருவாகும் அதே சூழலில்தான், சிலசமயம் அமெரிக்காவில் சுழற்புயல் உருவாகும். வாஷ்பேசினில் நீரை நிரப்பி அடியில் உள்ள சிறு துளை வழி நீரை வெளியேறச் செய்தால் எப்படி சுழல் ஏற்படுகிறதோ அதே முறையில்தான், சுழற்புயலும் ஏற்படும். பேசினின் மேற்புறம் வாய் அகலமாகவும் கீழே சிறியதாகவும் இருக்கும். மேலே வேகம் குறைவாக நீர் சுழலும்போது, அடிப்பகுதியில் அகலம் குறைவு என்பதால், வேகமாகச் சுழலும். இதன் தொடர்ச்சியாக சுழலின் நடுவே புனல் வடிவம் உருவாகும். அவ்வாறுதான் சூரிய ஆற்றலின் விளைவாக, சூடேறி உயரும் காற்றைவிட பக்கவாட்டில் வீசும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்போது, மேலே எழும் காற்று அலைபோல சுருண்டு புரளும். சுருண்டு புரண்டு மேலே எழும் காற்று, கடைசியில் புனல் வடிவில் உருவாகி சுழற்புயலை உருவாக்கும்.

பாக்டீரியாவில் உள்ள கட்டுப்படுத்தும் நொதிகள் (Restriction enzymes) தங்கள் மரபணுக்களை வெட்டாதது ஏன்?

ச.ஹரிகரன், 11ம் வகுப்பு, புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம்
.

போரின்போது, ஒரு நாட்டு வீரர் தனது நாட்டு சீருடையை அணிந்து இருக்கும் வீரரைத் தாக்காமல், எதிரி நாட்டு சீருடையில் இருப்பவரை மட்டுமே தாக்குவார். நண்பன் யார், எதிரி யார் என்பதைச் சீருடைதான் போர் வீரருக்குச் சுட்டிக் காட்டும். அதுபோல, வைரஸ் கிருமிகள் உள்ளே புகுந்து தாக்க வரும்போது, பாக்டீரியா தனது டி.என்.ஏ. மீது, குறிப்பாக கட்டுப்படுத்தும் நொதிகள் தாக்கும் பகுதிகளில் புரதவகையால் மெத்திலேற்றம் செய்து தன்னைக் காத்துக்கொள்ளும். கட்டுப்படுத்தும் நொதிகள் ஒருவகை வேதிப்பொருள்தான். காக்கப்பட்ட பகுதியில் அவை சென்று வினைபுரிய முடியாது. ஆனால், வைரஸ் டி.என்.ஏ.வில் இந்தக் காப்பு நடவடிக்கை இருக்காது. அதனால், வைரஸை மட்டும் தாக்கி, குறிப்பிட்ட பகுதிகளில் வெட்டு ஏற்படுத்தி, அதன் டி.என்.ஏ.வைத் துண்டுதுண்டாகச் செய்துவிடும். சோதனைச் சாலையில், இதே கட்டுப்படுத்தும் நொதிகளைக் கொண்டு, பாக்டீரியாவின் டி.என்.ஏ. வைக் கூட அறுத்து ஆராய்ச்சி செய்யலாம். ஏனெனில், குடுவையில் உள்ள பாக்டீரியா டி.என்.ஏ. இயங்கும் செல்களின் உள்ளே இல்லை; எனவே, அவற்றின் மீது மெத்திலேற்றம் ஏற்படாது.

குண்டு துளைக்காத கண்ணாடி எவ்வாறு செய்யப்படுகிறது?

வி.கபிலேஷ், 3ம் வகுப்பு, ஊ.ஒ.து.பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்
.

கிரிகெட் விளையாட்டில் பந்தைக் கேட்ச் செய்யும்போது, பந்தின் வேகத்திற்கு ஏற்ப நமது கையையும் கொஞ்சதூரம் பின் இழுத்து பிடித்தால், கையில் வலி குறைவாக இருக்கும். கையை விறைப்பாக்கிப் பந்தைப் பிடித்தால், பந்து மோதும் வேகத்தில் கையில் வலி பலமாக இருக்கும்.

கண்ணாடி வழியே துப்பாக்கி தோட்டா பாயும்போது, முதலில் கண்ணாடி உடையும். அவ்வாறு உடைய குண்டின் ஒரு பகுதி ஆற்றல் செலவாகும். எனவே, கண்ணாடியை உடைத்துச் செல்லும் குண்டின் ஆற்றல் சற்றே குறையும். ஏதாவது வகையில் மேன்மேலும் குண்டின் ஆற்றலை குறைத்துவிட்டால், அது பாயும் தொலைவைக் குறைத்துவிடலாம். அந்தச் சிந்தனையில் உருவாக்கப்பட்டதே குண்டு துளைக்காத கண்ணாடி.

மெல்லிய கடினமாக்கப்பட்ட கண்ணாடி ஏடு, அடுத்து ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட பாலிகார்பனேட் என்ற பிளாஸ்டிக் ஏடு என, அதிகபட்சமாக 50 மி.மீ. தடிமன் வரை அடுக்கடுக்காக வைக்கப்பட்டு, குண்டு துளைக்காத கண்ணாடி தயாரிக்கப்படுகிறது. ரப்பரைப் போலவே, பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கும் அதிர்வுகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால், துளைத்துச் செல்லும் குண்டின் விசையை மட்டுப்படுத்தும். இதனால் வேகம் குறையும்; குண்டு அதன் துளைக்கும் சக்தியை இழக்கும்.






      Dinamalar
      Follow us