PUBLISHED ON : ஏப் 03, 2017

விருட்சாசனம்
'விருட்சம்' என்றால் மரம். மரம் போல் நமது உடல் இருப்பதால், இதற்கு விருட்சாசனம் என்று பெயர்.
செயல் முறை:
01. நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும். மெதுவாக வலது காலைத் தூக்கி, குதிகால் தொடையின் ஆரம்பத்தில் இருக்கும்படி வைத்து, தொடையிலேயே கால் விரல்கள் பதிந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
02. மூச்சை உள்ளிழுத்தபடியே கைகளை பக்கவாட்டில் உயர்த்தி, தலைக்கு மேலே கொண்டு சென்று, உள்ளங்கைகளையும் விரல்களையும் இணைத்து, நமஸ்கார முத்திரையில் வைத்துக் கொள்ளவும். சிறிதுநேரம் அப்படியே நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டபடி, ஒரு நிமிடம் வரை நிற்க முயற்சி செய்யவும் அல்லது பத்து முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் நேரம் வரை நிற்கவும்.
03. பிறகு மூச்சை வெளிவிட்ட படியே, கைகளை மெதுவாக பக்கவாட்டில் இறக்கி கீழே கொண்டு வரவும்.
04. வலது காலை கீழே இறக்கவும்.
இதே போன்று இடது காலிலும் செய்யவும்.
பலன்கள்:
1. கால்களை வலுவடையச் செய்கிறது. முக்கியமாக, தொடை, கெண்டைக்கால்கள், கணுக்கால்களை உறுதியாக்குகிறது.
2. இடுப்பு எலும்புகளையும் வலுவடையச் செய்து, முதுகெலும்புகளில் எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்கிறது.
3. நன்றாக நரம்பு மண்டலத்தை ஓய்வடையச் செய்து, தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் உண்டாக்குகிறது.
- ஆர்.தங்கலஷ்மி, விவேகானந்த கேந்திரம்.

