PUBLISHED ON : ஏப் 03, 2017
ஒரு செயலைச் செய்வதற்கு திட்டமிடுதல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தன்னம்பிக்கையும் அவசியம். தன்னம்பிக்கையோடு செயல்களைச் செய்யும்போது, நமக்குத் தோல்வி ஏற்படுவதில்லை. பயத்தோடும், தயக்கத்தோடும் முழுமனதின்றி, எந்தச் செயலையும் செய்யக்கூடாது. தன்னம்பிக்கைதான், நம்மை உயர்த்தி வெற்றி பெறச் செய்யும். நீங்கள் தன்னம்பிக்கையோடு செயல்படுபவரா என்பதை ஓர் எளிய சோதனை மூலம் தெரிந்துகொள்வோம்.
தலைப்பிலுள்ள கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள, கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை டிக் செய்யுங்கள்.
(கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்று தான் கேட்கிறோம்).
உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன. மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம். அதற்கு உதவ, எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.
1. ஆண்டுத் தேர்வு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், உங்களுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் காய்ச்சல். மனநிலை எப்படியிருக்கும்?
அ) மிகுந்த கவலையுடன் டாக்டரை அணுகுவேன்.
ஆ) அதுதான் இரண்டு வாரங்கள் உள்ளதே. எனவே, மருத்துவ ஆலோசனை பெறுவேன்.
இ) காய்ச்சல் எல்லாம் ஒரு பெரிய விஷயமா? கவலையே படமாட்டேன்.
2. வகுப்பில் ஆசிரியர் கூறும் ஒரு தகவல், தவறு என்று உங்களுக்குப் படுகிறது. என்ன செய்வீர்கள்?
அ) உடனடியாக என் சந்தேகத்தை எழுப்பி அதைப் போக்கிக் கொள்வேன்.
ஆ) வகுப்பு முடிந்த பிறகு, ஆசிரியரைத் தனியாக அணுகி, என் சந்தேகத்தை வெளிப்படுத்துவேன்.
இ) ஆசிரியரை எதிர்த்தமாதிரி ஆகிவிடுமே! எனவே, என் சந்தேகத்தை மனதிலேயே பூட்டிக் கொள்வேன்.
3. மேஜிக் நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்கிறீர்கள். ''யாராவது ஒருவர் மேடைக்கு வாருங்கள்'' என்று கூறுகிறார் மேஜிக் நடத்துபவர். என்ன செய்வீர்கள்?
அ) என்னைக் கூப்பிட்டு விடுவாரோ என நினைத்து, தலையைக் குனிந்து கொள்வேன்.
ஆ) குறிப்பாக என்னைக் கூப்பிட்டால், தயக்கமின்றி மேடை ஏறுவேன்.
இ) நானாகவே எழுந்து மேடைக்குச் செல்வேன்.
4) வீட்டில் பொருளாதார நிலை சரியில்லை. உங்கள் எண்ண ஓட்டம் எப்படியிருக்கும்?
அ) எங்கள் குடும்பத்துக்கும் அதிஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
ஆ) தலைவிதி அப்படி. மாற்ற முடியுமா?
இ) தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக் கொள்வதன் மூலம், நிலைமை சாதகமாக மாறும்.
5) சுயமுன்னேற்ற நூல்கள் உங்களுக்குப் பரிசாகக் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அ) ஆர்வத்துடன் படிப்பேன். அவற்றில் கூறியிருப்பதைப் பின்பற்றுவேன்.
ஆ) படிப்பேன். அவற்றில் எவற்றைப் பின்பற்ற குறைவான முயற்சிகள் போதுமோ அவற்றை மட்டும் நடைமுறைப் படுத்துவேன்.
இ) இவையெல்லாம் வீண். படிக்க மாட்டேன்.
6) சில திரைப்படங்களில் ஒரே பாட்டில் ஏழை பணக்காரனாகி விடுவான். இது சாத்தியமா?
அ) நேரமும் உழைப்பும் கூடினால் எதுவும் சாத்தியம்.
ஆ) ஒரே பாட்டு இருக்கட்டும்; ஆயுளுக்கும் அது சாத்தியமில்லை.
இ) சாத்தியம்தான். ஆனால் எதுவும் வேகமாக நடந்து விடாது.
விடைகள்
அ ஆஇ
1) 8 4 0
2) 0 4 8
3) 0 4 8
4) 4 0 8
5) 8 4 0
6) 8 0 4
உங்கள் மொத்த மதிப்பெண் 40லிருந்து 48 வரை என்றால், மிகவும் ஆக்கபூர்வமாக சிந்திக்கிறீர்கள். அதே சமயம், தன்னம்பிக்கை என்பது தலைக்கனமாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மொத்த மதிப்பெண் 20லிருந்து 39 வரை என்றால், நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டுக்கும் நடுவே ஊசலாடுகிறீர்கள். குறைவான மதிப்பெண் பெற்ற கேள்விகளை மீண்டும் படித்து, ஆக்கபூர்வமான வழிகளில் மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
உங்கள் மொத்த மதிப்பெண் 20க்கும் குறைவு என்றால்,
எதிலும் தாழ்வு மனப்பான்மை, எதையும் சந்தேகத்துடன் பார்ப்பது என்ற போக்கை நீங்கள் உடனடியாக மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.
- ஆருத்ரன்

