sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

எனக்கு என்ன ஆச்சு?

/

எனக்கு என்ன ஆச்சு?

எனக்கு என்ன ஆச்சு?

எனக்கு என்ன ஆச்சு?


PUBLISHED ON : ஏப் 03, 2017

Google News

PUBLISHED ON : ஏப் 03, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டான் பாலு.

“என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டது வாலு.

“என்ன ஆச்சு உனக்கு?“ என்று கேட்டார் ஞாநி மாமா.

என்ன ஆச்சு எனக்கு? என்னையே நான் கேட்டுக் கொண்டேன். ஏன் எல்லாரும் என்னை இப்படிக் கேட்கிறார்கள்? அப்படி என்ன ஆச்சு எனக்கு?

ஒரு வாரமாக நான் சரியாக தலை பின்னிக்கொள்வதில்லை என்றார் அம்மா. இரட்டைப் பின்னல் போட்டுக்கொள்வது எனக்குப் பிடிக்கும். ஆனால், இந்த வாரம் முழுக்க பின்னவே இல்லை. அப்படியே முடிச்சாகப் போட்டுக்கொண்டேன். ஏதாவது புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம் என்றால், ஒரு பக்கம் புரட்டியதுமே அலுப்பாக இருந்தது. ஹெட்போன் போட்டுக்கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தேன். எனக்குப் பிடித்த பாட்டே இப்போது ஒரே சத்தமாக தோன்றியது.

“ஏன் இந்த ஈர டவலை ஹாலில் நாற்காலியில் போட்டு வைத்திருக்கிறாய்? ஒழுங்காகத் துவைக்கப் போடவேண்டியதுதானே?” என்று அப்பா கேட்டார். ஒரே எரிச்சலாக இருந்தது. “நீங்க தினமும் அதைத்தானே செய்றீங்க? நான் ஒரு நாள் போட்டா ஏன் என்னைத் திட்றீங்க?” என்று பதிலுக்குக் கத்தினேன். அப்பா ஒரு நிமிடம் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, “என்ன ஆச்சு உனக்கு?” என்றார்.

பள்ளிக்கூடத்திலும், சிநேகிதிகள் ஃபாத்திமாவும் மைதிலியும், “என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டார்கள். மதியம் அவர்களுடன்தான் சேர்ந்து சாப்பிடுவேன். தினமும் என் சாப்பாடு போக, அவர்களிடமிருந்தும் எடுத்துக்கொள்வேன். இந்த வாரம் என் சாப்பாடே தினமும் மீந்து போய்விட்டது. சாப்பிடவே பிடிக்கவில்லை.

“இன்றைக்கு என்னோடு உட்கார்ந்து கொஞ்சம் வீடியோ படங்கள் பாருங்கள்” என்றார் மாமா. “என்ன படம்? கக்கூஸ் மாதிரியா? எனக்கு அதற்கான மூடே இல்லை.'' என்றேன். “இல்லை. இது வேறு மாதிரி. பீரங்கியில் வைத்து மனிதர்களை சுடுகிற க்ளிப்பிங்ஸ்.” என்றார் மாமா.

“பீரங்கியில் குண்டு வைத்துத்தானே சுடுவார்கள்?” என்றான் பாலு. “குண்டுக்கு பதிலாக ஒரு மனிதரையே வைத்து சுட்டால், அவர் எவ்வளவு தூரம் போய் விழுவார் என்பதுதான் இந்த விளையாட்டு. நிறைய சர்க்கஸ்களில் இதைச் செய்வார்கள். யூடியூபில் நிறைய படங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து, ஒரு நண்பர் கொடுத்தார். அதைத்தான் பார்க்கப் போகிறோம்” என்றார் மாமா.

பார்த்தோம். எனக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. பீரங்கியின் குழல் முனையில் ஒரு நபர் வந்து நிற்கிறார். பிறகு அதன் உள்ளே செல்கிறார். அடுத்து சுடுகிறார்கள். வெடிச் சத்தமும் புகையுமாக இருக்கிறது. தூக்கி எறியப்பட்ட நபர் பத்திரமாக, பல அடி தொலைவில் இருக்கும் பாதுகாப்பு வலையில் விழுந்து, அதிலிருந்து எழுந்து நடந்து வந்து கையாட்டுகிறார்.

இதில் கடைசி சாதனை, பீரங்கியிலிருந்து 192 அடி தூரம் வீசப்பட்டதுதானாம். இத்தாலியில் டேவிட் ஸ்மித் ஜூனியர் என்பவர் இதைச் செய்தார். பீரங்கியிலிருந்து அவர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்டிருக்கிறார். தரையிலிருந்து 75 அடி உயரம் வரை போய் கீழே வந்திருக்கிறார்.

“சுடும்போது வெடி மருந்தால் காயம் ஏற்படாதா?” என்று கேட்டான் பாலு. “இதில் வெடிமருந்தே கிடையாது. எல்லாம் ஸ்ப்ரிங்குகள்தான். உண்டிவில்லை இழுத்து கவண் எறிகிறோம் இல்லையா அதே மாதிரிதான். வெடி சத்தமும் புகையும் சும்மா எஃபெக்ட்டுக்காக பீரங்கிக்கு வெளியே பக்கத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் செய்கிறார்கள். ஸ்பிரிங்தான் நீண்ட காலமாக இதற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பம். அண்மையில் காற்றழுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்” என்றது வாலு.

திரும்பத் திரும்ப பல வீடியோக்களைப் பார்த்தோம். “இதில் ஆபத்தில்லையா?” என்று கேட்டேன். “நிச்சயம் ஆபத்தான விளையாட்டுதான். நிறைய பயிற்சி தேவைப்படும். ஆபத்து பீரங்கியில் இல்லை. வந்து விழும்போது சரியாக பாதுகாப்பு வலையில் விழாவிட்டால்தான் ஆபத்து. இதுவரை மொத்தமாக 31 விளையாட்டு வீரர்கள் அப்படி இறந்திருக்கிறார்கள்.” என்றார் மாமா.

வீடியோ முடிந்ததும், பாலுவும் வாலுவும் டேபிள் டென்னிஸ் விளையாடப் போய்விட்டார்கள். மாமா என்னைக் கடற்கரைக்கு அழைத்துக்கொண்டு போனார். எனக்குப் பிடித்த நட்டி மேனியா வாங்கி வந்திருந்தார்.

“இப்ப சொல்லு. போன வாரம் என்ன நடந்தது? நான் ஒரு வாரமா ஊர்ல இல்லியே. என்ன முக்கிய விஷயம்?” என்றார் மாமா.

சட்டென்று, மாமா மடியில் கவிழ்ந்து அழ ஆரம்பித்தேன். “ஜே.பி. தாத்தா செத்துப் போய்ட்டார்.”

“ஓ, அதான் விஷயமா? நான் கூட உங்க பெரியப்பா வீட்டுக்குப் போய் இன்னிக்கு காலையிலதான் துக்கம் விசாரிச்சுட்டு வந்தேன்.” என்றார் மாமா.

தாத்தாவுடைய மரணம்தான், நான் பார்த்த முதல் மரணம். தாத்தாவைப் பார்த்தா தூங்கற மாதிரியே இருக்கு. ஆனா, எழுந்து வரவே மாட்டார்ன்னு நினைக்கும்போது, எனக்கு ஒரே அழுகையா வந்தது. ஜே.பி.தாத்தாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் எனக்கு ஞாபகமா புத்தகம் வாங்கித்தருவார். எதைப் பத்திக் கேட்டாலும் அலுக்காம பதில் சொல்வார். எனக்கு தாத்தாவைப் பத்தி யார் கிட்டயாவது போய் பேசணும்னு தோணிகிட்டே இருந்தது. பாலு, வாலு, ஃபாத்திமா, மைதிலிக்கெல்லாம் அவரை அவ்வளவா தெரியாது. மாமா கிட்ட பேசலாம்னா, அப்ப மாமா ஊர்லயே இல்லை. ரொம்பக் கஷ்டமா இருந்தது. இதையெல்லாம் மாமா கிட்ட சொன்னேன்.

“அதனால்தான் உனக்கு டிப்ரஷன் வந்திருக்கு. சரியா சாப்பிடல. சரியா தூங்கல. சரியா டிரஸ் பண்ணிக்கல. மனசுல சந்தோஷம் இருந்தா கலகலன்னு சிரிக்கற மாதிரி, துக்கம் இருந்தா அழுதுரணும். உள்ளயே பொத்தி வெச்சுக்கக் கூடாது. அப்படி வெச்சுகிட்டா மனச்சோர்வுதான் வரும். உன்கூட பேசறதுக்கு நான்தான் வேணும்னு இருக்கக்கூடாது. நானும் ஒரு நாள் செத்துப் போய்டுவேன் இல்லியா? இன்னும் நாலஞ்சு பேராவது உனக்கு ஷேர் பண்ணிக்க இருக்கணும். பாலு கிட்ட கூட பேசியிருக்கலாம். அம்மா கிட்ட பேசியிருக்கலாம்.” என்றார் மாமா. தலைவலி சட்டென்று காணாமல் போனால் ஒரு சந்தோஷம் வருமே, அந்த மாதிரி இப்போது இருந்தது.

“டிப்ரஷன் பீரங்கிலருந்து மனுஷனை சுடற மாதிரிதான். சரியா பாதுகாப்பு வலையில விழாட்டா ஆபத்துங்கற மாதிரி. என்ன பிரச்னை இருந்தாலும், யாரோடவாவது பேசணும்; ஷேர் பண்ணணும். அதுதான் சேஃப்டி நெட்.” என்றார் மாமா.

இனிமே எதுக்கும் டிப்ரஸ் ஆகமாட்டேன் என்றேன். எனக்கு என்ன ஆச்சு என்று புரிந்துவிட்டது.

வாலுபீடியா 1: பீரங்கியில் வைத்து மனிதரை எறியும் விளையாட்டை முதன்முதலில், ஏப்ரல் 2, 1877ல் செய்து காட்டியவர், 16 வயது ஆங்கிலச் சிறுமியான ரோசா ரிக்டர்.

வாலுபீடியா 2: மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடியவை: அதிர்ச்சியூட்டும் குடும்ப நிகழ்ச்சிகள், வகுப்பில் யாராவது தொல்லை செய்வது, மிரட்டுவது, அதைச் சமாளிக்க முடியாமல் இருப்பது. நினைத்த லட்சியத்தை அடையமுடியாமல் வெறுப்படைவது. புறக்கணிக்கப்படுவது.

மனச்சோர்வின் அடையாளங்கள்:

நிறைய சாப்பிடுவது அல்லது சாப்பிடாமலே இருப்பது, எரிச்சல், கோபம், வழக்கமான வேலைகளைச் செய்யாமல் தவிர்ப்பது.

மனச்சோர்வுக்கு அவசியம் சிகிச்சை தேவை.






      Dinamalar
      Follow us