PUBLISHED ON : ஏப் 03, 2017

டி.எம். கிருஷ்ணா, இன்றைய சங்கீத வித்வான்களில் வித்தியாசமானவர். தம் மனோதர்மத்துக்கு ஏற்ப பாடுபவர் மட்டுமல்ல; பேசுபவர், கூடவே மலையேற்றத்திலும் ஈடுபடுவார். அவரிடம் பேசியதிலிருந்து...
'நிறையப் பேருக்கு வீடும், பள்ளியும் வேற வேற தளத்துல இருக்கும், ஆனா, எனக்கு அப்படியில்ல. பள்ளியில எப்படி இருந்தேனோ, அப்படியேதான் வீட்லயும் இருப்பேன். கேள்விகளைக் கேட்கும் அணுகுமுறை, என்னைப் பத்தியும், என்னோட செயல்கள் பத்தியும் அதிகமா யோசிக்க வச்சது. மூணு வயசுல அம்மா பாடறதைப் பார்த்து, அவங்ககூட நானும் பாடத் தொடங்கினேன். பாட்டை வாழ்க்கையாக்கிக்கணும்னு நான் நினைச்சது கிடையாது. பொருளாதாரம் படிக்கணும், அந்தத் துறையில வேலைக்குப் போகணும்னுதான் இருந்தேன்.
ஆனா, என்னோட இருந்தவங்க நிறையப் பேர், எனக்கு பாட்டு நல்லா வருது, முழுநேரத் தொழிலாக பாட்டை எடுத்துக்கோன்னு சொன்னாங்க. 14 வயசுல நம்ம பாட்டை பார்த்து பலரும் பாராட்டும்போது, அந்த வயசுக்கே உண்டான நம்பிக்கையும், செஞ்சா என்னங்கற துணிவும் வந்தது.
எனக்கு மட்டும் அந்தத் துணிவு இருந்தா போதாது இல்லயா? இவ்வளவு பெரிய முடிவுல குடும்பத்தோட சப்போர்ட் ரொம்ப முக்கியம். இதுல எங்கயாச்சும் சறுக்கி விழுந்துட்டா, மறுபடியும் எழுந்து நிக்க அவங்களோட கைகள் வேணும். என்னோட முடிவுக்குப் பெற்றோர்கள் மிகப்பெரிய ஊக்கம் கொடுத்தாங்க. அதே மாதிரி பள்ளி, கல்லூரி வாழ்க்கை என் கனவுகளை நினைவுகளாக மாத்தும் விதமாக அமைஞ்சது.
இன்னிக்கு பெற்றோர்கள், மத்த குழந்தைகளோட தங்களுடைய குழந்தையை ஒப்பிட்டு பார்த்து, கனவுகளை உற்பத்தி செய்யற மாதிரியான நிலைக்கு போயிட்டு இருக்கோம். சின்ன வயசுலேயே குழந்தைகளுக்கு எதுமேல ஆர்வம் வருதுன்னு பெற்றோர்கள் புரிஞ்சுக்க தொடங்கணும். அதுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்து கண்டுபிடிக்கணும். இன்னிக்கு அப்படியான சூழலும் நேரமும் இல்லைன்னு நினைக்கிறேன். போட்டிகள், வெற்றிகள் இதை நோக்கித்தான் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கறாங்க.
என்னோட வளரிளம்பருவத்துல, எங்க வீட்டுல யாரும், 'இதைச் செய், அதைச் செய்'னு சொன்னது கிடையாது. நான் செய்ய விரும்பியதைச் செய்யற அனுமதியை கொடுத்தாங்க. அதேமாதிரி ஒரு துறையில ஈடுபடும்போது, நாம பல விஷயங்களைப் பத்தி தெரிஞ்சுக்கறது இல்ல. மத்தவங்க உணர்வுகள் என்னன்னு தெரியாம போயிடுது. இன்னிக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள், அவங்களப் பத்தி மட்டுமே நினைக்காம, மத்தவங்களைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கணும். அது இருந்தாலே அவங்களுக்குள் ஒரு தேடல் வரும், கேள்விகள் வரும். மத்தவங்களக் கேக்கறது மட்டும் கேள்விகள் கிடையாது. நம்மை நாமே கேட்டுக்கறதுதான் சரியான கேள்வி. அதுதான் நம்மை பண்படுத்தும். கூடவே, நான் பாடியதையே மீண்டும் மீண்டும் கேட்பேன். அதன்மூலமா என் தவறுகளைத் திருத்திக்கிட்டு மேம்படுத்திக்குவேன். இதையும் இளைஞர்கள் கத்துக்கனும்.
சரி, அப்ப பணம் சம்பாதிக்கிறது, புகழ் அடையறதுங்கறது கண்டிப்பா எல்லாருக்கும் தோணும். ஆனா, அந்த இடத்துலேயே நாம எவ்வளவு காலம் நிக்கப்போறோம்ன்னு யோசிக்கணும்.
பாட்டுப் பாடும்போது, நிறையப் பேர் நம்மள புகழ்வாங்க. அடுத்தடுத்த முறை பாடும்போது, மத்தவங்கள ஈர்க்கும்விதத்தில் பாடறது, கச்சிதமா பாடறதுன்னு நாம பாடுற உத்திகளுக்குள்ளே, தொழிலுக்குள்ளே போயிடுவோம். அப்படிப் போயிட்டா, நாம பாடறது தொழில்தானே தவிர, கலை கிடையாது.
கலையாக அதை மாத்தணும்னா, முதல்ல மத்தவங்களுடைய போட்டியாளரா நாம இருக்கக்கூடாது. அதாவது, எதையும் போட்டியிடும் நோக்கிலேயே பார்க்கக்கூடாது. போட்டிகள் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குது. ஈகோவை அதிகப்படுத்துது. போட்டிகளுடைய அடிப்படைகளையே மாத்தணும். போட்டிதான் இன்னிக்கு பெரிய பிரச்னையை ஏற்படுத்தியிருக்கு.
போட்டி மனப்பான்மையை மாத்திட்டா, எல்லாரும் அவங்களுக்கான தேடலை தொடங்கலாம். அதுதான் உண்மையான கலை ரசனைக்கு கலைஞனை அழைத்துச் செல்லும், மக்களையும் நல்ல ரசிகனா மாத்திக் கொடுக்கும்.”
எஸ். ஹரிஹரன்

