PUBLISHED ON : ஏப் 17, 2017

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
ராக்கெட்டில் பயன்படும் எரிபொருளை வாகனங்களுக்குப் பயன்படுத்த முடியுமா?
ஆர்.வி.சாய்அரவிந்த், 6ம் வகுப்பு, செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
இரண்டுவிதமான ராக்கெட் எரிபொருளை, சாதாரண வாகனங்களுக்குப் பயன்படுத்த முடியும்! ஆனால், அது சரியானது அல்ல. திரவ ஹைட்ரஜனைப் பயன்படுத்தி, காரை இயக்கலாம். திரவ ஹைட்ரஜன் லிட்டருக்கு 0.01005MJ (MJ - Megajoule) ஆற்றலைத் தரும். ஆனால் பெட்ரோல் 34.2 MJ ஆற்றலைத் தரும். எனவே காரின் பெட்ரோல் டேங்கை, ராக்கெட் போல 3,400 மடங்கு பெரிதாக வைக்க வேண்டிவரும்!
சில ராக்கெட் எஞ்சினில் திரவ RP-1 (Rocket Propellant 1) என்ற கெரஸின் பயன்படுத்தப்படுகிறது. இது வெகு எளிதில் ஆவியாகிவிடும். இரவில் டேங்க் முழுவதையும் நிரப்பிவிட்டு காலையில் பார்த்தால், ஆவியாகி இருக்கும். எனவேதான், ராக்கெட்டின் எரிபொருட்கள் வாகனங்களுக்கு ஏற்றதல்ல.
சிலருக்கு மட்டும் இடதுகைப் பழக்கம் ஏன்?
இ.தருண், 5ம் வகுப்பு, பாரதி பள்ளி, மேலூர்.
சுமார் பத்தில் ஒருவர், இடதுகைப் பழக்கம் கொண்டவராக இருக்கிறார் என்கிறது ஓர் ஆய்வு. எழுதுவது, பொருளை எடுப்பது, வீசுவது, பிடிப்பது என, எல்லாச் செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள்.
இடது மூளை, வலது புற உடலையும், வலது மூளை இடது புற உடலையும் இயக்கும். அதிகமாக இடதுகை, கால்களைப் பயன்படுத்துவோரின் உடலில், வலது மூளை அதிகமாக ஆதிக்கம் செலுத்தும். வலதுகைப் பழக்கம் போல, சிலருக்கு இடதுகைப் பழக்கம் இயல்பாக இருக்கிறது. இது ஒரு நோயோ, குறைபாடோ அல்ல.
இடதுகைப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி, வலதுகைப் பழக்கத்துக்கு மாற்றினால், அவர்களின் செயல்திறன் குறைந்து போகலாம். ஐன்ஸ்டீன், சார்லி சாப்ளின், காந்தி, சச்சின், பில்கேட்ஸ் போன்ற சாதனையாளர்கள் பலர், இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள்.
பரம்பரையாக இடதுகைப் பழக்கம் வருவதாக, சில ஆய்வுகள் சொல்கின்றன. ஜீன் அமைப்பில் இருக்கும் வேறுபாட்டாலும், இடதுகைப் பழக்கம் வருகிறது என்ற கருத்தும் இருக்கிறது. ஆயினும் இதுவரை அதற்கான ஜீன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிறவி இரட்டையர்களில் நடத்தப்பட்ட ஆய்வும், மரபணு தாக்கம் நான்கில் ஒருபகுதிதான் எனக் கூறுகிறது.
எத்தனை ஆராய்ச்சிகள் நடந்தாலும், இன்றும் இது ஓர் அறிவியல் புதிர்தான்!
கூகுள் வலைதளத்தை ஹேக்கர்கள் அழிக்க வாய்ப்பு இருக்கிறதா?
ம.பத்மநாபன், 9ம் வகுப்பு, ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம், சென்னை.
கூகுள், வெறும் வலைதளம் அல்ல; வலைதளங்களை தேடும் மென்பொருள். எடுத்துக்காட்டாக, 'பட்டம்' இதழின் வலைதளத்தைத் தேட, கூகுளில் தேடும் சுட்டியை நாம் அழுத்த, இணைய திருடர்கள் (Hackers - ஹேக்கர்கள்) செய்த சதி வேலையால், வேறு எதாவது வலைதளத்துக்கு நம்மை இட்டுச் சென்றுவிடலாம்.
எனவேதான், கூகுள் போன்ற நிறுவனங்கள், 'எங்கள் வலைதளத்தை ஹேக் செய்யும் மென்பொருளை கண்டுபிடித்துக் காட்டுங்கள்' என ஹேக்கர்களுக்கு சவால் விடுக்கிறார்கள். அதன்மூலம் அவர்களுடைய வலைதளத்தில் எங்கெல்லாம் ஓட்டை இருக்கிறது என கண்டுபிடித்து, அதைச் சரி செய்கிறார்கள்.
தற்போது ஆண்ட்ராய்டு மொபைலில் இருக்கும் பல்வேறு மென்பொருட்கள், அவ்வப்போது 'அப்டேட்' கேட்கும். புதிதாக பிழைகள் திருத்தப்பட்ட பதிப்பை நமக்கு அனுப்பி, அந்த மென்பொருளை சரி செய்கிறார்கள், மேம்படுத்துகிறார்கள் என்றே இதற்கு அர்த்தம்.
கடல் பகுதியை ஒட்டியுள்ள ஊர்களின் கிணற்று நீர் உப்பாக இல்லாமல், சுவையாக இருக்கிறதே, எப்படி?
பா.கோகிலா ஈஸ்வரி, 8ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.
அந்த ஊர்களின் அருகே கடல் பகுதி இருக்கிறது என்றாலும், தேவைக்காக நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதாவது, நிலத்துக்கு அடியில் நீர் தேங்கும் பகுதியை நிலவியலாளர்கள் 'நீர்கொள்படுகை' அல்லது 'நீர் அடுக்கு' என்பார்கள். மழைநீர் நிலத்துக்குள் புகுந்து, மணல், சிறு கற்கள் முதலிய இடுக்குகளில் நிரம்பி இருப்பதுதான், நீர்கொள்படுகை.
கடற்கரை ஓரத்திலும் இத்தகைய நீர்கொள்படுகை இருக்கும். அந்தப் பகுதியின் அடியில் தோண்டினால் கிடைக்கும் நீர், நல்ல நீராகவே இருக்கும். இங்கும் மழைநீர் கடற்கரை மணலின் ஊடே நிலத்துக்குள் புகுந்து இடுக்குகளில் படிந்துவிடும். ஆனால் கூடுதல் நீரை நிலத்துக்கு உள்ளிருந்து வெளியே எடுத்துவிட்டால், காலியான இடத்தை நிரப்ப கடல்நீர் புகுந்து நல்ல நீர் உப்பாகிவிடும். எனவே, அளவாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதுதான் நல்லது.
