sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியைக் கேளுங்க!

/

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : ஜூன் 26, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 26, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

1. விக்கல் ஏன் வருகிறது? விக்கல் வந்தால் குடல் பெரிதாகிறது என்றும், யாரோ நினைக்கிறார்கள் என்றும் கூறுகிற மரபு எப்படி வந்தது?

ஜெ. லட்சுமிதேவிப்ரியா, 12ம் வகுப்பு, கே.சி.ஏ.டி. சிதம்பரம் ஞானகிரி பதின்ம மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.


விக்கல் வந்தால் குடல் பெரிதாகிறது என்றும், யாரோ நினைக்கிறார் என்றும் கருதுவதற்கு, எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. மனித உடலமைப்பின் காரணமாக ஏற்படும் தற்காலிக பழுது இயக்கமே, விக்கலாக வெளிவருகிறது.

சுவாசிக்க காற்றை உள் இழுக்கும்போது, மார்புப் பகுதிக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட உதரவிதானம் (diaphragm) என்ற மென்தசைப் பகுதி விரிந்து கீழே இறங்கும். இதன் காரணமாக, நுரையீரல் விரியும். அதேநேரத்தில், தொண்டையில் உள்ள குரல்நாண்களும் விரிந்து திறக்கும். இவற்றின் தொடர்ச்சியாக, நுரையீரலில் காற்றழுத்தம் குறைய, விரிந்த நுரையீரலுக்குள் தொண்டை வழியாகக் காற்று புகும். அதேபோல கீழே இறங்கிய உதரவிதானம், மறுபடி சுருங்கி மேலே எழும்போது, அதனால் அழுத்தப்படும் நுரையீரல் சுருங்கி காற்று வெளிப்படும்.

இந்த இயக்கங்களுக்குள் உள்ள சீரான நிலை குலைந்து, தானாகவே உதரவிதானம் திடீர் திடீரென்று சுருங்கும். அமிலம் சுரத்தல் போன்ற பல காரணங்களால், உதரவிதானம் எரிச்சலுற்று இவ்வாறு நிகழலாம். இந்தச் சமயத்தில், குரல்நாண்கள் முழுமையாக விரிந்து திறப்பதில்லை. எனவே, காற்று புகும் தொண்டைக் குழாய் சிறிதாக அமைந்துவிடுவதால், வினோதமான 'விக்','விக்' என்ற ஒலி ஏற்படுகிறது. இதையே விக்கல் (hiccup- - ஹிக்கப்) என்கிறோம்.

2. அக்னி நட்சத்திரம் என்று குறிக்கப்பட்ட நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது ஏன்?

தி.ரஞ்சித், 8ம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்
.

அப்படியெல்லாம் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது இல்லை. மே 4, 2017 முதல், மே 28, 2017 வரை, கத்திரி வெயில் என பஞ்சாங்கத்தில் இருந்தது. ஆனால், இதற்கு இடைப்பட்ட நாட்களில், ஆலங்கட்டி மழை பொழிந்து வெப்பம் சற்றே தணிந்ததைப் பார்த்தோமே!

சித்திரை மாதம் 21ம் தேதி தொடங்கி, வைகாசி 14ம் நாள் வரையிலான காலத்தை, ஒவ்வோராண்டும் அக்னி நட்சத்திரம் எனக் கூறுகின்றனர். இதில் சித்திரை மாதக் கடைசி வாரத்தையும், வைகாசி மாத முதல் வாரத்தையும் சேர்த்த 15 நாட்கள், அக்னி நட்சத்திர உச்ச நாட்கள் என்பதற்காக, 'கத்திரி வெயில்' எனக் கூறுகிறார்கள். ஆயினும், வானிலை ஆய்வு நிபுணர் எஸ்.ஆர். ரமணன், 'அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில்' போன்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை. அது வெறும் பஞ்சாங்கத்தின் வார்த்தை, எனக் கூறுகிறார். வானிலை துறையானது, ராசியின் அடிப்படையில் இயங்குவதில்லை.

3. உலர்ந்த சிமென்ட் ஏன் கல் போன்று கடினமாகிறது?

ரா.மணிமாலா, 12ம் வகுப்பு, புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.


நீரேற்ற வினை காரணமாக, சிமென்ட் கடினத்தன்மை பெறுகிறது. நீரில் குழைத்த சிமென்ட், உலர்ந்து காய்ந்து கட்டியாகிறது எனக் கருதுவது தவறு. போதிய நீர் இல்லை என்றால், முழுமையாக இறுகாமல் சிமென்ட் சரியாகக் கடினத்தன்மை பெறாது.

சிமென்ட்டில் உள்ள வேதிப்பொருட்கள், நீரின் உதவியோடு ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொள்கின்றன. நீரேற்ற வினை என்பது, படிகமாதல் வினைதான். நீர் எனும் H2O வினையில் HO எனும் அயனியாக மாறி, கால்சியம் சிலிக்கேட் ஹைட்ரேட் (calcium silicate hydrate), கால்சியமைதரொட்சைட்டு முதலிய வேதிப்பொருட்கள் உருவாகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சிமென்ட் கலவையில் உள்ள வேதிப்பொருட்கள் திரண்டு படிகமாக உருவாகின்றன. இந்த வேதிவினை நடைபெற சிமென்ட்டின் எடைக்கு நான்கில் ஒருபகுதி அளவு நீர் தேவை. இது ஒரு வெப்ப உமிழ் வேதிவினையாகும். இவ்வாறே சிமென்ட் உறுதிப்படுகிறது. எனவே தான், சிமென்ட் பூசியதும் நீர் விட்டுக்கொண்டே இருப்பார்கள். சில சமயம் இந்த வினை ஒருசில ஆண்டுகள் வரைகூடத் தொடரும். எனவே தான், சில புதிய கட்டடங்களில் மழைக்குப் பிறகு வெடிப்பு ஏற்படுகிறது.

4. நிழல் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கிறது?

ஆர்.சுஜிதா, 8ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மின்னஞ்சல்.


நிழல் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னர், இலை ஏன் பச்சையாய் இருக்கிறது எனத் தெரிந்து கொள்வோம். பல வண்ணங்கள் கொண்ட சூரிய ஒளி, இலையின் மீது படும்போது, பச்சை தவிர ஏனைய நிறங்களை உறிஞ்சுகிறது. அதனால், இலையில் பட்டுப் பிரதிபலிக்கும்போது, அது பச்சை நிறத்தில் காட்சி தருகிறது. அதேபோல் சிவப்பைத் தவிர எல்லா நிறங்களையும் உறிஞ்சிவிடுவதால், ஆப்பிள் சிவப்பாகத் தெரிகிறது. எந்த நிறத்தையும் உறிஞ்சாத வெள்ளை பேப்பர், வெண்மை நிறத்தில் தெரிகிறது.

எல்லா நிறத்தையும் உறிஞ்சும் பொருள் எந்த நிறத்தில் தெரியும்? அதாவது, வேறு வார்த்தையில் கூறினால், எந்த நிற ஒளியையும் பிரதிபலிக்காத பொருள் எந்த நிறத்தில் தெரியும்? அதுதான் கருமை. அதாவது கருமை என்பது ஒரு நிறமல்ல, ஒளியற்ற நிலை. ஒளி படாத பகுதிதான் நிழல். எனவே, நிழல்பகுதியால் எந்த நிற ஒளியையும் பிரதிபலிக்க முடியாது; எனவே அது கருமை நிறமாக மட்டுமே இருக்க முடியும்.






      Dinamalar
      Follow us