தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : ஜூலை 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

தீப்பெட்டியில் உரசும்போது பெட்டி எரியாமல் தீக்குச்சி மட்டும் எரிகிறதே ஏன்?

ஜி.வி.சினேகா, 9ம் வகுப்பு, ரோசரி மெட்ரிக் பள்ளி, சென்னை.


தீப்பெட்டியின் மருந்துப் பட்டையில், தீக்குச்சியை உரசும்போது உராய்வு ஏற்படுகிறது. இந்த உராய்வில் ஏற்படும் வெப்பம் தீப்பெட்டியில் உள்ள சிவப்பு பாஸ்பரஸை, சிறிய அளவு வெப்பப்படுத்தி ஆவியாக்குகிறது. இந்த வேதியியல் வினையில், வெள்ளை பாஸ்பரஸ் தானாகவே ஆவியாக மாறும்.

இயல்பான வெப்பநிலையில், வெள்ளை பாஸ்பரஸ் தானாக எரியும் தன்மை கொண்டதால், அது எரியத் தொடங்குகிறது. அதன் தணலில் தீக்குச்சியில் உள்ள சல்பர் உருகி எரிகிறது. சல்பர் எரியும்போது வெளிப்படும் வெப்பம், தீக்குச்சியை முழுதாக எரிக்கப் போதுமானதாக அமைந்து விடுகிறது. எனவே, தீப்பெட்டி எரியத் தேவையான வெப்பத்தை சிறு உராய்வின்போது ஏற்படுத்த முடியாது. ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர் இயக்கத்தில்தான், தீக்குச்சி எரிகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போதைய தீப்பெட்டிகள் பாதுகாப்பானதாக இருக்கின்றன.

மழை பெய்தால் முளைப்பதுபோல, தண்ணீர் தெளித்தால் காளான்கள் முளைக்குமா?

க்ரீடா சாமுவேல், 8ம் வகுப்பு, கேந்திரிய வித்யாலயா, அருவங்காடு, நீலகிரி.


நிச்சயமாக முளைக்கும். 'மழையில் முளைத்த காளான்' எனும் பழமொழி இருந்தாலும், மழையின்போது காளான்கள் முளைப்பது இல்லை. மழைநீரை உறிஞ்சிய பிறகே பெரிதாகத் தடித்து வளர்கின்றன. காளான் ஒருவகை பூஞ்சை இனம். கண்களுக்குத் தெரியாத ஸ்போர் எனும் வித்து கொண்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

முதல் கட்ட வளர்ச்சியில், ஈரப்பதம் உடைய மண்ணின் கீழே குண்டூசி முனையளவு சிறிதாக வளர ஆரம்பிக்கிறது. இந்த வளர்ச்சி நம் கண்களுக்கு எளிதில் புலப்படாது. மழை அல்லது நீரளவு கூடும்போது, வளர்ந்து பெரிதாக மாறி, காளானாக முளைக்கிறது. பொதுவாக, செல்பிரிதல் எனும் முறையில்தான் உருப்பெருக்கம் ஏற்படும். ஆனால், காளானைப் பொறுத்தவரை, அது பெரிதானாலும் முதல்நிலையில் இருந்த அதே அளவு செல்களின் எண்ணிக்கைதான் இருக்கும். நீரை உறிஞ்சும் காளான் செல்கள், பலூன் போல விரியும். இதனால்தான் மழை பொழிந்ததும் காளான்கள் உடனடியாக முளைப்பது போல நமக்குத் தோன்றுகிறது. இதேபோல மண்ணின் ஈரப்பதத்தைக் கட்டுக்குள் வைத்தே, செயற்கைக் காளான் வளர்க்கப்படுகிறது.

உச்சி வானில் விமானம் பறக்கும்போது 'கொய்ங்ங்' என்ற சத்தம் எதிலிருந்து வருகிறது. பகலில் மட்டும் கேட்கிறதே இரவிலும் கேட்குமா?

டி.அரவிந்தன், 11ம் வகுப்பு, எம்.ஹெச்.எஸ். பள்ளி, பொள்ளாச்சி.


பகலில் ஆகாய விமானம் பறக்கும்போது கேட்கும் சத்தம்தான், இரவிலும் கேட்கிறது. ஆயினும் ஒருசில வேறுபாடுகள் உண்டு. பகலில் மிக உயரே பறக்கும் விமானம் நமது கண்களுக்குத் தெரியாது. ஆனால், இரவில் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை விளக்கு மின்னுவதால் வெகு உயரத்தில் பறக்கும்போதும் கண்களுக்குத் தெரியும். அவை ஏற்படுத்தும் ஒலி நம்மைவந்து அடையும்போது மிக மெலிந்து போவதால் நம்மால் கேட்க முடியாது. எனவே, இரவில் விமானம் ஒலி ஏற்படுத்துவதில்லை என நாம் கருதுகிறோம். மேலும் இரவு நேரத்தில் தரைக்கு அருகிலுள்ள வளிமண்டலம், தரையின் சூட்டினால் வெப்பமாக இருக்க, மேற்பகுதி சூரிய ஒளி இன்மையால் சற்றே குளிர்ந்து இருக்கும். எனவே அதற்கும் மேலே பறக்கும் விமானங்களின் ஒலி, குளிர்ந்த வளிமண்டலப்பகுதியில் பிரதிபலிக்கப்பட்டு மேலேயே சென்றுவிடுவதால், ஒலி தரையை எளிதில் வந்தடைவதில்லை.

அடுத்ததாக, கீழே உள்ள மனிதர்களின் தூக்கம் கெட்டு விடக்கூடாது என்பதால், பொதுவாகவே இரவில் பறக்கும் விமானங்கள் மேலும் உயரத்தில் பறக்கவேண்டும் என்று சில இடங்களில் விதிகள் உள்ளன. இதன் காரணமாகவும் இரவில் பறக்கும் விமானம், ஒலி ஏற்படுத்துவதில்லை என்ற தோற்றம் ஏற்படலாம்.

சீமைக் கருவேல மரங்களால் தீமை மட்டும்தானா; எந்த நன்மையும் இல்லையா? பின்பு ஏன் நமது நிலங்களில் வளர்கின்றன?

கு.விஜயலெட்சுமி, 11ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.


ப்ரோஸோபிஸ் ஜுலிப்ளோரா (Prosopis juliflora) என்கிற சீமைக் கருவேல புதர்வகைத் தாவரம், இந்தியாவில் 1870களில் எரிபொருள் தேவையை பூர்த்திசெய்ய அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1960களில் ஏற்பட்ட கடும் வறட்சியின் போது, எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, குறைந்த அளவே மழை பொழியும் ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இந்தத் தாவரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்தத் தாவரம், குறைந்த நீர்ப் பசை அல்லது வறட்சி நிலையிலும் உப்புத்தன்மை கூடுதலான நிலையிலும் வளரும். வறட்சி காலத்தில், தாவரங்களின் செல்களில் உள்ள நீர் வற்றி செல்கள் இயல்பில் கொண்டிருக்க வேண்டிய நீர்நிறைநிலை விறைப்பு குன்றும். அதன் தொடர்ச்சியாக, தாவரம் வாடி வதங்கும். இந்தத் தாவரத்தில் கூடுதலாக சுரக்கும் புரோலின் எனும் புரதம், செல்களின் நீர்நிறைநிலை விறைப்புத் தன்மையைப் பாதுகாத்து, மிகு வறட்சி நிலையிலும் அந்தத் தாவரம் வாடி வதங்கி விடாமல் காக்கிறது.

இதன் கிளைகளை எரித்து, நிலக்கரி தயாரிக்க முடியும். ராமநாதபுரம் போன்ற பகுதிகளில், இந்த மரத்தின் கிளைகளை வெட்டி எரித்து நிலத்தின் அடியில் புதைத்து, சமையல் செய்ய விறகுக்கரி (அடுப்புக்கரி) தயாரித்து, விற்பனை செய்து தொழில் செய்கின்றனர். வறண்ட பகுதியில், காற்று வீசி ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கும். மண்ணில் நைட்ரஜனை செறிவு செய்யும் தாவரங்களில் இதுவும் ஒன்று. ஆயினும், இதே தாவரம் நீர் பசையுள்ள பகுதிகளுக்கு கடந்து சென்று விட்டால், அங்கே உள்ள தாவரங்களை அகற்றி, இது செழித்தோங்கும். இதனுடைய நன்மையும் தீமையும் இடத்துக்குத் தகுந்தவாறு மாறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us