மலர்களே... மலர்களே... (4) - வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும்?
மலர்களே... மலர்களே... (4) - வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும்?
PUBLISHED ON : ஜூலை 03, 2017

நாமாக ஒன்றை கற்பனை செய்து வாதிடுவதோ அல்லது அவர்கள் சொன்னார்கள், முன்னோர்கள் வாழையடிவாழையாகச் சொல்லிவருகிறார்கள் என்று கூறுவதோ அறிவியல் முறையாகாது. சோதனை செய்து பார்த்து விடை கண்டால்தான், அது அறிவியல்; வண்ணத்துப் பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த நிறம் எது என்பதை அறிய, விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்த்து விட்டார்கள்.
இந்த அறிவியல் சோதனை செய்ய, முதலில் அவர்கள் பல நிறங்களில் செயற்கைப் பூக்களை உருவாக்கினர். வால்களையுடைய அழகிய, பெரிய இளம்அழகி (Swallowtail -- ஸ்வாலோடெயில்) வகை வண்ணத்துப் பூச்சிகளை ஆய்வுக்காகத் தேர்வு செய்தனர்.
சோதனை அறையில் பல நிறங்களில் உள்ள செயற்கைப் பூக்களில் இருந்து இயற்கை மணம் பரவச் செய்தனர். அந்த அறையில் வண்ணத்துப் பூச்சிகளை விட்டு, அறைக்குள் பொருத்தப்பட்ட வீடியோ கேமராக்கள் மூலம் நடப்பதைப் பதிவு செய்தனர். இதன்மூலம் எந்த நிறப் பூவை பெரும்பாலான வண்ணத்துப் பூச்சிகள் நாடுகின்றன என ஆய்வு செய்தனர்.
ஆய்வில் கிடைத்த தரவுகளைத் தொகுத்துப் பார்த்தபோது, பெரும்பாலான வண்ணத்துப் பூச்சிகள் மஞ்சள் நிறத்தைத்தான் பெரிதும் விரும்பின. நீலம் மற்றும் செவ்வூதா நிறங்கள் முறையே, இரண்டாம் மூன்றாம் இடத்தைப் பிடித்தன. இதிலிருந்து பொது முடிவுக்கு வரமுடியாது; ஏன்? செம்பருத்தி சிவப்பாகப் பூக்கும்; செவ்வந்தி மஞ்சள் நிறத்தில் பூக்கும். மஞ்சள் நிற செவ்வந்தி நோக்கி பெரும்பாலான வண்ணத்துப் பூச்சிகள் சென்றால், அவை மஞ்சளை நாடுகின்றனவா அல்லது செவ்வந்தியை நாடுகின்றனவா என பகுத்து அறிவது எப்படி?
எனவே, அடுத்தகட்ட ஆய்வை மேற்கொண்டனர் விஞ்ஞானிகள். சிவப்பு ரோஜா, வெள்ளை ரோஜா, மஞ்சள் ரோஜா உள்ளதுபோல சில வகைத் தாவரங்கள், இரண்டு நிறங்களில் ஆனால், ஒரே நறுமணம், வடிவம் கொண்டு பூ பூக்கும்.
அதைப்போல, மஞ்சள், கருஞ்சிவப்பு பூக்கள் பூக்கும் ஒருவகை தாவரத்தைச் சோதனைக்குப் பயன்படுத்தினர். சோதனை அறையில் இரண்டு நிறப் பூக்களையும், ஒரே அளவு பரப்பி வைத்தனர். பசியுடன் உள்ள பட்டாம்பூச்சிகள் அந்த அறைக்குள் விடப்பட்டதும், அவை வழக்கம்போல மஞ்சள் நிறப் பூவையே நாடின.
மூன்றாம் கட்ட சோதனையில், மஞ்சள் நிறப் பூக்களிலிருந்து ஒரு சொட்டு விடாமல் தேனை வடிகட்டி எடுத்துவிட்டனர். ஆனால், கருஞ்சிவப்பு பூக்களில் தேன் இருந்தது. இந்த அறையில் மறுபடி பசியுடன் இருக்கும் வண்ணத்துப் பூச்சிகளை விட்டு சோதனை செய்து பார்த்தபோது, முதலில் மஞ்சள் நிறப் பூவை நாடிய பூச்சிகள், அதில் தேன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தன. பின்னர் கருஞ்சிவப்பு பூவுக்குச் சென்றன.
மஞ்சள் பூவிலிருந்து தேனை எடுத்துவிட்டு, தேன் செறிவுள்ள கருஞ்சிவப்பு பூக்களை வைத்து, பலமுறை மறுபடி மறுபடி சோதனை செய்து பார்த்தபோது, காலப்போக்கில் பட்டாம் பூச்சிகள் முதலில் கருஞ்சிவப்பு பூக்களுக்குச் செல்வதை வழக்கப்படுத்திக் கொண்டன. மிகச் சில வண்ணத்துப் பூச்சிகளே அதன் பிறகும், முதலில் மஞ்சள் நிறப் பூக்களைத் தேடிச் சென்றன.
அதே பட்டாம்பூச்சிகளை வைத்து, நான்காவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கருஞ்சிவப்பு நிறப் பூவில் இருந்து தேனை எடுத்துவிட்டு, மஞ்சள் நிறப் பூவில் மட்டுமே தேனை வைத்து சோதனை செய்யப்பட்டது. ஏற்கெனவே கருஞ்சிவப்பு பூக்களுக்கு முதலில் செல்லப் பழகிய வண்ணத்துப் பூச்சிகள், முதலில் கருஞ்சிவப்பு பூவுக்கே சென்றன. அங்கு தேன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தன. பின்னர் மஞ்சள்நிறப் பூவில் மட்டுமே தேன் இருக்கிறது என விரைவிலேயே உணர்ந்து கொண்டு, மீண்டும் மஞ்சள் நிறப் பூக்களை நாடின.
அதாவது இயல்பில், தன்னுணர்வில் மஞ்சளைப் பெரிதும் நாடினாலும், பட்டாம் பூச்சிகள் தாம் வாழும் சூழலில் இருக்கும் நிலையை கணக்கில் கொண்டு. கற்க முடியும் என்பதை இந்த ஆய்வு நிறுவியது.
- த.வி.வெங்கடேஸ்வரன்
