PUBLISHED ON : ஜூலை 03, 2017

செம்மார்பு குக்குறுவான் (CopperSmith Barbet -- காப்பர்ஸ்மித் பார்பெட்)
தமிழ்நாட்டில் குக்குறுவானை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. குக்குறுவான் என்கிற பெயரை நாம் அறியாமல் இருந்திருக்கலாம். அச்சிறு பறவையைப் பார்க்காமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் அதன் குரலைக் கேட்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. கோடை காலங்களில் பகல் முடிந்து, நண்பகல் வெயில் உச்சத்திற்குச் சென்று சுட்டெரிக்கும் தருணங்களில், 'குக் குக் குக்' என்று சீரான இடைவெளியில், மாறாத லயத்துடன் சளைக்காமல் கூவும் இப்பறவையின் குரலை, ஒருமுறை நினைவு கூருங்கள். அது குக்குறுவான்தான்.
ஒரு சிட்டுக்குருவியைவிட சற்று பெரிய அளவில், பச்சை நிறமுள்ள இப்பறவையின் அலகு தடிமனானது. தலையிலும் மார்பிலும் சிவப்பு நிறத்தை பூசிக் கொண்டிருக்கும். குக்குறுவானுக்கு, பூனை மீசையைப் போல சில முடிகள் கூட இருக்கும். அத்தி, ஆல், அரச மரங்கள் என்றால், குக்குறுவான்களுக்கு கொள்ளைப் பிரியம். காரணம், அதன் பழங்கள் அவற்றுக்கு விருப்ப உணவு. சில சமயங்களில், கறையான்கள், சிறு பூச்சிகள் உள்ளிட்ட சிற்றுயிர்களையும் உணவாக உட்கொள்ளும். தன் எடையைவிட மூன்று மடங்கு, அதாவது நாள் ஒன்றுக்கு 150 கிராம் உணவு, இந்த ஐம்பது கிராம் பறவைக்குத் தேவைப்படுகிறது.
குக்குறுவான்கள் மரங்களில் பொந்து குடைந்து, தமது வீட்டை அமைத்துக் கொள்கின்றன. இந்தியாவில் இவை, பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று அல்லது நான்கு முட்டைகள் வரை அந்தப் பொந்தில் இடுகின்றன. ஆண், பெண் என்கிற பேதமின்றி, இரண்டும் மாறிமாறி அடை காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன. சில நேரங்களில், கழுகு, பருந்து உள்ளிட்ட இரைக்கொல்லி பறவைகளிடம் சிக்கி, குக்குறுவான்கள் இறப்பதுண்டு. சமீப காலங்களில், நகரங்களில் பெருகும் கான்கிரீட் கட்டடங்களில் பொருத்தப்பட்டுள்ள, கண்ணாடிச்சுவர்களில் மோதி, இந்த அழகான பறவைகள் இறந்து போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தென்னிந்தியாவில், நான்கு வகையான குக்குறுவான்களை பறவையியல் ஆர்வலர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். வெண்கண்ண குக்குறுவான், பழுப்புத் தலை குக்குறுவான், செந்நெற்றி குக்குறுவான்; இது தவிர நாம் அவ்வப்போது காணக் கிடைக்கும் செம்மார்பு குக்குறுவான். சென்னை போன்ற பெரு நகரங்களில்; குக்குறுவான்களைப் பார்ப்பது சற்றே கடினம் என்றாலும்கூட, தொடர்ந்து அச்சிறு உயிரின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே, ஆறுதலான விஷயம்தானே.
உயிரியல் பெயர்: 'மேகலைமா ஹேமோசிபாலா' (Megalaima Haemacephala)
குடும்பம்: 'குக்குறுவான்' (Barbet -- பார்பெட்)
நீளம்: 17 செ.மீட்டர்கள்
எடை: 55 கிராம்
- அ.மு.செய்யது
