தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/காலத்தை வென்றவர்கள்!

காலத்தை வென்றவர்கள்!

காலத்தை வென்றவர்கள்!


PUBLISHED ON : ஜூலை 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“நீ எந்த 14 பேரை 100 நாள் ஒரே வீட்டில் அடைத்து வைப்பாய்?” என்று என் வகுப்புத் தோழி பவித்ரா கேட்டாள். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்புறம்தான் தொலைக்காட்சியில் அவள் பார்க்கும் நிகழ்ச்சி தொடர்பாகப் பேசுகிறாள் என்று புரிந்தது.

பாலுவிடமும் பவித்ரா கேட்டிருக்கிறாள். பாலு அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், விஞ்ஞானிகள் எல்லாம் நிறைந்த ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறான்.

“இந்த மாதிரி நிகழ்ச்சிகளால், யாருக்கு என்ன பயன்?” என்று ஞாநி மாமாவிடம் கேட்டேன். “இதில் பங்கேற்கிறவர்களுக்குப் பணம் கிடைக்கும். ஒளிபரப்பு நிலையத்துக்கு, விளம்பர வருவாயாக பெரும்பணம் கிடைக்கும்.” என்றார் மாமா.

பார்வையாளர்களுக்கு?

“அதைப் பார்வையாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பலருக்கு சும்மா நேரத்தைக் கழிக்க, பொழுதுபோக்கு தேவை.” என்றார் மாமா.

“இப்படி 100 நாள் வெளி உலகத் தொடர்பே இல்லாமல், 14 பேர் ஒன்றாக இருந்து, தங்களுக்குள்ளேயே முட்டி மோதியோ சிநேகமாகவோ இருந்தால், பின்னர் சிந்திக்கும் விதம், பேசும் விதம், எல்லாம் பாதிக்கப்படாதா?” என்று கேட்டேன். “நிஜமாகவே அப்படி இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்? நமக்கு எப்படித் தெரியும்?” என்றான் பாலு. “அப்படியே இருந்தாலும், அது உளவியல் மருத்துவர்கள் ஆராயவேண்டிய விஷயம். சிலருக்கு திடீர் புகழ், திடீர் பணம் இவற்றையெல்லாம் கையாள, கவுன்சிலிங் தேவைப்படலாம்.” என்றார் மாமா.

“அதேசமயம், அறிவியல் ஆராய்ச்சிக்காக அப்படி ஏதாவது செய்வதானால், நாம் போகலாம்” என்று மாமா சொன்னதும், “இதில் அறிவியல் ஆராய்ச்சி என்ன செய்ய முடியும்?” என்று கேட்டேன்.

ஏற்கனவே நடந்த ஓர் ஆராய்ச்சியைப் பற்றி மாமா சொன்னதும், எனக்கு வியப்பாகிவிட்டது. அதுவும் அந்த ஆராய்ச்சி நம்ம தமிழ்நாட்டில், மதுரையில் நடந்திருக்கிறது.

பயலாஜிகல் கிளாக் (உடல் கடிகாரம்) என்று ஓர் ஒழுங்கு நம் எல்லார் உடல்களிலும் இருக்கிறது. இத்தனை மணிக்குத் தூங்குவது, விழிப்பது, சாப்பிடுவது என்பதையெல்லாம் கடிகாரத்தைப் பார்க்காமலே, நமக்குப் பழகியிருக்கிறது. இதை நமக்கு உடலில் நிர்ணயிப்பதைத்தான் சிர்காடியன் ரிதம் என்கிறார்கள். அந்த ரிதம் 24 மணி நேர சுழற்சியில் நடந்துகொண்டே இருக்கிறது.

இப்போது இரவா, பகலா என்று நமக்குத் தெரியாவிட்டாலும், கோழி கூவினால், வாசலில் பால் பையும் செய்தித்தாளும் வந்து விழுந்தால், அதை காலை நேரம் என்று புரிந்துகொள்கிறோம். அதெல்லாம் இல்லாவிட்டாலும் புரியுமா? இதுதான் ஆராய்ச்சி.

“இதை ஆராய, ஒருவரை தன்னந்தனியே ஓர் அறைக்குள் பல நாட்கள் இரவு பகல் தெரியாமல் தங்கவைத்துப் பார்த்தார்கள்.” என்றார் மாமா. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விலங்கு நடத்தை அறிவியல் துறையில் இதற்கென்று ஓர் அறை உருவாக்கப்பட்டது. அதில் கடிகாரம், வானொலி, தொலைக்காட்சி எதுவும் இருக்காது. அறை வெளிச்சமும், வெப்பமும் சீராக ஒரே மாதிரி அமைக்கப்பட்டிருக்கும். அறையில் தங்குபவர், தானே சமைத்துச் சாப்பிட வசதி இருக்கும். வீடியோ பார்க்கலாம். புத்தகம் படிக்கலாம். (ஹைய்…!). தான் விரும்பும்போது தூங்கலாம். விழிக்கலாம். எப்போது என்ன செய்கிறோம் என்பது பதிவு செய்யப்படவேண்டும். அதற்காக சுவரில் வெவ்வேறு செயல்களுக்கு தலா ஒரு பட்டன் வீதம், 20 பட்டன்கள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு செயலுக்கும் அதில் ஒரு பட்டனை அழுத்தினால் பதிவாகிவிடும்.

1989ல் எம்.கே.சந்திரசேகரன் துறைத்தலைவராக இருந்தபோது, இந்தச் சோதனையில் முதலில் மாரிமுத்து என்ற ஆய்வாளர் பங்கேற்றார். அடுத்தது கீதா. அவர்தான் இதில் பங்கேற்ற முதல் பெண். “டைம் இன் எ டைம்லெஸ் என்விரோன்மெண்ட் (Time in a timeless environment) அதாவது காலம் இல்லாத சூழலில், காலம் என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன்.” என்றார் மாமா.

“கடிகாரம் இல்லாதபோது, எப்படி டைம் தெரியும்?” என்றான் பாலு. “தெரியக்கூடாது என்பதுதான் பரிசோதனையின் அடிப்படையே.” என்ற மாமா, தன் அனுபவத்தில் கீதா கண்டறிந்ததைச் சொன்னார். கீதா உண்மையில் 35 நாட்கள் உள்ளே இருந்தார். ஆனால், 22 நாட்கள் இருந்ததாகத்தான் அவர் உணர்ந்திருக்கிறார். அதிகபட்சமாக 19 மணி நேரம் தூங்கியிருக்கிறார். 34 மணி நேரம் விழித்திருக்கிறார். அவருடைய சராசரி ஒரு நாள் என்பதே 48 மணி நேரமாக இருந்திருக்கிறது. உடல் வெப்ப ஏற்றத்தாழ்வுகள் மட்டும் 24 மணி நேர சுழற்சியில் இருந்திருக்கின்றன.

“முதல் பரிசோதனை முடிந்து சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தச் சோதனை முடிவுகளைத் திரும்ப சோதிப்பதற்காக, கீதா இன்னொரு முறையும் காலமற்ற வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்!” என்று மாமா சொன்னதும், எனக்கு ரொம்ப ஆச்சரியமாகிவிட்டது. “நான் கண்டிப்பாக மதுரைப் பல்கலைக்கழகத்தில் விலங்கு நடத்தை படிக்கப் போகிறேன். நானும் அந்த அறைக்குப் போய் இருப்பேன்.” என்றேன். அடுத்து மாமா சொன்னது வருத்தமாகிவிட்டது. 2004 உடன் அந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அறை அப்படியே இருக்கிறதாம். “என்றைக்கேனும் திரும்பத் தொடங்குவார்கள்” என்றேன் நம்பிக்கையுடன்.

“இப்போது திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தின் விலங்கு நடத்தை துறையில் பேராசிரியராக இருக்கும் இம்மானுவேல் ராஜன், மதுரையில் மாணவராக இருந்தபோது இதில் பங்கேற்றிருக்கிறார்.”

“எப்படி இருந்ததாம் அந்த அனுபவம்?” என்றான் பாலு.

“முடித்து வெளியே வந்ததும், சில நாட்களுக்கு சரளமாகப் பேச வரவில்லை என்றார். வாரக்கணக்கில் யாருடனும் பேசாமல் இருந்துவிட்டதால், ஓரிரு நிமிடங்கள் சட்டென்று பேச்சு வரவில்லை என்றார்.” என்று மாமா சொன்னதும், நான் சட்டென்று கூவினேன். “அய்யோ, நமக்கு அப்படி ஆனால் தாங்கமுடியாது. நான் அந்த அறையில் இருந்தால், எனக்கு நானேவாவது பேசிக் கொண்டு இருப்பேன்.” என்றேன்.

எல்லாரும் சிரித்தார்கள்.

“உண்மையில் இதுதான் பிக் எக்ஸ்பரிமெண்ட். டி.வி. நிகழ்ச்சியை ஏன் பிக் பாஸ் என்கிறார்கள்?”என்றான் பாலு.

“அது ஒரு தனிக் கதை. அதற்கு இரண்டு மூன்று கதைகள் சொல்லவேண்டும். இப்போது நாம் 'சரண்தாஸ் திருடன்' நாடகம் பார்க்கப் போக வேண்டும். பிக் கதைகளை அப்புறம் சொல்கிறேன்” என்றார் மாமா. எல்லாரும் புறப்பட்டோம்.

வாலுபீடியா 1: சிர்காடியன் ரிதம் பற்றிய ஆய்வுகள் பயன்படும் துறைகள்: விண்வெளிப் பயணம், இரவு பகல் மாறி செய்யும் ஷிஃப்ட் வேலைகள், பல மணி நேர விமானப் பயணத்துக்குப் பின் ஏற்படும் ஜெட் லேக் எனப்படும் காலக் குழப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us