PUBLISHED ON : ஜூலை 03, 2017

நமக்கு நன்கு அறிமுகமான நிறுவனம் விப்ரோ. பெங்களூரூவின் ஐ.டி. அடையாளம். 1979ல் அந்நிய நாட்டு நிறுவனமான ஐ.பி.எம். கம்ப்யூட்டர் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவானது. இந்தியர்கள் கணினித் துறையில் கால்பதிப்பதற்கான வாய்ப்பை. அந்தச் சூழல் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, இந்திய இளைஞர்களுக்கான கனவுத் தொழிற்சாலையை நிறுவினார் அசீம் பிரேம்ஜி.
அசீம் பிரேம்ஜியின் தந்தை முகமது, மகாராஷ்டிர மாநிலத்தில் எண்ணெய், டால்டா, சோப்பு போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவர் மிக நல்ல பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, அவரை பாகிஸ்தானுக்கு அழைத்தார் முகமது அலி ஜின்னா. ஆனால், முகமது மறுத்துவிட்டார்.
மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த அசீம் பிரேம்ஜி, அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்தார். அப்போது, தந்தை இறந்துவிடவே, மும்பை திரும்பிய அசீம் பிரேம்ஜி, குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டி வந்தது. தந்தை விட்டுச் சென்ற தொழிலை ஏற்று நடத்த முன்வந்தார் அசீம்.
தந்தை செய்து வந்த தொழிலோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை. ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு புதுப் பொருளை சந்தைக்கு அறிமுகம் செய்தார். 1977-ல் நிறுவனத்தின் பெயரை 'விப்ரோ' (Wipro Limited - Western India Palm Refined Oils Limited) என்று மாற்றினார். 9 ஆண்டுகள் கடுமையான உழைப்பில், விப்ரோ வெற்றிகரமான நிறுவனமாக நிலைத்தது.
நம்பிக்கை, புதுமை ஆகியவை எப்படி சாத்தியம்? என்று ஒருமுறை இவரிடம் கேட்டபோது, 'பயிற்சிதான்' என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார். பயிற்சியுடன், மாற்றி யோசித்ததும்தான் அவரின் வளர்ச்சிக்குக் காரணம்.
சிறு வயதிலிருந்தே அசீம், தன் பலம் என்ன என்பதைத் தெரிந்து வைத்திருந்ததுடன், அதில் நம்பிக்கையும் வைத்திருந்தார். இது, துணிச்சலான முடிவெடுக்கும் உறுதியை அவருக்கு அளித்தது. ஐ.பி.எம். கம்ப்யூட்டர் நிறுவனம், சில காரணங்களால் பின்னடைவைச் சந்தித்தது. எனினும், இவர் துணிந்து அதே தொழிலில் களமிறங்கினார். இந்திய இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, புதிய தொழிலில் கால் பதித்தார்.
1980ல், கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். விற்பனை நன்றாக இருந்ததால், பல குட்டி நிறுவனங்களுடன் இணைந்து விப்ரோ வளர்ந்தது. கணினிக்கான உலகம் விரிவடைந்தது; விப்ரோவும் வெற்றி பெற்றது. அடுத்த 20 ஆண்டுகளில், பெரும்பாலான இளைஞர்களின் கனவு நிறுவனமாக விப்ரோ உருவெடுத்தது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில், அசீம் பிரேம்ஜி இணைந்தார்.
வர்த்தகத்தில் மட்டும் அவர் கவனம் செலுத்தவில்லை. கல்வி உட்பட பல்வேறு தளங்களில் நன்கொடைகளை அளித்து வருகிறார். 2001-ல் கல்விக்காக, 'அசீம் பிரேம்ஜி பௌண்டேஷன்' என்ற தனி அமைப்பை நிறுவினார். இதன்மூலம், குழந்தைகள் படிக்க நல்ல புத்தகங்களை வெளியிடுவது, அனைவருக்கும் கல்வியை உறுதி செய்தல் என, ஏராளமான நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்.
இந்தியாவிலுள்ள பல பெரு நிறுவனங்கள், நன்கொடைகள் அளிப்பதற்கான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதில், அசீம் பிரேம்ஜிக்கு மிகப்பெரும் பங்குண்டு.
