sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியைக் கேளுங்க!

/

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : ஜூலை 10, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 10, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி



எந்த ஒரு பழக்கமாக இருந்தாலும் 21 நாட்கள் தொடர்ந்து செய்தால், அது பழகிவிடும் என்கிறார்களே. அது உண்மையா? அது என்ன 21 நாட்கள் கணக்கு?

கே. கீர்த்தி, 12ம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, சென்னை
.

'சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்' என்பதுபோல, பெரும்பாலும் பல திறன்கள் பழகப்பழக நமக்குப் பழக்கமாகிவிடும். சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, சமையல் செய்வது போன்ற பல கலைகள், இந்தப் பழக்கத்தின் காரணமாகவே நம்மால் திறம்படச் செய்ய முடிகிறது. பாடப்புத்தகத்தைத் தவிர தினமும் வேறு புத்தகங்களைப் படிக்கும் பழக்கம், உடற்பயிற்சி போன்ற பல திறன்களையும் இவ்வாறே நாம் வளர்த்துக்கொள்ள முடியும். 21 நாட்கள் கணக்கு என்பது, அப்படியே மெய் அல்ல; வெறும் பேச்சுக்காகச் சொல்வதுதான்.

நீண்டநேரம் புத்தகத்தைப் படிக்கும்போது, கண்பார்வை திடீரென்று மங்கலாகிறதே ஏன்?

மு.நாகூர், ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.


சாதாரணமாகக் கண்விழி, ஒரு கண்ணில் நடுவே இருந்தால், மற்றதிலும் நடுவே இருக்கும்; ஒரு கண்ணில் வலது மூலையில் இருந்தால், மற்றதிலும் வலது மூலையில் இருக்கும். ஆனால் அருகே புத்தகத்தை வைத்துப் படிக்கும்போது, அதில் பார்வை குவிவதற்காக இரண்டு கண்களும் சற்றே ஒன்றின் அருகே ஒன்று வந்து நிலைகொள்ளும். இதன் தொடர்ச்சியாகக் கண்ணில் அயர்ச்சி ஏற்படும். கூர்மையான தசை (ciliary muscle) எனப்படும், இழை போன்ற தசை செயல்பட்டுத்தான் பார்வை குவிதல் ஏற்படுகிறது. சிலருக்கு இந்தத் தசை தளர்வு இருக்கலாம். அப்போது சற்று நேரம் படித்த பின்னர், காட்சிக் குவிப்பில் பழுது ஏற்படும். எனவே, பார்வை மங்கலடையும். தவிர, படிக்கும்போது, கண் இமைத்தல் வீதம் குறைகிறது. எனவே கண் உலர்ந்து போகலாம். உலர்ந்த கண்ணால் கிடைக்கும் காட்சி, மங்கலாக இருக்கும். இதுபோன்ற பல காரணங்களால், புத்தகம் படிக்கும்போது சிலருக்குக் கண்பார்வை மங்கலாகிறது.

மரபணுக்கள் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு தொடரக் காரணம் என்ன? அதை மாற்றியமைக்க முடியுமா?

எஸ்.ஐஸ்வர்யா, 12ம் வகுப்பு, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.


விலங்குகளைப் பொறுத்தவரை, தாயின் கருமுட்டையுடன் தந்தையின் விந்து சேர்ந்து, கரு உருவாகி அதிலிருந்து குழந்தை பிறக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும், ஒரு ஜோடி மரபணுக்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். தாயின் கருமுட்டையும், தந்தையின் விந்தும் இந்த ஜோடியில் ஒன்றை மட்டுமே கொண்டிருக்கும். எனவே, இரண்டும் சேரும்போது ஜோடியாகிறது; அதுவே கருத்தரித்தல்.

நமது மரபணுவில் சரிபாதி தந்தையிடமிருந்தும், மறுபாதி தாயிடமிருந்தும் பெறப்பட்டது. எனவே, தாய், தந்தையின் மரபணு சாயல் நமக்கும் தொடரும் என்பதில் வியப்பேதும் இல்லை. அதுபோல, நமது இரண்டு தாத்தா, இரண்டு பாட்டி ஆகிய நால்வரிடமிருந்தும் தலா

25 சதவீத மரபணுவைக் கொண்டிருக்கிறோம். நமது 12.5 சதவீத மரபணு, தலா எட்டு கொள்ளுத்தாத்தா, பாட்டியிடமிருந்து வந்தது. இவ்வாறு நமது தலைமுறையின் மரபணு, நம்முள் தொடர்கிறது. 'ஜெனடிக்ஸ்' எனப்படும் மரபணு தொழில்நுட்பம், சிறிய அளவில் மரபணுவை மாற்றியமைக்க முயற்சி செய்கிறது. இருந்தாலும், மரபணுவை மாற்றியமைப்பதற்கான இன்றைய தொழில்நுட்ப அறிவு மிகவும் சொற்பமே.

முகம் பார்க்கும் கண்ணாடியில் இடது வலதாகவும், வலது இடதாகவும் மாறித் தெரிகிறது. தலைகீழாக ஏன் தெரிவதில்லை. இப்படித்தான் விண்வெளியிலும் தெரியுமா?

யூ.கே. கண்ணதாசன், 8ம் வகுப்பு, ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி, சென்னை.


பூமியில் மட்டுமல்ல; எல்லா இடத்திலும் இப்படித்தான் தெரியும். இடது, வலமாக மட்டுமே உருவமாற்றம் மாறியிருப்பதாகக் காட்சிப்படும். உண்மையில் என்ன நடக்கிறது எனில், முகம் பார்க்கும் கண்ணாடி முன்னே நீங்கள் நிற்கும்போது, உங்களது வலது தோள்பட்டையிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றை, நேராகக் கண்ணாடியின் இடதுபுறம் சென்று படுகிறது. இடது தோள்பட்டையிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றை, கண்ணாடியின் வலதுபுறம் சென்று படுகிறது. ஆனால், உங்கள் தலைப் பகுதியிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றை, கண்ணாடியின் மேலேயும், கால் புறம் வெளிப்படும் ஒளிக்கற்றை கீழ்ப்புறமும் சென்று படுகிறது.

கண்ணாடியில் பட்டுப் பிரதிபலிக்கும் இந்த ஒளிக்கற்றைகளே, நம்முடைய பிரதிபலிப்பின் பிம்பமாகத் தென்படுகிறது. எனவே, கண்ணாடியின் வலப்புறத்திலிருந்து நமது இடப்புற உடல் பகுதியின் பிம்பமும், இடப்புறத்திலிருந்து உடலின் வலப்புற பிம்பமும் வெளிப்படுகிறது.

கண்ணாடியின் தலைப்பகுதியிலிருந்து நமது தலையும், கால் பகுதியிலிருந்து உடலின் கீழ்ப்பாகமும் பிரதிபலிக்கிறது. எனவே, கண்ணாடி பிம்பம் இடது வலதாகவும், வலது இடதாகவும் மாறியுள்ளது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

இதை எளிமையாகப் புரிந்துகொள்ள, இரண்டு கையையும் நீட்டியபடி நில்லுங்கள். உங்களுக்கு எதிரே, உங்களைப் பார்த்தபடி அதே போல இரண்டு கைகளை நீட்டியவாறு உங்கள் நண்பனை நிற்கச் சொல்லுங்கள். அவரின் இடதுகை, உங்களின் வலதுகைக்கு நேராக இருக்கும். ஆனால் தலையும் காலும் சரி நேராகத்தான் இருக்கிறது இல்லையா? இவ்வாறுதான் கண்ணாடியிலும் பிம்பம் இடம் -வலதாகத் தோன்றுகிறது.






      Dinamalar
      Follow us